Becoming Babasaheb: The Life and Times of Bhimrao Ramji Ambedkar - நூல் அறிமுகம்

  




 காலம் மாற மாற மானுட விழுமியங்களும் மாறி வருவது வெளிப்படை. நிகழ் காலத்திலிருந்து கடந்த காலத்தை, நிகழ் கால கண்ணாடியுடன் அணுகுவது துறை சார்பற்று தவிர்க்க முடியா ஒன்றாக இருக்கிறது. கடந்த கால தரவுகளை நிகழ்கால கதையாடலுக்கு ஏற்ப பயன்படுத்தி  வெளியாகும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அதிகரித்துள்ளன, அதுவும் சமகாலத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு இப்படியான வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வெளியிடப் படுகிறது. அதற்குச் சமீபத்தில் இளையராஜா முன்னுரை எழுதி வெளியான அம்பேத்கர் மோடி பற்றிய புத்தகமும், அம்பேத்கர் மீதான சில குறைகளைச் சொல்லக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் எழுதி இருக்கும் நூலும் உரியச் சான்றுகளாகும். 



இந்தாண்டு அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்தில் மூன்று முக்கியமான புத்தகங்கள் வெளியானது , அசோக் கோபால் எழுதிய நெடிய வாழ்க்கை வரலாறு(A part apart) அதில் முதன்மையானதாக உள்ளது, அமெரிக்க ஆய்வறிஞர் ஸ்காட் எழுதி இருக்கும் நூல் John deweyன் Pragmatism மற்றும்  அம்பேத்கரின் பௌத்தத்திற்கு இடையிலிருந்த தத்துவார்த்த  தொடர்புகளைப் பேசுகிறது. இவை இரண்டை விடவும் முக்கியமான நூலக நான் கருதுவது, Aakash singh Rathore எழுதி இருக்கும் Becoming Babasaheb: The Life and Times of Bhimrao Ramji Ambedkarஎன்ற நூல். அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில்  முதல் பாகமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. Gail Omvedt, Christophe Jaffrelot, Dhananjay keer, Khairmoday ஆகியோர் அம்பேத்கர் குறித்து எழுதியுள்ள கருத்துக்களை மீளாய்வு செய்து அதிலுள்ள பிழைகளைத் திருத்தி புதிய கருத்துக்களையும் தகவல்களையும் கூற இந்நூல் முயல்கிறது. அதனாலேயே இது முக்கியமான நூலாகவும் படுகிறது. “Ambedkar’s Preamble” என்ற நூல் இவரது ஆய்வு மீது  பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது,, அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்நூலை முதலில் படிக்கத் தொடங்கினேன். 



அறிமுக உரையிலேயே அம்பேத்கர் குறித்து அவர் சமகாலத்தில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் அவர் குறித்து நிறையப்  பிழையான தகவல்களைக் கொண்டிருப்பதாகக்  கூறி அதிர்ச்சியூட்டுகிறார் ரத்தோர். வரிசைப்படி நிகழ்வுகளை அம்பேத்கரே யூகத்தின் அடிப்படையில்தான் வரிசைப் படுத்தி நினைவில் நிறுத்தினார் என்ற செய்தியும் முன்னுரையில் இடம்பெற்றுள்ளது. Dhananjay keer அம்பேத்கருக்கும் சவர்க்கருக்கும் இடையிலான உறவு  நெருக்கமாக இருந்தது, என்பதை ஒரு செயற்கைத் தன்மை கொண்ட புனைவாகவே கட்டமைக்க முயன்றதாக ரத்தோர் குறிப்பிடுகிறார். Jaffrelot குறிப்பிடும் அம்பேத்கரின் சிந்தனை போக்கு Sanskritization to  Modernization என்ற வகையில் தான் இருந்தது என்பதை மறுத்து பௌத்தத்தை முன்வைக்கும் ரத்தோர் அதே நேரத்தில்  Jaffrelot கொண்டிருந்த ஐரோப்பிய மைய பார்வையை(Eurocentrism) இத்தகைய தவறான புரிதலுக்குக் காரணமாகக் கூறுகிறார். 





அம்பேத்கர் பிறப்பிலிருந்து மகத் சத்தியாகிரகம் வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது, வட்ட மேசை மாநாடுகள் பற்றிய ஒரு துணுக்கு செய்தியோடு பாகுபலி முதல் பாக கிளைமாக்ஸ் போல் இந்நூல் நிறைவடைகிறது. அம்பேத்கர் குறித்து இந்த தலைமுறை வாசகருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வரலாற்று நூலாக இந்நூல் வெளியாகி உள்ளது. சசி தரூர் எழுதியுள்ள நூலுக்கு இந்நூல் எவ்வளவோ தேவலாம். 



அம்பேத்கரின் பெயர், பிறந்த தேதி, பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, பரோடா மன்னர் உடனான உறவும், பரோடா அரசு அவருக்கு வழங்கிய உதவித் தொகைக்குப் பின்னால் இருந்த நோக்கம், அமெரிக்கப் பயணம், திருமணம், படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, பின்னர் ஐரோப்பியப் பயணம், அங்கு அவர் மேற்கொள்ளவிருந்த முனைவர் பட்ட ஆய்வு, இடையிலே லண்டன் வாழ்க்கையை நிறுத்திவிட்டு பரோடா வருகை, பரோடாவில் அவர் சந்தித்த இன்னல்கள், southborough committeeக்கு அவரளித அறிக்கை, அம்பேத்கரின் இதழியல், பாரிஸ்டர் பணி , ஆசிரியர் பணி, மக்களை அமைப்பாகும் பணி,  முனைவர் அம்பேத்கராக இருந்து பாபாசாகிப் அம்பேத்கராக பரிணமிக்கும் இடம், மகத் சத்தியாகிரகம்  என அண்ணல் அம்பேத்கரின்  ஆரம்பக்கால வாழ்க்கையில் முக்கியமான இடங்களைத் தொட்டுச் செல்கிறது இவ்வாழ்க்கை வரலாறு நூல்.  



நூலின் பின்னிணைப்பாக, மகத் சத்தியாகிரகம் குறித்து நிறைவேற்றிய தீர்மானமும், Bahishkrut Bharat பத்திரிகையில் வெளியான முதல் தலையங்கமும், மகத் சத்தியாகிரகம் குறித்து பாம்பே நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பும், Khairmoday வெளியிட்ட 12 தொகுதி அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூல் தொகுப்பின் பொருளடக்கம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இணையத்தில் காணக் கிடைக்கும் புகைப்படங்களும் சவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய ஒரு கடிதமும், அம்பேத்கரின் பாஸ்போர்ட்டும், அம்பேத்கர் தங்கி இருந்த வீட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. 



இந்நூல் ஆசிரியர் முன்னுரையிலேயே, இது அம்பேத்கரின் Political/ Intellectual வாழ்க்கை வரலாறு இல்லை என்றும் மற்ற அம்பேத்கரின் வாழ்க்கையை வரலாற்று  நூல்களை விட வரலாற்றுத் துல்லியத்தை வழங்க இந்நூல் முயன்றுள்ளது எனவும் குறிப்பிடுகிறார் அதற்கான நியாயத்தையும் நூலைப் படிக்கையில் உணர முடிகிறது.




அம்பேத்கரின் தாயாரான Bhimabai Murbadkar, தனது பெயரின் ஒரு பகுதியை Bhiva/ Bhima தான் அம்பேத்கருக்கு வைத்தார், மேலும் அதர பழைய பொய்யான அம்பேத்கர் என்ற பெயர் அவர் அம்பவேட்கர் என்ற பள்ளி ஆசிரியரைச் சந்திக்கும் முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குடும்பத்தாரின் இராணுவ பின்புலத்தால் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆங்கில கல்வியை அவர் Elphinstone பள்ளியிலேயே முடித்தார், பல சாதிய ஒடுக்குமுறைகள் சந்தித்தார், பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்று பரோடா சென்ற அம்பேத்கருக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகை நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. பொருளாதாரமும், நிதி குறித்தும், சமூகவியலும் அவர் விருப்பத்தின் அடிப்படையில் படித்தார் என்பதை விட பரோடா சமஸ்தானத்தின் ஆட்சி நிர்வாக பணியை மேம்படுத்தவே அந்த படிப்புகள் அம்பேத்கருக்கு முதல் பரிந்துரைக்கப் பட்டன, பின்னர் அம்பேத்கரும் பொருளாதாரம்/ நிதி சார்ந்த  படிப்புகளையே விரும்பி தேர்ந்தெடுத்த காரணத்தால் பரோடா அரசு பணியில் 10 ஆண்டு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதன் அடிப்படையில் கொலம்பியா சென்றார் அம்பேத்கர்.  திரும்பி வருகையில் அவர் ஒரு நிதி அமைச்சராவதற்கான நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பர் என்ற நம்பிக்கையை பரோடா மன்னர் ஏற்படுத்திக்கொண்டிருந்தார். 




கொலம்பியா பல்கலைக்கழகத்தில் John Dewey, James Shotwell, Edwin Seligman, James Harvey ஆகிய பேராசிரியர்கள் அம்பேத்கருக்கு வழிகாட்டிகளாக அல்லது அவர் சிந்தனை போக்கில் தாக்கம் செலுத்துபவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியாவில் நண்பர்களாக அம்பேத்கருக்கு இருந்தவர்கள் இவர்களும் புத்தகங்களும் தான். அங்கிருந்தே அவர் புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கி இருக்கிறார், அதற்கே பாதி தொகை செலவாகி இருக்கிறது. இப்படிப் பல சுவாரசியமான நிகழ்வுகளை இந்நூல் கொண்டிருக்கிறது. 




அம்பேத்கரின் வாழ்க்கை மேடு பள்ளங்களால் நிரம்பிய ஒன்றாகவே தெரிகிறது, அதனாலேயே அவரது முடிவுகளிலும் இது பிரதிபலிக்கிறது, யதார்த்த வாழ்க்கைக்கு ஏற்ற முடிவுகளை அவர் எடுத்தார், பௌத்த ஏற்பும் அப்படியானதே. சாதிய வன்முறைகள் அவர்மீது ஏற்படுத்திய தாக்கம் அவரது சிந்தனை போக்கிலும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி இருந்தது. 





இதழியல் துறை குறித்த பகுதிகளும் சுவாரசியமானவை, Mooknayak, Bahishkrut Bharat, samatha, janata என அம்பேத்கரின் இதழியல் பணி நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்தே இருக்கிறது. மராத்தியில் அம்பேத்கர் நிபுணத்துவம் பெற்றதும் இதழியலுக்காகத் தான். பெரியார் குடியரசைத் தொடங்கியதற்கு அம்பேத்கர் மூக்னாயக் இதழ் தொடங்கியதற்கும் காரணம் ஒன்றாகத் தான் இருந்தது. 


     


மக்களை அமைப்பாக்க அம்பேத்கர் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை, சமகால தலைவர்களுடன் இணைந்து அவர் தலித்துகளின் வாழ்க்கையை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் அமைப்பின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது.  முனைவார், ஆய்வாளர், பாரிஸ்ட்டராக இருந்த அம்பேத்கர் அமைப்பாக்க நடவடிக்கைகள் மூலமே பாபாசாகிப் என்ற நிலையை அடைகிறார். 





மகத் சத்தியாகிரகம், நீருக்கான போராட்டம், புனிதம் x தீட்டு என்ற சாதிய தீண்டாமையின் வேர்களைக் கண்டுகொண்டு அதற்கு எதிராக அம்பேத்கர் கொண்டிருந்த தத்துவார்த்த காரணத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம். Samata Sainik Dal என்ற பெயரில் அமைக்கப்பட்ட சமூக சமத்துவ படை, அம்பேத்கர் சத்தியாகிரகத்தைக் கடந்த போராட்ட திட்டங்களைக் கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.பின்னாட்களில் இதுவே Independent Labour Party உருவாக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. 





மகத் சத்தியாகிரகம் முடியாமல் முடிய, சைமன் கமிஷன் ஆதரவு, பம்பாய் மாகாண சட்டசபை (BLC) பங்கேற்பு, அடுத்து வரவிருக்கும் வட்ட மேசை மாநாடுகள் என அடுத்த பாகம் குறித்த விறுவிறு நடையில் இந்நூல் நிறைவை எட்டுகிறது. 





இந்நூலின் மிகச் சில சுவாரசியமான பகுதிகளையே இந்த அறிமுகக் கட்டுரை தொட்டிருக்கிறது, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களும் முக்கியமான வரவாக இந்நூல் நிச்சயம் இருக்கும். தமிழுக்கு விரைந்து வந்தால் மகிழ்வேன்.








Comments