The Trauma of Caste

   


சர்வதேச அளவில் சாதி பற்றிய உரையாடல்களும் புரிதல்களும் சாதிக்கு  எதிரான குரல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் Isabel Wilkerson ‘Caste The Origin of our Discontents’ என்றொரு நூலை எழுதி இருந்தார். சாதி பற்றிய உரையாடலை இந்நூல் நிறவெறியோடு ஒப்பிட்டு வேறொரு தளத்திற்கு இட்டு சென்றது. Oxford india Short Introduction seriesல் Surinder S. Jodhkaவின் சாதி குறித்தான  நூலும் இந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம். இந்த நூல்கள் எல்லாம் சாதி பற்றிய அறிமுகத்தை அல்லது சர்வதேச அளவில் நடந்த ஒடுக்குமுறைகளுடனான ஒரு ஒப்பீட்டை ஏற்படுத்தும் அளவிலேயே அமைந்திருக்கும். Suraj Yengdeவின் ‘Caste Matters’ நூலும் சாதியின் சிக்கலை பேசும் ஒன்று தான். ஆனால் சாதியின்  சிக்கலையும்  அது அகம் சார்ந்து ஏற்படுத்தும்  வடுக்களையும் அதை  எதிர்கொண்டு அதிலிருந்து விடுபடுவதற்கான  வழிமுறைகளையும் தலித் பெண்ணிய பார்வையில் இருந்து  பேசும் நூல் தான் தேன்மொழி சௌந்தரராஜன் எழுதி இருக்கும் ‘The Trauma of Caste: A Dalit Feminist Meditation on Survivorship, Healing, and Abolition ’. 


உளவியல் ரீதியாக சாதி ஏற்படுத்தும் வடு(Trauma ) என்பது மிக மோசமான விளைவுகளை ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தவல்லது. அதுவும் ஒடுக்கப்பட்ட பின்புலத்தில் இருந்து வரும் ஒருவன்/வள்  தலைமுறை தலைமுறையாக சாதியால் வஞ்சிக்கப்படுகிறான்/ள். அவனுக்கு முந்தைய தலைமுறையில் வடுவையும் சேர்த்து அவன்/ள்  சுமக்க வேண்டியுள்ளது இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவன்/ள் சுதந்திரத்தை தேடி அலையவேண்டியுள்ளது. ஆன்மீக(Spiritual ) ரிதியாக ஒடுக்குமுறைக்கு(caste) உள்ளாக்கப்பட்ட மனிதர்களுக்கு அதே ஆன்மீக ரீதியிலான தீர்வுகள் நிம்மதியை தரவலல்லது என்கிறார் இந்நூல் ஆசிரியர். அயோத்திதாசர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பௌத்தம் சார்ந்த ஆன்மீக தேடலும் மதமாற்றமும் இதற்கொரு சான்று. 


இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை பிரியோகங்கள் சாதி சார்ந்த உரையாடலில் முக்கியமானவை, Caste System  என்பதற்கு பதில் Caste Apartheid என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை போலவே சாதி ஒழிப்புக்கு இணையான ஆங்கில வார்த்தையாக Caste Abolition என்ற் வார்த்தையை பயன்படுத்துகிறார். சாதியை மொத்தமாக ஒழிக்கவேண்டும் என்பது தான் இதன் அர்த்தம். Annihilation என்ற சொல்லை விட Abolition என்ற சொல் பொருந்தி போவதாகவே தெரிகிறது. 


இவை எல்லாம் இந்நூல் ஆசிரியரின் Afro-அமெரிக்க விடுதலை இயக்கங்களின் தொடர்பாலும் அவற்றில் இருந்து பெற்ற படிப்பினையாலும் பயன்படுத்த பட்ட  ஒன்று என்றே தெரிகிறது. மேலும் நிறவெறியோடு சாதியை ஒப்பிட்டு நோக்குவது மகாத்மா புலே காலம் தொட்டு இருந்துவரும் மரபு தான். இதுபோன்ற சர்வதேச அளவிலான ஒடுக்குமுறைகளோடு சாதிய ஒடுக்குமுறைகளை ஒப்பிட்டு நோக்குவது ஒடுக்குமுறையின் அளவீடுகளை அறிய உதவும். மேலும் சாதி போன்ற ஒரு மாபெரும் மக்கள் திரள் சந்திக்கும் வடுவை(Trauma) சர்வதேச அளவில் முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்த இதுபோன்ற வார்த்தை பிரியோகங்கள் நிச்சயம் உதவும் எனலாம். 

‘Whitewashing Caste - How Indian immigrants used religion and caste to naturalise as White in the US’ என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை 2023  பிப்ரவரி மாத Caravan இதழில் வெளியாகி இருந்தது. இந்த சிக்கல் இந்நூலிலும் விரிவாக பேசப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான சட்டங்கள் வரும் முன்பு இந்தியாவில் இருந்து சென்ற இந்தியர்கள் தங்களை எப்படி எல்லாம் வெள்ளையர்களாக காட்டிக்கொள்ள முயன்றார்கள் என்பதை இந்நூலின் ஒரு பகுதியில் பேசுகிறார். பார்ப்பனர்கள் தங்களை ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி வெள்ளை இனத்தை சேர்தவராக தங்களை முன்னிறுத்தி கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் பலருக்கு இது சாத்தியப்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்தியர்கள் அனைவரும் இரண்டாம்தர குடிகள் என்று முடிவானது. நிறவெறிக்கு எதிரான சட்டம் இயற்றப்படும் வரை இந்த நிலையே தொடர்ந்தது. இதன் பின்னர் அங்கும் சாதி சார்ந்த பாகுபாடுகள் தெற்காசியர்களிடையே அதிகளவில் பின்பற்றப்பட்டது. பார்ப்பனர்களின் அதிகளவிலான வெளிநாட்டு இடப்பெயர்வு இந்த போக்குக்கு வினையூக்கியாக அமைந்தது. சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உச்ச பொறுப்புகளில் அமர்ந்துகொண்டு மிக நுணுக்கமான சாதியத்தை பார்ப்பனர்கள் இன்றுவரை கடைபிடித்து வருவதையும் அதற்கு எதிராக அமெரிக்காவில் இன்றைக்கு பல போராட்டங்கள் நடப்பதையும் விளக்கமாக நமக்கு பகிர்கிறார் தேன்மொழி சௌந்தரராஜன். 


இந்நூல் ஒரு  உரையாடலை வாசகருடன் நிகழ்த்துகிறது, அந்த உரையாடல் தலித் பெண்ணியர் ஒருவரது பார்வையில் இருந்து வெளிப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த உரையாடல் யாரையும் அந்நியப்படுத்தவில்லை. ஒடுக்குபவரும் ஒடுக்கப்படுபவரும் சேர்த்து தான் சாதியை முற்றிலுமாக அழித்தொழிக்கமுடியும் என்ற இவரது பார்வை கவனிக்கத்தக்கது. இது எந்த தனி நபரையும் எதிராக நிறுத்தாமல் சாதியை அதன் மூலம் ஏற்ப்படும் கொடுமைகளை எதிராக நிறுத்துகிறது. Pedagogy of the oppressed என்ற கோட்பாட்டினை இந்நூல் உள்வாங்கியே இருக்கிறது. 


தெற்காசிய மதங்களிலும் தெற்காசியர்கள் செல்லும் இடங்களிலும் சாதி எப்படி ஊடுருவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மிக தெளிவாகவே பேசியுள்ளார் இந்நூலில். தன்னை ஒரு பௌத்தராக முன்னிறுத்திக்கொண்டாலும் இலங்கையில் சிங்கள பௌத்த இனவாதத்தை விமர்சிக்கவே செய்கிறார். சாதியும் இனமும் மனிதாபிமானமற்றவர்களாக (Dehumanized)மனிதர்களை மாற்றியுள்ளது. இவரை மனிதர்களை தனிமைப்படுத்தவே முயல்கிறது. இதற்கு எதிராக மனிதாபிமானம்(Humanity) நிறைந்த ஒரு கூட்டமைப்பை ஒற்றுமையை போதிக்கும் ஒன்றாக நாம் அனைவரும் சேர்ந்து நிறுவவேண்டும் என்கிறார். அதற்கு அவரவர் சந்தித்த ஒடுக்குமுறைகளை, சமூகத்தில் தங்களது சாதியின் நிலையை, அது பற்றிய புரிதலை முந்தை தலைமுறை அனுபவித்த கொடுமைகளை பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார். இதை எல்லாம் உணர்ந்த பிறகு சாதிக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்கி கொண்டு அதை எதிர்கொள்ளும் உத்வேகத்தை பெற்று அதற்கெதிரான செயல்பாடுகளில் இறங்கவேண்டும் என்பது இவரது செயல்திட்டமாக இருக்கிறது. 


சாதி போன்ற ஒரு ஆன்மீக(Spiritual) அதே நேரத்தில் பொருளியல்(Material) ஒடுக்குமுறையை எதிர்கொள்ள ஆன்மீக/அறிவியல் தேடலை முன்வைக்கிறார். அதற்கு நாத்தீகம், பௌத்தம், கிறித்துவம் போன்ற ஆன்மீக/ அறிவியல் நிம்மதி தரும் மதங்களை இவர் அகம் சார்ந்த தீர்வாக முன்வைக்கிறார். சாதி போன்ற மனிதமற்ற ஒரு வடுவில் இருந்து விடுவித்து கொள்ளை மனிதம் நிறைந்த ஒரு தேடல் அவசியமாகிறது. பகுத்தறிவு  பேசுவோருக்கு அது அறிவியல் தேடலாக இருக்கிறது . மற்றவர்களுக்கு அது ஆன்மீக தேடலாகவே உள்ளது. அகம் சார்ந்த விடுதலையை அடைய இதுபோன்ற தேடல்கள் அவசியம் என்கிறார். 


நூலின் இறுதியில் பின் இணைப்பாக சாதியை அழித்தொழிக்க போராடிய முன்னோடி தலைவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களை பற்றிய சிறு குறிப்பு  இடம்பெற்றுள்ளது. அண்ணல் அம்பேத்கர், பெரியார், மகாத்மா புலே, சாவித்ரிபாய் புலே, அயோத்திதாசர், அய்யன்காளி, பூலான் தேவி, ரவிதாஸர், ஜோகேந்திரநாத் மண்டல் போன்ற தலைவர்கள் இதில் அடங்குவர். 


அடுத்த பின் இணைப்பாக தான் பின்பற்றிவரும் பௌத்தம் குறித்தும் அதில் தான் மேற்கொள்ளும் தியான முறைகள் குறித்தும் இதுபோன்ற ஒடுக்குமுறைகளுக்கு அது எத்தகைய அகம் சார்ந்த தீர்வுகளை வழங்குகிறது என்பதை பற்றியும் பேசுகிறார்.  


இந்நூல் சாதியில் வடுவில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு Workbook போல் தான் இருக்கிறது. சாதி குறித்த அனைத்து பரிமாணங்கள் பற்றியும் ஏதோ ஒரு வகையிலான அறிமுகத்தை நமக்கு வழங்குகிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஒரு இந்தியர் தனது வேர்களை தேடி அது மனிதத்தன்மை அற்ற ஒன்றாக இருப்பதை அறிந்து அதற்கான தீர்வுகளை முன்வைக்க ஒரு நூல் எழுதுவதெல்லாம் அரிதான செயல். அப்படியான ஒன்றை சாத்தியப்படுத்தி இருக்கிறார் தேன்மொழி சௌந்தரராஜன். 


தமிழ் மொழிபெயர்ப்பை வேண்டி நிற்கும் முக்கியமான ஆங்கில நூல்களில் பட்டியலில் இந்நூலை முதல் ஐந்திடங்களில் அடக்கலாம். சாத்தியப்படும் என்று நம்புவோமாக. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 


Comments