உய்யடா உய்யடா உய் !





எத்தனை பேர் நட்டகுழி ? எத்தனை பேர் தொட்ட முலை

எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ் ? நித்தநித்தம்

பொய்யடா பேசும் புவியில்மட மாதரைவிட்டு

உய்யடா உய்யடா உய் !

என்ற பட்டினத்தார் பாடலின் கடைசி வரியைத் தலைப்பாகக் கொண்ட நூலைச் சமீபத்தில் வாசித்தேன். கடந்த ஒரு வாரம் அலுவல் அதிகம், இரவு வீடடைந்த சில மணி நேரம் மொபைலுக்கு கண்களை ஒப்படைத்துவிட்டு, அதன் பின்னர் தினம் ஒரு கட்டுரையாகப் படிக்கலாம் என்று நினைத்துப் படிக்கத் தொடங்கினேன், அன்றிரவே மூன்று நாட்கள் ஓடியது. பிடித்த பாடலை திரும்பத் திரும்ப கேட்பதைப் போல் சில வரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டேன். சிரித்தும் கொண்டேன்.  இந்நூலின் பெரும்பாலான கட்டுரைகள் ஒரு படைப்பு மீதான விமர்சன/ திறனாய்வு/ அனுபவ கட்டுரைகள்தான். ஆனால் அவற்றை வாசிக்கும்போது மூல படைப்பைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் கொடுக்கிறது. 

கவிஞர் இசை எனக்கு அறிமுகமானது ‘காலச்சுவடும் நானும்” என்ற கட்டுரை மூலம் தான், கவிஞர் தினா, இசையின்  “உடைந்து எழும் நறுமணம்” நூல் பற்றி ஒரு அபாரமான கட்டுரையை எழுதி இருந்தார். 10 நாட்களுக்கு முன் திருவான்மியூரில் இருக்கும் பனுவல் புத்தகக் கடைக்குச் சென்று இசை என்று முன்னட்டை படத்தில் எழுதியிருந்த நூல்கள் அனைத்தையும் வாங்கி வீடடைந்தேன். சில நூல்கள் அங்குக் கிடைக்கவில்லை. வேறோரு தினத்தில் அதையும் செய்து பார்க்கவேண்டும்.   சுந்தர ராமசாமி, சுகுமாரன், இசை, ஆகியோர் தான் என்  தற்போதைய மனநிலையைச் சரி செய்ய நான் உட்கொள்ளும் அருமருந்துகள். இசை அவர்களது கவிதைகள் போலவே கட்டுரைகளும் அதி மென்மையான நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பவை.  

பொதுவாகக் கட்டுரை தொகுப்புகளை படிக்கும்போது தகவல்கள், இலக்கிய சுவை போன்றவை அதிகமாகவும் நகைச்சுவை உணர்வு குறைந்த அளவிலும் தென்படும்,  இந்நூலுடைய என்னுரையே  “காக்காய் பிடித்தல் மற்றும் ஆண்ட்ராய்டுகளோடு சமரிடுதல்” என்ற நகைச்சுவை ததும்பும் தலைப்பைக் கொண்ட ஒன்றுதான். “சுகுமாரன் கவிதைகள்” நூலுக்கு எழுதிய மதிப்புரையின் தலைப்பே இத்தொகுப்பின்  தலைப்பாக இடம்பெற்றுள்ளது. 

“காமத்துப் பால் படி, படிச்சுட்டு எனக்கு அர்த்தம் சொல்லு” என்று தோழி ஒருவர் சமீபத்தில் அன்பாக(மிக மிக… போட்டுக் கொள்ளலாம்) கேட்டிருந்தார். என்னிடம் கலைஞர் உரை எழுதிய திருக்குறள் நூல் இருந்ததால் அதைப் படித்துப் பார்த்துவிட்டு இதில் அவ்வளவு பச்சை பச்சையாக வெல்லாம் ஒன்றும் இல்லை, என்று அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தேன்.  இந்நூலில் இடம்பெற்ற “மாலை மலரும் நோய்” என்ற கட்டுரை அந்த நிறைவேறா ஆசையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டது, பெருமாள் முருகன் எழுதிய “கெட்ட வார்த்தை பேசுவோம்” என்ற நூலை வாசித்த சமயத்தில், ‘அல்குல்’ உள்ளிட்ட தமிழ் இலக்கியத்தில் புதைந்துள்ள பல வார்த்தை பொக்கிஷங்கள் பற்றி அறிய முடிந்தது. மேலும் கற்பு, காமம் என்று வந்துவிட்டால் பாடல் எழுதியவரின் அக உணர்வுக்கு நியாயம் செய்யும்படி ஒரு உரையாசிரியரும் உரை எழுதுவதில்லை என்பதை அறிந்தேன். ஒழுக்கம் என்ற பெயரின் இந்த வன்முறையெல்லாம் தேவையா?   என்று அவர்களை நோக்கிக் கேட்கத் தோன்றுகிறது. 

 “மாலை மலரும் நோய் “ என்ற காமத்துப் பால் உரைநூலை வாசிக்கையில் எனக்கும் என் தோழிக்கும் இடையிலான உறவை  மேலும்  மேம்படுத்தும் என்று நினைக்கிறேன். 

மனுஷ்ய புத்திரன், சுகுமாரன் ஆகியோரது கவிதைகளை ரசித்துச் சுவைத்து இசை எழுதிய இருக்கும் கட்டுரைகள் ஒரு சக கவிஞனுக்கு மரியாதை என்பதைக் கடந்து அவர்களது படைப்பின் மீது ஒரு சமகால கவிஞன் கொண்டிருக்கும் காதல் என்றே சொல்லலாம், பாரதி இந்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம்! 

வார்த்தையில் வாழ்தல் என்ற கட்டுரை, ஜி நாகராஜனின் “மனிதன் மகத்தான சல்லிப்பயல்” என்ற தொடர், பொன் மொழி என்பதில் தொடங்கி. ஒளவை, கம்பர், பாரதி, ஆத்மாநாம், கலாப்ரியா, சுகுமாரன், மனுஷ், ஷங்கர்ராம சுப்பிரமணியன் எனக் கால வித்தியாசமின்றி கவிஞர்களின் கவிதைகள் பொன் மொழிகளாக ஆகுவதையும் பலர் அதைப் பற்றிப் பேசி பரவலாக்கும் போக்கையும் குறிப்பிடுகிறார், இக்கட்டுரையைப் படித்து முடித்த போது  நகுலனின் “இருப்பதற்காக வருகிறோம் இல்லாமல் போகிறோம்” என்ற கவிதை வரி, பொன்மொழி ஆகும் தகுதியைப் பெற்றது தானே என்ற உணர்வை ஏற்படுத்தியது. மறதி ஒரு தேசிய வியாதியாக இருக்கும் போது, கவிஞன் மட்டும் விதிவிலக்கா என்ன? 

எல்லாரைப் போலவும் வண்ணதாசனும், கல்யாண்ஜியும் வேறு வேறு நபர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த காலம் ஒன்றுண்டு, எனக்குள் இருக்கும் பல குழந்தைகளுள் இந்த பிழையை இலக்கிய தேடல் நிறைந்த குழந்தை புரிந்தமைக்காக வண்ணதாசனும், கல்யாண்ஜியும் என்னை மன்னிக்க வேண்டும், இசையை ‘சத்யன்’ என்று அழைத்த வண்ணதாசனால் இதையும் மறக்க/மன்னிக்க  முடியும் என்றே நினைக்கிறேன்.  மற்றபடி கல்யாண்ஜி எழுதிய கவிதைகளை படித்திருந்தாலும் அவற்றைப் பற்றி எவ்வித விமர்சனமும் எழுதியதில்லை, “என்ன அப்படி பாக்காதீங்க சத்யன்” என்ற கட்டுரை எனக்கு  கல்யாண்ஜி பற்றி எழுத வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. நன்றி சத்யன். 

ஆண்பால்-பெண்பால்-அன்பால் என்ற கட்டுரையில், சமூக முன்முடிவுகளைக் கேள்விக்குட்படுத்திக் கொண்டே அன்பைப் பற்றிப் பேசுகிறார் இசை, அந்த கட்டுரையின் முடிவு கவிஞர்களுக்கு ஆதரவாக முடிகிறது, “ஒரு கவிஞனின் எல்லாப் பித்தலாட்டங்களையும் பொறுத்துக்கொண்டு எப்போதும் அவனை ஏந்திபிடிக்க எல்லா பருவத்திலும் ஒருத்தி இருக்கிறாள். அதன் பொருட்டே அவன் காணி மும்மாரி காண்கிறது.”


இளையராஜாவை பிடித்தவர்களுக்கு மிஷ்கினையும் பிடித்திருக்கிறது, நான் இசைப் புயலின் ரசிகன் என்பதாலோ என்னவோ இவர்கள் இருவரது படைப்புகளையும் கொண்டாடும் பக்குவமும் மனநிலையும் எனக்கு வாய்க்கவில்லை, ரசிக்கும் பொறுமையுமில்லை. ‘தொப்பிக்குள் கோழிக்குஞ்சு வந்துசேரும் வழி’ என்ற கட்டுரையில் மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” திரைப்படம் குறித்து விமர்சனத்தோடு கூடிய கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார், எனக்கு அக்கட்டுரை ஆர்வமூட்டவில்லை.  சலபதி எழுதிய ‘திரை எனும் கொல்லிப்பாவை’ கட்டுரைதான் இதைப் படித்த சமயத்தில் ஞாபகம் வந்தது. தமிழ் அறிவாளர்கள் மாய்ந்துமாய்ந்து சினிமா பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏன் என்று புரியவில்லை. 

கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களிடம், சலபதி என்னை இப்படியாக அறிமுகம் செய்தார், “அகில உலக ரசிகர் மன்ற தலைவர்” என்றார், இதைக் கேட்டதும் எனக்குள் இருந்த சலபதி ரசிகன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். சலபதியின் “எழுக, நீ புலவன்!” நூல் பற்றிய கட்டுரையில் நூல் பற்றியும் பாரதி பற்றியும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில், சலபதி அளிக்கும் சான்று பட்டியல்கள் மிரளவைப்பதாகவும், “கல்லாதது உலகளவு” என்ற இன்னொரு செய்தியையும் அவை நமக்களிப்பதாகவும் தெரிவிக்கிறார் இசை. எனக்குள் இருக்கும் சலபதி ரசிகன் தன்னை தானே தட்டிக் கொடுத்துக்கொண்டான், சலபதியின் மாணவன் தன்னை நிரூபிக்க மெனக்கெட வேண்டும் போலிருக்கிறது. இதே நூலுக்கு நான் எழுதிய அறிமுகத்தையும் இக்கட்டுரை எனக்கு நினைவூட்டியது. 

காமத்துப் பால் குறித்து எழுதியதை ரசமான அனுபவம் என்று சொல்லி, சலபதி, பழ.அதியமான் , பெருமாள் முருகன் ஆகியோருடனான உரையாடலில் கிடைத்த ஆனந்தமும் பலமும் அளப்பரியவை என்று கூறி என்னுரையில் இவர்கள் மூவருக்கும் வந்தனம் செய்கிறார் இசை.  இந்த இன்பத்தை ஓரளவுக்கு நானும் உணர்ந்துள்ளேன். 

நிறையப் படிக்க வேண்டும், இன்னும் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும், குறைவாக எழுதவேண்டும், எழுத்தில் நகைச்சுவையும் ததும்ப வேண்டும், காமத்துப் பால் படித்து தோழிக்குச் சொல்ல வேண்டும், கவிதைகள் வாசித்து ஒரு கவி பார்வையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் எனப் பல “வேண்டும்”களை எனக்குள் ஏற்படுத்திய இசைக்கு இந்நேரத்தில் நன்றி. 



Comments