திமுகவின் முதலீட்டியமும் சோசியலிசமும்

 





 “ In power, the DMK remains one of the foremost and loyal champions of foreign capital in India.” -  Mythili Sivaraman 

The Radical Review, Vol 3, No. 2, April-June 1972 


1972 ஆம் ஆண்டு பார்ப்பன மார்க்சிஸ்ட் செயற்பாட்டாளர் மைதிலி சிவராமன் எழுதிய The Industrial Policy of DMK என்ற கட்டுரையில் இடம்பெற்ற வாசகங்களை மேலே மேற்கோளிட்டிருக்கிறேன். 1972 ஆம் வெளிவந்த இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாதார நிலைப்பாட்டை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகுகிறது. காலம் காலமாக மார்க்சிஸ்டுகள் திமுகவின் மீது கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும், சமகாலத்தில் நடக்கும் பல அரசியல்- பொருளாதார விவாதங்களுக்கு இக்கட்டுரை உதவுகிறது எனலாம். 



1957 பொதுத் தேர்தல் சமயத்தில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ‘ஐந்தாண்டு திட்ட அநீதி ஒழிய வேண்டும்’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டிருந்தது, திட்டக்குழு வட இந்திய மாநிலங்களுக்கும் முதலாளிகளுக்கும்  சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது எனவும் திராவிட நாட்டுக்கு உருப்படியான திட்டங்கள் எதையும் வரவிடாமல் இக்குழு தடுப்பதாகவும் இதனால் திட்டக் குழு என்பது ஒழிக்கப்பட்டு அந்த பொறுப்பை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளும் வண்ணம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் அறிக்கை சுட்டிக் காட்டியது. இதே தேர்தல் அறிக்கை தொழில்கள் தேசியமயமாக வேண்டும் என்ற கோரிக்கையும் பிற சமூக நலக் கோரிக்கைகளும் இடம்பெற்றிருந்தது என்பது வேறு கதை. 



1957 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக வெற்றி பெற்ற 15 நபர்களில் M. P. Sarathy, M. Selvaraj, C. Santhanam,  P. U. Shanmugham ஆகியோர் வணிகர்களாகவும் வியாபாரிகளாகவும் இருந்தனர் என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.   



1962 திமுக தேர்தல் அறிக்கையில் தொழில்வள திட்டங்கள் என்ற பகுதியின் கீழ் “தென்னாட்டை தொழில் மயமாக்கும் திட்டங்களைத் துவக்கக் கழகம் பாடுபடும்” என்ற உறுதி மொழியும் இடம்பெற்றிருந்தது. தமிழ்நாட்டை தொழில் மயமாக்கும் சீரிய சிந்தனை இந்த பகுதியின் கீழ் இடம்பெற்றிருந்தது. மேலும் “தனியார்த்துறையினை நடத்திவரும் தொழிலதிபர்களில் தொழில் நுணுக்கம் அறிந்தவர்களைப் பொதுத்துறை தொழில்களை நடத்திச் செல்ல பணித்திட்ட ஏற்பாட்டைக் கழக அரசு செய்யும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது”. 



1967 தேர்தல் அறிக்கை காங்கிரஸ் அரசின் சோசியலிச திட்டத்தின் மீதான விமர்சனமாகவே அமைந்திருந்தது என்றாலும் “முதலாளித்துவ பிடியைப் போக்கிடும் முறையில் தொழில் துறையைத் திருத்தி அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளக் கழகம் பொதுமக்களின் ஆதரவையும் ஆணையையும் எதிர்பார்த்து இருப்பதாகவும்” கூறி இருந்தது. 



1967 ஆட்சியில் திமுக சந்தித்த இன்னல்களில் முதன்மையானதாக உணவு உற்பத்தியும், மொழி சிக்கலும், வேலைவாய்ப்பின்மையுமாகவே இருந்தது. 



ஆட்சியிலிருந்த திமுக ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான முரண்பாட்டை, மாநில அரசு சந்தித்து வரும் அதிகார போதாமையை உணர்ந்தது. 1971 தேர்தல் அறிக்கையில் அதிகார பரவலாக்கம் முதன்மை கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது . தொழில் தொடங்க License முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. Agricultural Productivity Council, Industrial Marketing Society போன்றவற்றை நிறுவ விரும்புவதாக திமுக தேர்தல் அறிக்கை குறிப்பிட்டிருந்தது. சிறு, பெரு தொழில்கள் அமைப்பதை ஊக்குவிப்பது, மாநில திட்டக் குழு அமைப்பது என்பது போன்ற கோரிக்கைகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. 



இந்த தேர்தல் அறிக்கையின் இறுதியில்  ஜான் எப் கென்னடியின் மேற்கோள் ஒன்று இடம்பெற்றிருந்தது, “சுதந்திரமாக இயங்கும் ஒரு சமுதாயம் தொகையில் பலராக உள்ள வசதியற்றவர்களுக்கு உதவ முடியவில்லையென்றால் அந்த சமுதாயத்தால் தொகையில் சிலராக இருக்கும் வசதி உள்ளவர்களையும் காப்பாற்ற இயலாது.” 



1971-ல் பல்வேறு Joint Ventures(JV) அரசால் முன்னெடுக்கப்பட்டது, TIDCO, SIPCOT மூலம் இது கண்காணிக்கப்பட்டது. SPIC,  Carbon Black project, Sriram Fibres Ltd, Nagpal Ambadi Petrochemical Refining Ltd, உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏதுவான சூழலை அரசு அமைத்துக் கொடுத்தது. கடன் வழங்குதல், பங்கு வாங்குதல், நீர், நிலம், மின்சாரம் உள்ளிட்ட இன்ன பிற வசதிகளைச் செய்து கொடுத்தல் ஆகியவற்றை எல்லாம் SIPCOT நிறுவனம் மேற்கொண்டது . மாநிலத்தில் நடு மற்றும் பெரும் தனியார் தொழிற்சாலைகளை அமைவதை ஊக்குவிப்பதே SIDCOவின் சீரிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.   




அந்நிய முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன, கலைஞர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதும் இதே காலகட்டத்தில் தான். தொழில் முதலீடுகளை  ஈர்க்கும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது. அக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் அதிகமான அந்நிய முதலீடு தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது, மேலும் முறையாக ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிற்சங்கங்களுடனான சச்சரவுகளைக் குறைத்து முதலீடுகளை ஈர்க்க வழி செய்தது. 


எமெர்ஜென்சியை தொடர்ந்து அமைந்த அதிமுக ஆட்சியிலும் கல்வித் துறை முதற்கொண்டு தனியார் முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டும், தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சிக்கல்களைக் கையாள்வதில் அரசு தோல்வி அடைந்தது, போராட்டங்களை அரசு காவல் துறை அடக்குமுறை  மூலமே முடக்க நினைத்தது. 


 ‘The Dravidian Model’ நூல் கூறுவது போல் 1990 -களுக்கு(LPG) தமிழ்நாடு அரசியல்- பொருளாதாரம்- நிர்வாகம்- மனித வளம் என்ற அனைத்து வகையிலும் தயாராகவே இருந்தது. அதன் பின்னர் நாம் இன்றைக்கு அடைந்துள்ள வளர்ச்சி அனைத்தும் தனியார்த் துறை வளர்ச்சியின் மூலமும், மக்கள் நலத் திட்டங்கள் மூலமுமே சாத்தியப்பட்டது எனலாம். 


இதைச் சொல்வதற்குக் காரணமில்லாமல் இல்லை,   ஜனநாயக பண்பை உள்ளார்ந்த ஒன்றாகக் கொண்டிருக்கும் திமுக போன்ற கட்சிக்கு சோசியலிச கூறுகளையும் முதலீட்டிய கூறுகளையும் சம அளவில் கையாள தெரிந்தே இருந்தது. 




இரண்டு வகையிலான School of Though திமுக என்ற கட்சிக்கு உள்ளேயே செயல்பட்டது. பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் சமூக சீர்திருத்தம் ஒரு சிந்தனை போக்கு என்றால் எஸ். மாதவன்- முரசொலி மாறன்  முன்னெடுத்த சந்தை சார்ந்த அரசியல்- பொருளாதாரம் மற்றொரு சிந்தனை போக்கு எனலாம். 



இந்தியாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் நவதாராளவாத யுகத்தில் இடதுசாரிகள்(Center-left, Ultra-Left) வலுவிழந்து வருவதற்கு முக்கிய காரணம் முதலீடு இல்லாததே ஆகும். 



திமுக போன்ற வெகுஜன அரசியல் கட்சி நவதாராளவாத யுகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவதற்கு அதன் முதலீட்டிய சார்பும் முக்கிய காரணமாகும். முதலீட்டிய சார்பின் மூலம் அது இன்றளவிலும் சமுகத்திலிருந்து அந்நியப்படாத அரசியல் சக்தியாக இருந்து வருகிறது. வெகுஜன மக்களிடமும் - உயரடுக்கு மக்களிடமும் நல்ல வகையிலான அபிப்ராயத்தை திமுக பெற்று வருவதற்கு அதன் ஜனநாயக பண்பும், முதலீட்டிய சார்பும், மக்கள்நல கொள்கையும், இவை மூன்றின் மூலம் ஏற்பட்ட ஒரு Hybridity தான் காரணமாக இருந்துள்ளது என்பது என் அனுமானம். இவை மூன்றும் தொடரும் வரை திமுக அரசியல் பொருத்தப்பாடுள்ள ஒரு கட்சியாகவே திகழும்.  



Comments