இடம் பொருள் கலைஞர் 13 : உழவர் சந்தைகள்
இடம் பொருள் கலைஞர் 13
உழவர் சந்தைகள்
விவசாயிகளைத் தொழில்முனைவோராக்கிய முன்னெடுப்பு
“ஒரு கிலோ வெங்காயத்த குடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் போட போறேன்” போன்ற நகைச்சுவை ததும்பும் மீம்களை இப்போதெல்லாம் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது. பதுக்கல் மூலம் செயற்கையாக உயர்த்தப்படும் காய்கறி விலைகளுக்குப் பின்னால், லாபத்தில் கொழுக்கத் துடிக்கும் பெரும் முதலாளிகள் பதுங்கி இருக்கிறார்கள். விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்தி இடைத்தரகர்கள் இல்லாத வியாபாரத்தின் மூலம் விவசாயிகள் பயன் பெறவும் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கவும் கலைஞரால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 'உழவர் சந்தை' திட்டம்.
கலைஞர் முதலமைச்சராக இருந்த 1970ல் நில உச்சவரம்பு 30 ஏக்கரிலிருந்து 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. உழைக்கும் மக்களுக்கான உரிமை, 'நில உரிமைச் சட்டம்' என்றால், 1999ல் உழவர் சந்தை அமைத்தது உழைக்கும் விவசாயிகளின் ‘விலை உரிமை’ சட்டம். கடனாளியாக இருந்த பல விவசாயிகளை லாபம் பார்க்கும் வியாபாரிகளாக்கியது கலைஞர் தொடங்கிய உழவர் சந்தைகள்தான்.
விவசாய உற்பத்தியைச் சந்தைப்படுத்துதல்
நேருவின் பிறந்தநாளான 1999 நவம்பர் 14ல் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரமாகப் போற்றப்படும் மதுரையில் உள்ள அண்ணா நகரில் முதல் உழவர் சந்தை, முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞரால் திறந்துவைக்கப் பட்டது. எவ்வளவு உழைத்தும் விவசாயத்தில் லாபமே இல்லை என்று சொன்ன விவசாயிகளுக்கு இத்திட்டம் ஊக்கத்தையும் புத்துணர்வையும் தந்தது.
கலைஞர் முன்னெடுக்கும் அனைத்துத் திட்டங்களுக்குப் பின்னணியிலும் குழு அமைக்கப்பட்டிருக்கும். உழவர் சந்தை அமைக்கும் முன்பு தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழிற்துறை சங்கத்தின் தலைவரான எஸ்.ரத்தினவேலுவை உறுப்பினராகக் கொண்டு 'விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு' என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியா முழுக்கப் பயணித்துப் பிற மாநிலங்களில் உள்ள விவசாய விற்பனைக் கூடங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தனர். அறிக்கை கையில் கிடைத்த அன்றே உழவர் சந்தைக்கான அறிவிப்வை வெளியிட்டார் தலைவர் கலைஞர்.
அட்டையில் குடும்பத்தினர் படம்
ஆந்திராவிலும் சண்டிகரிலும் இயங்கி வந்த சந்தை அமைப்புகளிலிருந்து, தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட உழவர் சந்தைகள் பல விதங்களில் தனித்துவமானவை. இங்குள்ள உழவர் சந்தைகளில் காலை 5:30 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். அரசுப் பேருந்துகளில் உழவர் சந்தை உறுப்பினர் அட்டையைக் காட்டி காய்கறிப் பழங்களை இலவசமாகச் சந்தைக்கு எடுத்துச் செல்லும் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
உழவர் சந்தை அட்டையில் ஒருவர் படம் மட்டுமின்றி குடும்பத்தில் இருக்கும் அனைவரது படமும் இடம்பெற்றிருந்தது. இது ஒருவர் அறுவடை செய்யவும் மற்றொரு குடும்ப உறுப்பினர் சந்தைக்குப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யவும் ஏதுவாக இருந்தது . ஒவ்வொரு உழவர் சந்தைக்கு ஒரு அதிகாரி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். முறையான வியாபாரம் நடப்பதை இந்த அதிகாரி கண்காணிப்பார்.
உழவர்களுக்கு இலவசப் போக்குவரத்து வசதியும், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் அடங்கிய அடையாள அட்டையும், முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடை ஒதுக்கும் முறையும், இலவச எடைக் கருவிகளையும் அரசே ஏற்பாடு செய்திருந்த விதமும் உழவர் சந்தையை நோக்கி விவசாயிகளை ஈர்த்தது.
லாபமும் அதிகம், விலையும் குறைவு
நுகர்வோர்களுக்குச் சில்லறை விற்பனை விலையைவிட 15 சதவிகிதம் குறைவாகவும் விவசாயிகளுக்கு மொத்த விற்பனை விலையை விட 20 சதவிகிதம் அதிகமாகவும் உழவர் சந்தை பரிவர்த்தனைகள் நடைபெறுவது, உழவர் சந்தையின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
விவசாயிகளுக்கு லாபம் தரும் வகையிலும், நுகர்வோருக்குக் குறைவான விலையிலும் உழவர் சந்தை விலைப் பட்டியல் அமைந்திருந்தது . உழவர் சந்தையைச் சுற்றி நான்கு இடங்களில் விலைப் பட்டியல் இடம்பெற்றிருக்கும். மேலும் பொது அறிவிக்கை முறை மூலம் தொடர்ச்சியாகக் காய்கறிகளின் விலையை அறிவிப்பு செய்வதன் பலனாக விவசாயிகள், நுகர்வோர்கள் ஆகியோர் காய்கறிகளுக்கான கட்டணத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டு ஆறே மாதங்களில் ரூபாய் 30.33 கோடி மதிப்பில் 4,88,15,033 கிலோ காய்கறிகள் விற்பனையாகி இருந்தன. நான்கு லட்சம் விவசாயிகள் இதனால் பயனடைந்திருந்தனர். இந்தத் திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருந்தது என்றால், அனைத்தையும் முடக்க நினைக்கும் அ.தி.மு.க. ஆட்சியில்கூட உழவர் சந்தைகள் எந்தத் தடங்கலும் இன்றி சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தவிர்க்க முடியா திட்டமாய் கலைஞரின் உழவர் சந்தை திட்டம் உருவெடுத்திருந்தது.
நகரங்களுக்கு இணையாக கிராமங்கள்
கலைஞர் முதலமைச்சராக இருந்த 1970இல் நில உச்சவரம்பு சட்டம், 1989இல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், 1999இல் உழவர் சந்தை என்பதை முறையே நிலத்தைப் பகிர்ந்தளித்தல், நிலத்தில் நட்டமின்றி விவசாயம் நடப்பதை உறுதி செய்தல், நிலத்தில் விளையும் பொருட்களின் விலையை விளைவிப்பவர்களே தீர்மானித்தல் என்று இம்மூன்று திட்டங்களும் அமைத்திருப்பது கலைஞரின் துல்லியமான திட்டமிடல் என்றே சொல்ல வேண்டும்.
இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்டு, பின்னர் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாகப் பின்வாங்கப்பட்ட புதிய விவசாயச் சட்டங்களுக்கு ஆக்கப்பூர்வ மாற்றாக 'உழவர் சந்தை' இருந்திருக்கும்.
விவசாயத்தை முதலாளிகளுக்குத் தாரை வார்க்க முற்படாமல் விவசாயிகளைத் தொழில்முனைவோர்களாக்க முன்னெடுக்கப்பட்ட திட்டம்தான் கலைஞரின் உழவர் சந்தை திட்டம்.
இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் தமிழ்நாடு முழுக்கச் செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மலைப்பயிர் காய்கறிகளை உழவர் சந்தைகளில் விற்பனை செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் குரல் இந்தியாவுக்கு 50 ஆண்டு கழித்துத்தான் உரைக்கும் என்பதைப் போல் மக்களவையில் பல முறை வலியுறுத்தியும் இந்தியாவின் பிற மாநிலங்களில் 'உழவர் சந்தை' அமைக்க ஒன்றிய அரசு எந்த முன்னெடுப்பையும் இதுவரை எடுக்கவில்லை.
'விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே' என்ற உன்னதமான நோக்கத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்குப் பின்னால், நகரங்களுக்கு இணையாகக் கிராமங்களையும் முன்னேற்ற வேண்டும் என்ற காந்தியின் கனவை கலைஞர் நனவாக்க முனைந்தார் எனலாம்.
Comments
Post a Comment