பூக்குழி

    





தர்மபுரி இளவரசனுக்கு நான் அறிந்த வரையில் இதுவரை இரண்டு நூல்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளன ஒன்று ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய "ஆணவக் கொலைகளின் காலம்" மற்றொன்று பெருமாள் முருகனின் "பூக்குழி". மாதொருபாகன், பூனாச்சி வரிசையில் பெருமாள் முருகனின் எழுத்தில் நான் வாசித்த மூன்றாவது நாவல் இது. புக்கர் பரிசு Longlistஇல் இந்நூலும் இடம்பெற்றிருப்பது வாசிக்க தூண்டியது. 


ஒரு வகையில் இந்நூல் சாதி விமர்சன நூல். ஆணவக் கொலைகளுக்குப் பலியாகும் உயிர்களுக்குள் இருக்கும் அன்பையும் கனவையும் லட்சியங்களையும் பேசும் இந்நூலுக்கு ஒரு மென்மையான பக்கம் இருந்தாலும். சாதிய வன்மம் , வக்கிரம், சாதி மறுப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் கிராம மனம் ஆகியவை விமர்சிக்கவும் பட்டுள்ளது. நாவலுக்குள் செல்ல செல்ல சாதியின் மீதான வெறுப்பு அதிகரிக்கவே செய்கிறது. என்ன இனம்?, என்ன ஆளுங்க?, நம்ம சனமா?, எந்தூரு ஆளு? என எழும் கேள்விகள் அனைத்தும் சாதியை அறிவதன் நிமித்தமாகவே எழுப்பப்படுகிறது. இதற்கான பதில் அவர்களுக்கு எதிரான ஒன்று என உறுதியானதும் அவர்களுக்குள் ஏற்படும் வெறுப்பு சாதி வெறியால் மட்டுமே ஏற்படக்கூடிய பிரத்தியேக உணர்வு. 



கிராம மனங்கள் ஒரு அடையாளத்திற்குள் சிக்கக் கொண்டு அதன் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு இருக்கவேபழக்கப்பட்டவை . அந்த அடையாளம் வட்டார அளவில் அதிகார மிக்க  சாதியின் அடையாளமாகவே வெளிப்படுகிறது. அன்றாடங்களில் நிகழும் சிறு உறவு சார்ந்த மாற்றங்களுக்கு அதன் எதிர்வினை மிக மோசமான ஒன்றாக இருக்கிறது. மாற்றத்தை விரும்பும் மனம் கிராமத்தை விரும்புவதில்லை. நகரம் தான் மாற்றத்திற்கான இடம். அங்கு நெரிசல் அதிகம் என்றாலும் நிம்மதியும் அதிகம். சாதி வெறி கொண்ட ஒருவரால் நகரத்தில் அவ்வாழ்வைச் சகித்துக்  கொண்டிருக்க முடியாது. வேகமாக இயங்கும் நகரம் மாற்றங்களை உள்ளிழுத்துக்கொள்ளப் பழகியது. கிராமம் மெதுவாகவும் ஒரு வித சோம்பேறித்தனத்துடனுமே இயங்கும் மாற்றங்களை ஏற்க நேரமெடுக்கும். அங்குள்ள மனிதர்களும் அப்படி தான். 



இந்த நாவல் மைந்தர்களான சரோஜாவும்- குமரேசனும் சாதி மறுப்பு திருமணம்  செய்துகொண்டு குமேரசனின் கிராமத்தில் வாழும் ஒரு பத்து நாள்  வாழ்க்கையைப் பற்றியும் அதற்குள் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைப் பற்றிப் பேசுகிறது. ஒரு உயிரைக் கொல்ல சாதி வெறி எடுத்துக்கொள்ளும் நாள் வெறும் பத்து. 



பூக்குழி என்பது அம்மன் கோவில் விழாக்களில் தீ மிதி திருவிழாவில் இறங்கும் நெருப்பு குழி. பூ சட்டி எடுத்தல், பூ மிதித்தல் என்று தீயை பூ என்று சொல்வதுமுண்டு. தீயைப் பூவாக்குவதால் மனதில் ஏற்படும் மென்மை உணர்வு தீயைக் கடக்கும் உத்வேகத்தைக் கொடுக்கிறது. இந்நாவலில் அந்த தம்பதி கிராமத்தில் நுழைந்ததுமே ஏதோ இரு தீ குழியில் இறங்கிவிட்டது போல் தான் வாழத் தொடங்குகிறார்கள். குமரேசன் பூக்குழி என்று அழைத்துவந்த இடம் தீக்குழியாய் இருப்பதை சரோஜாவின் மனம் ஏற்க மறுக்கிறது. அவளுக்கு ஒரே துணையாக குமரேசனே இருக்கிறான். குமரேசன் சைக்கிள் ஒலிக்காகவே அவளது காதுகள் காத்துக் கிடக்கின்றன. மற்ற நேரங்களில் அவளது மாமியாரின் வசவு ஒலியை மட்டும் கேட்கும் காதுகளுக்கு குமரேசனின் சைக்கிள் ஒலி வழங்கும் ஆசுவாசம் 'பூ'க்குழியைத் தான் கடக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இந்நாவலில் அதிக நெருப்பைக் கக்கும் பாத்திரமாக மாமியார்(குமரேசனின் அம்மா) பாத்திரம்  இருக்கிறது. இந்த தீக்குழியைக் கடந்தால் இரு நல்வாழ்வு நமக்குண்டு என்பதை சரோஜாவின் மனம் அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருந்தது. நாவலில் முடிவும் அப்படி ஒரு கனவோடும் நெருப்புக்கு நடுவே ஒரு குழியிலிருந்துகொண்டு சைக்கிள் ஒலிக்காகத் திறந்த காதுகளோடு இருப்பதாகவே உள்ளது.



சைக்கிள், சோடா, ஆடு, வறண்ட நிலம், தண்ணீருக்கான ஏக்கம் என இவை அனைத்தும் பெருமாள் முருகனின் கதைகளில் நிரந்தரமாக வந்து செல்பவை. நான் வாழ்ந்த மண்ணின் கூறுகளை கொண்ட இச்சிறு விஷயங்கள் கிராமம் பற்றிய நிறைய நினைவுகளை ஏற்படுத்தின. என் கிராமத்தை எனக்கு நினைவூட்டும் சின்ன விஷயங்களாக இவை தான் இருக்கின்றன. இதில் வரும் சைக்கிளும், சோடாவும், ஆடும், நீருக்கு ஏங்கும் நிலமும் பெருமாள் முருகனின் பிற நாவல்களையும்  அதன் கதாபாத்திரங்களையும் நினைவூட்டச் செய்கின்றன. ஆடுகளிடம் மாமியார் உரையாடும் பகுதியை வாசித்தபோது எனக்கு பூனாச்சி ஞாபகம் வந்தது. இப்படி இவை அனைத்தும் இஸ்கர முன்னொருநாள் கூறியது போல PERUMAL MURGAN UNIVERSE(PMU)ன் நிரந்தர அங்கங்கள் என்றே நினைக்கிறேன். 


இந்நாவல் ஒரு நம்பிக்கையில் தொடங்கி ஏக்கத்தில் முடிகிறது. முடியும் எல்லாமும் அப்படி தான். வாசிப்பவருக்கு சாதியின் மீது ஏதோ ஒரு வகையிலான வெறுப்பையாவது இந்நாவல் உருவாக்கும். 


பூக்குழி. 

 காலச்சுவடு . 


Comments