நாள் மலர்கள் // நூல் அறிமுகம்

 



 தொ. பரமசிவனின், பண்பாட்டு கட்டுரைகள், நேர்காணங்கள் போன்றவற்றை படித்திருந்தாலும் சமூக வலைத்தளங்களில் அவற்றை பற்றி எழுதியதில்லை. பல நேரங்களில் அவரது பண்பாட்டு  கட்டுரைகளை வாசிக்கும்போது ஏற்படும் பூரிப்பு அதே கருத்தை பகுத்தறிவு பார்வையில் இருந்து அணுகும்போது அடங்கிவிடும். சிறு தெய்வங்கள், கலாச்சார பழக்கவழக்கங்களுக்கு அவர் கூறும் கரணங்கள், கோவில் பற்றிய கதையாடல்கள் போன்றவை அத்தகைய அமைப்புகளுக்கு நியாயம் கற்பித்து நிலைபெற செய்யும் முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. மேலும் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மீதும் அதனால் ஏற்படும் மாற்றங்களை எதிர்மறையாக அணுகும் தொ.பவின் போக்கு எனக்கு உவப்பானதாக அமைந்ததில்லை. 


 உண்மையில் பெரியாரின் நவீன பகுத்தறிவு மரபிலிருந்து  இத்தகைய பண்பாடு சார்ந்த கட்டுரைகளை வாசித்தோமென்றால் அறிவு அதனை நிராகரிக்கவே செய்யும். சிறுதெய்வங்களை பெரியார் சீண்டவில்லை என்பதற்கு அதனை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமில்லை. தொ.ப வின் பல கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளும் படி அமைதிருப்பவை. அதனை மறுப்பதற்கில்லை. அப்படியான பல கட்டுரைகளை கொண்ட தொகுப்பு தான் ‘நாள் மலர்கள்’. 2001இல் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு இந்நூல் பாடநூலாக இருந்தது என்கிறார் இந்நூலின் பதிப்பாசிரியர் பெருமாள்முருகன். 


நான் தமிழ் இலக்கிய மாணவனல்ல. ஆனால் ஆர்வத்தின் காரணமாக ஆமை வேகத்தில் தமிழ் இலக்கியத்தை பயின்று வருகிறேன். (இப்போதைக்கு நவீன இலக்கியம் மட்டும்)  இதிலுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் தகவல் களஞ்சியங்கள். ஒரு தகவலை சுவாரசியமாக அதே சமயத்தில் எளிமையான மொழி நடையில் மாணவர்களுக்கும் கடத்தவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளாகவே இவை தென்படுகின்றன. 


முதல் கட்டுரை கல்வெட்டுகள் பற்றியது கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அவற்றை அழியாமல் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை பற்றியும் பேசுகிறது இக்கட்டுரை.  


இராமாயணம் எழுதிய கம்பர் தனது பாத்திரங்களை எல்லாம் எப்படி அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு பாத்திரத்தின் அறிமுகத்திற்கும் அவர் காட்டிய வேறுபாடுகள் எத்தகையவை என்பதை எல்லாம் பேசும் கட்டுரை ‘கம்பனின் அறிமுகம்’. 


மக்கள் காப்பியம் எனப்படும் சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் ஒரு தேர்ந்த அரசியல் அரசியல்வாதி என்கிறார் தொ ப. அதற்கு அவர் சொல்லும் காரணங்களும் ஏற்றுக்கொள்ளும் படியாக தான் இருந்தன. இந்நூலில் இடம்பெற்ற கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை என இதனை சொல்வேன். 


நவீன தமிழ் இலக்கியம் பாரதியில் இருந்தே தொடங்குவதாக வரையறை செய்யும் தொ.ப. கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, இதழியல்  என பரந்துபட்டு  இயங்கிய பாரதி 'நேற்றை' விட 'நாளை'யில் அதிக கவனம் செலுத்தியதாக அவதானிக்கிறார். 


அடுத்ததாக அறிவியல் தமிழ் என்ற கட்டுரை பல புதிய வரலாற்று தரவுகளை நமக்களிக்கிறது. 1999யில்  தமிழநாடு அரசு(திமுக) ஏற்பாடு செய்த "இணையம் 99" என்ற நிகழ்ச்சியை அறிவியல் தமிழ் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக குறிப்பிடுகிறார். காரணம் அந்நிகழ்ச்சி பல நாட்டு அறிஞர்களையும் சென்னையில் அழைத்து நடத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. கணிப்பொறி  தமிழ் விசைப்பலகைகளும், தமிழ் மொழியியல் மென்பொருள்களும் தரப்படுத்த அம்மாநாடு உதவியதாக குறிப்பிடுகிறார். இதற்கடுத்து சிங்கப்பூரில் தமிழ் இணையம் - 2000  என்ற மாநாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியையும் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். 


‘பக்தியும் பாட்டும்’ என்ற கட்டுரை பல்வேறு சமயங்களை சேர்ந்த பாடல்களின் மேற்கோளோடு எழுதுதப்பட்டு இருக்கிறது. இக்கட்டுரையில் சமயங்கள் அனைத்தும் இயற்கையினை நேசிக்கும் பண்பினை கொண்டிருந்ததாக சொல்கிறார். 


அச்சு பண்பாட்டின் வருகையும் அது தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும் மிக முக்கியமான ஒன்று. “The Province Of The Book:

Scholars,Scribes and Scribblers in Colonial Tamilnadu” என்ற ஆ.இரா. வேங்கடாசலபதியின் ஆய்வு நூல் அச்சு பண்பாடு குறித்தான ஆழமான பார்வையை வாசகருக்கு கடத்தும். தமிழ் இதழியல் என்ற கட்டுரை இந்நூலோடு சேர்ந்து வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் இதழியல் ஆரம்பத்தில் வளர்ந்த விதத்தையும் இங்குள்ள அரசியல் இயக்கங்கள் அவற்றை பயன்படுத்திய விதத்தையும் பின்னர் அது எப்படி பொருளாதார நோக்கங்களை முதன்மையாக கொண்டு கருத்தளவில் நலிவடைந்தது என்பதை இக்கட்டுரையில் பேசுகிறார். இறுதியில் சிற்றிதழ்களின் வருகையை தமிழ் இதழியலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகவே பார்ப்பதாக கூறி முடித்துள்ளார். 


‘அழகர் கோவில்’ பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியவர் மதுரை மாநகர் பற்றி எழுதாமல் விட்டால் தான் ஆச்சரியம். ஆறுகளாலும் மலை குன்றுகளாலும் சூழப்பட்டுள்ள மதுரை மாநகரை சிலாகித்து எழுதியுள்ள போக்கு, எனக்கும் அந்த நகரத்துக்குமான 4  மாத தொடர்பை மீண்டும் ஒருமுறை அசைபோட வைத்து. இன்றைக்கும் மதுரை தான் தமிழ்நாட்டின்/ தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாக விளங்குவதாக இக்கட்டுரை முடிகிறது. 


தமிழ் உரைநடை வளர்ந்த விதத்தையும் அது எப்படி மொழியியலிலும் எழுத்துத்துறையிலும் மிக பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது என்பதை பற்றி சுருக்கமாக பேசும் ஒரு கட்டுரையும் இத்தொகுப்பில் அடங்கும். 


இலக்கியத்திற்கும் சிற்பத்திருக்கும் இருக்கும் தொடர்பினை நடராஜர் சிலையை வைத்தும் திருநாவுக்கரசரின் பாடலை வைத்து முதலாம் மாமன்னன் ராஜராஜன் அச்சிலையினை ‘ஆடல் வல்லான்’ என்று அழைத்ததை வைத்தும் சுருக்கமாக கூறிவிட்டு. இதை எல்லாம் விரிவாக அறிந்துகொள்ள ஆனந்த குமாரசாமி எழுதிய The Dance of Shiva நூலை வாசிக்கலாம் என்று  குறிப்பிடும்போது ஒரு கட்டுரையின் ஆழம் குறித்து அடங்காத வியப்பு தான் ஏற்படுகிறது. 


இருப்பதில்லேயே கடினமானது ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு கவிதைகளை மொழிபெயர்ப்பது தான். அப்படி கவிதை மொழிபெயர்ப்புகளுக்கு இடையே இருக்கும் கால அளவிலான வேறுபாடுகளை பற்றி கவிதை மொழிபெயர்ப்பு கட்டுரையில் குறிப்பிடுகிறார். 


இந்த தொகுப்பின் இறுதி கட்டுரையாக அகராதி கலை என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. நவீன சொல் அகராதிகள் வருவதற்கு  முன்பே தமிழ் மொழியில் ரேவண சித்தர் எழுதிய ‘அகராதி நிகண்டு’ நூலை குறிப்பிடுகிறார். மேலும் தொல்காப்பியர் காலத்திலேயே அகராதியில் இருப்பதை போல் சொல்லுக்கு சொல் பொருள் குறிப்பிடும் முறை தொடங்கிவிட்டதாக கூறும் தொ.ப அதற்கு பின்னான அகராதிகள் வரலாற்றையும் சுருக்கமான எழுதியுள்ளார். 


தமிழ் இலக்கியத்தில் பெரிதாக பரிசியமில்லாத எனக்கு இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்டுரைகளும் ஏதோ ஒரு வகையில் சுவாரசியமானவை. பல முக்கிய தகவல்களை கொண்டுள்ளவை. ஆழமான அதே வேளையில் செறிவான கருத்துக்களை கொண்டவை. தமிழ் இலக்கிய பாடத்திட்டத்தில் இந்நூல் இடம்பெற்றிருந்தது என்ற செய்தியே ஒரு திருப்தியை ஏற்படுத்துகிறது. 


தமிழ் இலக்கிய மாணவர்களும், ஆர்வலர்களும், தொ.பரமசிவன் ரசிகர்களும் அவசியம் வாசிக்கலாம்.  ‘விடுபூக்களை’ விட ‘நாள் மலர்கள்’ சிறந்த தொகுப்பு தான். 








Comments