M. S. Subbulakshmi The Definitive Biography - நூல் அறிமுகம்

     





மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி, தமிழ்நாட்டில் இந்த குரல் ஒலிக்காத காலை பொழுதுகள் மிக குறைவு எனலாம். ஆத்திகர்கள் வீட்டில் ஒலிக்கும் சுப்ரபாதம் பெரும்பாலும் எம்.எஸ் உடையதாக தான் இருக்கும்.  கல்கி கிருஷ்ணமூர்த்தி வரிகளில் “காற்றினிலே வரும் கீதம்” பாடலை எம்.எஸ் பாடும்போது ஏற்படும் அனுபவம்  சுகமானது. ராஜகோபாலச்சரி எழுதிய “குறை ஒன்றும் இல்லை” பாடலை எம்.எஸ் குரலில் கேட்டு உருகாத மனங்கள் இங்கில்லை. பாரதிரியாரின் வரிகளில் ‘நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்' பாடலாக இருக்கட்டும் அல்லது 'வெள்ளை தாமரை' பாடலாக இருக்கட்டும் எம்.எஸ் குரலில் கேட்க எல்லாமே இனிமையானவை தான். 


சமீபத்தில் T.J.S George  எழுதிய The Dismantling of India  நூலை படித்து கொண்டிருந்தேன். அப்போது அவரது பிற நூல்களையும் தேடினேன், அச்சமயத்த்தில் கிடைத்தது தான் எம்.எஸ் பற்றிய M.S. Subbulakshmi: The Definitive Biography புத்தகம்.  Nivedita Louis அக்காவும் படிக்கும்படி பரிந்துரை செய்திருந்தார்.  கிடைத்த ஒடனே படிக்க தொடங்கி விடவில்லை. சில காலம் கர்நாடக சங்கீதம் கேட்டேன், இப்போதும் கேட்டு கொண்டிருக்கிறேன். அதில்  ஏதோ பரவசம் கிடைக்கிறது. மனசுக்கு நிம்மதி ஏற்படுத்தும் செயல்களில் கர்நாடக இசை கேட்பதும் ஒன்றாக ஆகி விட்டது. 


கர்நாடக சங்கீதம் கர்நாடக பகுதியை மட்டும்  சேர்ந்ததல்ல, அது நான்கு தென்னிந்திய மாநிலங்களுடனும் நெருங்கிய தொடர்புடைய ஒன்று. கர்னாடிக் என்பது காலனிய தாக்கத்தினால் உருவான வார்த்தை போர்துகீசியர்களால் முதலில் பயன்படுத்தப்பட்டு பின்னர் பிரித்தானியர்களால் இரவலாக வாங்கி பயன்படுத்த பட்டு வருகிறது. Canara, Canarese என்பது கடலோர கர்நாடக பகுதியை குறிக்கும் ஒன்றாகவும், மலபார் பகுதியை உள்ளடக்கிய மலையாளம் பேசும் மக்களை குறிக்கும் ஒன்றாகவும் இருந்த்துள்ளது. விஜயநகர பேரரசு கர்நாடக பகுதியை ஆட்சியை செய்த சமயத்தில் அது தெலங்கானா பகுதியையும்ம் உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது . பின்னர் விநயநகர பேரரசின் சில  பகுதிகளை கைப்பற்றிய  ஆற்காடு நவாப்  தன்னை Nawab of Carnatic என்றே அழைத்துக்கொள்ள விரும்பி இருப்பதால் அது தமிழ்நாட்டையும் இணைக்கும் ஒன்றாக இருக்கிறதென்கிறார் ஜார்ஜ். இதன் மூலம் Carnatic என்ற வார்த்தை புவியியல் சார்ந்து சுருக்கி பார்க்கப்படவேண்டிய அவசியமில்லை  என்றும் அதனை தென்னிந்தியாவை குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார் இந்நூலாசிரியர். 


மேலும் புரந்தர தாசர், வெங்கடமாகி, அன்னமாச்சார்யா, அருணகிரிநாதர் போன்றோரையும். கர்நாடக சங்கீதத்தின் Trinity என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஷ்யாம சாஸ்திரி ஆகியோரையும் அவர்களது மொழி பின்புலங்களையும் வைத்து கர்நாடக சங்கீதத்தை தென்னிந்திய மாநிலங்களுக்கு உரித்தான ஒன்றாக நிறுவுகிறார் ஜார்ஜ். 


இந்த கதைகளுக்கு பிறகே தொடங்குகிறது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரலாறு. மதுரையில் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர் எம்.எஸ். அதனாலேயே தனது தாயாரது பெயரான சண்முகவடிவு என்ற பெயரை முதற் பெயராக பயன்படுத்துகிறார்.  ஒரு தங்கை ஒரு தம்பி. தாய் வீணை வாசிப்பவர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் ‘தேவதாசி’ என்ற பெயர் நீக்கப்பட்டு  ‘இசை வெள்ளாளர்’ என்ற பொது பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. . ஆரம்பகாலகட்டங்களில் தனது தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவராகவும் பின்னாட்களில் தனது கணவரான சதாசிவத்தின் திட்டங்களுக்கு உடன்படும் ஒருவராகவும் இருந்திருக்கிறார் எம்.எஸ். இசை மேல் இருந்த ஆர்வம் சிறுவயது முதலே பிற விஷயங்களில் பற்று கொள்வதை தடுத்துவிட்டது. அந்த பற்றற்ற நிலை தான் இத்தகைய நிபந்தனையற்ற உடன்படல்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது. 


10 வயதில் தொடங்கிய இசைப்பயணம் பல பத்தாண்டுகள் தொடர்ந்தாலும். 1940கள் முதல் 1980கள் வரை கர்நாடக இசை உலகை தன் பிடியில் வைத்திருந்தார் எம்.எஸ் என்று தான் சொல்ல வேண்டும். பேசும் படங்களின் ஆரம்ப காலகட்டமும் எம்.எஸ்ன் சினிமா அறிமுகமும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டிருந்தது. அதிக பாடல் காட்சிகளை கொண்ட திரைப்படங்கள் அந்த சமயத்தில் அதிகளவில் வெளிவர தொடங்கின. 


அப்போது தான் சேவா சதனம், சகுந்தலை, சாவித்திரி , மீரா  போன்ற படங்களில் நடித்தார் எம்.எஸ். இதில் இரண்டு படங்கள் பின்னுள்ள வரலாறுகள் சுவாரசியமானவை. சாவித்திரி திரைப்படத்தில் நாரதர் வேடமிட்டது நடித்திருப்பார் எம்.எஸ். 1941 இல் வெளியான அந்த திரைப்படத்துக்காக ஒரு லட்சம் ருபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார். ஆனந்த விகடனில் பணியாற்றி கொண்டிருந்த சதாசிவமும், கிருஷ்ணமூர்த்தியும் வேலையை விட்டிருந்த சமயம் அது. இந்த சமயத்தில் எம்.எஸ் வாங்கிய சம்பள தொகையை வைத்து தான் ‘கல்கி’ இதழ் தொடங்க பட்டிருக்கிறது. ஆசிரியராக கல்கி கிருஷ்ணமூர்த்தியும், மேலாளராக சதாசிவமும் செயலாற்றி வந்தனர்.  


மீரா திரைப்படம் எம் எஸ்க்கு  தேடி தந்த முகமும் புகழும் ஈடு இணையற்றது. ஒரு வகையிலான ஆத்மீகமான ஆளுமையை எம்.எஸ்க்கு ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு பின்னர் எம்.எஸ் இசையோடு மிகவும் ஒன்றிவிட்டார். இதுவே அவரது கடைசி திரைப்படமாக அமைந்தது. நிச்சயமாக இந்த முடிவில் 

சதாசிவத்தின் பங்கும் இருக்க தான் செய்தது. 



 திரைப்படங்கள் மூலம் தான் எம்.எஸ்க்கு சதாசிவத்தின் அறிமுகமும் கிடைத்தது. சதாசிவம் ஏற்கனவே திருமணவானவர், பார்ப்பனர். மனைவி உடல்நல குறைவினால் இறந்துபோனதால் எம்.எஸ் உடன் இரண்டாம் திருமணம் நடந்தது. முதல் மனைவிக்கு இரண்டு மகள்கள், இருவரையும் தன் மகள்கள் போலவே மிக பாசமாக வளர்த்துள்ளார் எம்.எஸ். 


பார்ப்பன கணவர் என்பதால் எம்.எஸ் தன்னையும் சமஸ்கிருதமயமாக்களுக்கும், ப்ராமணமயமாக்களுக்கும் உட்படுத்துகிறார். இவற்றினூடே எம்.எஸ் இன் இசை திறமை அவருக்கு வழங்கி இருந்த சமூக அந்தஸ்து கூர்மை அடைகிறது. பல பார்ப்பன பெண்கள் எம்.எஸ்இன்  ஆளுமையால் ஈர்க்கப்பட்டு அவரோடு நட்பு பாராட்டவும் முன்வருகிறார்கள். சதாசிவம் ஒரு தேசியவாதி, தொடக்க காலங்களில் சுப்ரமணிய சிவாவுடனும் பின்னாட்களில் ராஜாஜியிடமும் மிக நெருக்கமான உறவை பாராட்டியவர். தனது இரண்டாம் திருமணம் பற்றிய ஆலோசனையை கூட ராஜாஜியுடன் தான் மேற்கொண்டதாக குறிப்பிடுகிறார் சதாசிவம். இத்தகைய அரசியல் தொடர்புகளும் எம்.எஸ் இன் இசை வளர்ச்சிக்கு உதவியது. காந்தியின் மனசாட்சி என்று அழைக்கப்பட்ட ராஜாஜியின் நட்பு பல தேசியவாத நிகழ்ச்சிகளில் படும் வாய்ப்பினை எம்.எஸ்க்கு ஏற்படுத்தி கொடுத்தது. நேரு எம்.எஸ் பற்றி சொல்லும்போது “Who am I, a mere Prime Minister before a Queen, a Queen of Music”  என்றிருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட 'nightingale of india' என்ற பட்டத்திற்கு உரித்தானவர் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தான் என்றிருக்கிறார் சரோஜினி நாயுடு. இதை தொடர்ந்து ஐநா, நேருவின் இறுதி சடங்கு, அமெரிக்க, ஐரோப்பா போன்ற முக்கிய நிகழ்வுகளின் போதும் முக்கிய இடங்களிலும் பாடும் வாய்ப்பு எம்.எஸ்க்கு கிடைத்திருக்கிறது. தென்னிந்தியாவின் இசை குரல் உலகெங்கும் ஒலித்தது. 



இதன் பின்னர் ஆன்மீகமும் தெய்வீகமும் நிறைந்த இசை கச்சேரிகளையே எம்.எஸ் நிகழ்த்தினார். ஒவ்வொரு  நிகழ்வுக்கு முன்பும் அவர் மேற்கொள்ளும் பயிற்சியும் மெனக்கெடல்களும் துறைசார் நிபுணத்துவத்தை அடைய விரும்புவோர்க்கு பால பாடம். 


மதுரையில் சதாசிவம் வாங்கி அமைத்த கல்கி கார்டன்ஸ் அங்கு எம் எஸ், ராஜாஜி ஆகியோருக்கு இருந்த நினைவுகள், ஜி.என்.பாலசுப்ரமணியமும் எம்.எஸ்ம் இணைந்து நடித்த திரைப்படமான ‘சகுந்தலை’யில் அவர்கள் இருவருக்கிடையில் மலர்ந்த காதலும் அப்போது இருவரும் பரிமாறிக்கொண்ட கடிதங்களும் இறுதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது காதலை இழந்து தான் இசை வாழ்க்கையில் எம்.எஸ் வெற்றி அடைந்திருக்கிறார் என்று நினைக்கும்போது வருத்தம் எழவே செய்கிறது. 


இந்நூல் கர்நாடக சங்கீதம் குறித்தும் எம்.எஸ்ன் வாழ்கை குறித்தும் சுவாரசியமான பல தகவல்களை நமக்களிக்கிறது.  The Caravan(Oct 2015) இதழில் டி.எம். கிருஷ்ணா எழுதி இருக்கும் “MS UnderstoodThe myths and misconceptions around MS Subbulakshmi, India’s most acclaimed musician” கட்டுரையும் இந்நூலோடு சேர்த்து படிக்கவேண்டிய ஒன்று. வாய்ப்பிருப்பிப்போர் அவசியம் வாசிக்கவும் 





Comments