சேது கால்வாய் திட்டம் - some Musings

 





பொருளாதார ரீதியாகவும் சர்வதேச அரசியல் சூழல் சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் சேது கால்வாய்  திட்டம். தொடக்கத்தில் சூழலியல் காரணங்களை சொல்லி தள்ளிபோடப்பட்ட திட்டம் அதற்கான தீர்வுகளை கண்டடைந்த பிறகு ராமர் பலம் என்ற மதம் சார்ந்த காரணத்துக்காக  தள்ளிபோடப்பட்டு வருகிறது. 2000 வரை ஆதம் பாலமாக இருந்தது  அதன்பிறகு ராமர் பாலமானது எப்படி என்று தெரியவில்லை. இந்தியா வளராமல் போனதற்கு மதமும், மத பற்றும், மதவாதமும் முக்கிய காரணம். 1950களில் 30 சொச்சம் கோடியாக இருந்த திட்ட மதிப்பு தற்போதய பொருளாதார சூழலில் 4000 கோடியை அடைந்துள்ளது. 


எகிப்து நாட்டின் பொருளாதாரத்திற்கு வருவாய் ஈட்டி தரும் மூன்றாவது பெரிய கட்டமைப்பாக சூயஸ் கால்வாய் விளங்குகிறது. சேது கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பாயின் தமிழ்நாட்டுக்கும் இது போன்ற பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகி இருக்கும். 


சூயஸ், பனாமா கால்வாய்களை விடவும் எளிமையாக செயல்படுத்தும் சாத்தியங்களை கொண்ட திட்டமாக தான் சேது சமுத்திர திட்டம் இருக்கிறது. 


தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GSDP அளவீட்டில்) 2023-24 நிதியாண்டில்14% ஆக இருக்க அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருப்பதாக 2022இல் வெளியான MCCI (Madras Chamber of Commerce and Industry) அறிக்கை மதிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொருளியல் வளர்ச்சி சமூக-பொருளாதார வளர்ச்சியாகவும் பிரதிபலிக்கிறது என்பதை தான் 50 ஆண்டு கால திராவிட மாதிரி ஆட்சி நிருபணம் செய்திருக்கிறது.  


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வளர்ச்சி குன்றிய மாவட்டங்களாக தொடர்வதற்கு சேது சமுத்திர கால்வாய் திட்டம் தாமதமாகி கொண்டிருப்பதும் ஒரு முக்கிய காரணம். சேது கால்வாய் திட்டம் வெறும் கால்வாய் வெட்டும் திட்டமாக மட்டும் இருக்கவில்லை, தூத்துக்குடி துறைமுகத்தோடு பிற கடலோர மாவட்டங்களை சென்னை மாநகரோடு இணைக்கும் சாலை வசதியும் இத்திட்டத்தோடு சேர்த்து திட்டமிடப்பட்ட ஒன்று தான். 


பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இதுவரை 9க்கும் மேற்பட்ட ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது, எல்லா ஆணையங்களும் இந்த திட்டத்தை செயல்படுத்தவே பரிந்துரைத்துள்ளது. இறுதியாக சுற்றுசூழல் பாதிப்பு குறைவாக உள்ள ஆதம் பால வழி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் பிறகு தான் பாஜக அதிமுக போன்ற கட்சிகளாலும் சில மத மோசடி குழுக்களிலும் சூழலியல் தீவிரவாதிகளாலும் இத்திட்டத்திற்கு எதிரான வாதங்கள் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டன. ஆதாம் பாலம் ராமர் பாலம் ஆனது. 


கிருஷ்ணா, நர்மதா, சரஸ்வதி போன்ற கடவுள் பெயர்களை கொண்ட நதிகளில் நாம் அணைகள் அமைப்பதில்லையா? அல்லது கட்டுமானங்களை மேற்கொள்வதில்லையா? அப்போது அந்த கடவுள்களால் என்ன எதிர்ப்பினை தெரிவிக்க முடிந்தது? போன்ற பகுத்தறிவு நிறைந்த கேள்விகளை நாம் கேட்டாலும் அதற்கான பதில் மதவாதிகளிடம் இருப்பதில்லை. இதே தர்க்கத்தை தான் சேது சமுத்திர கால்வாய்க்கும் முன்வைக்கிறோம். ராமர் பாலம் இருந்ததாக போலி வாதங்களை முன்வைக்கிறார்கள். 


மெட்ரோ ரயிலா மோனோ ரயிலா என்று எப்படி ஒரு 10 ஆண்டுகளை வீணடித்தோமோ அதை போலவே மதத்தை காரணமாக வைத்தும் சுற்றுசூழலை காரணமாக வைத்தும் பல பத்தாண்டுகளாக நாம் வீணடித்து வரும் ஒரு திட்டம் சேது கால்வாய் திட்டம். 


இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 36 மணி நேர பயண தூரம்  குறைக்கப்படுவதோடு மட்டுமின்றி எரிபொருளும் நேரமும் பணச்செலவும்  இன்ன பிற புதுப்பிக்க முடியாத வளங்களும் சேமிக்கப்படும். கார்பன் வெளியேற்றம் பற்றி விடிய விடிய வாய் வலிக்க பேசும் ஆர்வலர்கள் இதை எல்லாம் கருத்தில் கொள்வது கிடையாது. 


சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அறியப்பட்டிருக்கும். இலங்கை, சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடனான வெளியுறவு கொள்கையில் நல்ல Bargaining திறனை இந்தியா அடைந்திருக்க முடியும். முன்பையின் துறைமுகத்துக்கு நிகரான வளர்ச்சியை கிழக்கு நாடுகளுடனான வர்த்தக மையமாக தூத்துக்குடி விளங்கி இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.  எல்லாவற்றையும் இழந்துவிட்டு ஒரு ஓநாயிடம் சிக்கிய ஆடுகள் போல் நாம் விழித்து கொண்டிருக்கிறோம். 


சேது கால்வாய் திட்டத்திற்கு நேர்ந்த கொடுமை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எனக்கு நிரம்பவே உள்ளது. மதம் போலவே எந்த மாற்றங்களையும் ஏற்காத சூழலியல் பாதுகாப்பு எந்தவகையில் பலனளிக்கும் என்று புரியவவில்லை. வளர்ந்து  வரும் பொருளாதாரத்திற்கு இதெல்லாம் தேவையா என்ற கேள்வியும் அடிக்கடி எழுகிறது. 


One-Trillion Economy என்ற கனவினை அடைய சேது கால்வாய் திட்டமும் பரந்தூர் விமான நிலையமும் இன்றியமையாத ஒன்று. 


 இந்த சிறு நூல் சேது கால்வாய் குறித்த நியாயமான வாதங்களை முன்வைக்கிறது.

Comments