சோழர்கள் இன்று

    




6 ஆம் வகுப்போ 7 ஆம் வகுப்போ படிக்கும்போது தஞ்சாவூர் சென்றிருக்கிறேன், பெரிய கோவிலை காட்டி ராஜராஜன் கட்டியது என்றபோது வியந்திருக்கிறேன், நந்தியின் காதில் பக்தர்கள் ஏதோ சொல்லி சென்று கொண்டிருந்தார்கள், கோவிலின் பின் புறத்தில் மிக சிறிய துளையில் ஒருவர் ஊசியை நுழைத்து சோழர்களின் பெருமையை வெளிநாட்டவருக்கு சொல்லி கொண்டிருந்தார், நகைப்பாட்டினமும் சுனாமியால் சிதைவடைந்த கடலோர பகுதிகளையும், அரசு அமைத்த பேரிடர் பாதுகாப்பு பகுதிகளையும் காண முடிந்தது. பிரமாண்டங்கள் பல கண்டும் அந்த பயணத்தில் என்னை கவர்ந்தது தலையாட்டி பொம்மைகள் தான். தஞ்சை குறித்த நினைவு இப்படியான ஒன்றாக தான் என் மனதில் விரிகிறது. 


ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு Escape from Rome: The Failure of Empire and the Road to Prosperity என்ற நூலை படிக்க சொல்லி ஜெயன் எனக்கு அனுப்பி இருந்தார், பாதி படித்துவிட்டு வேறொரு நூலுக்கு தாவி இருந்தேன். ரோம் பேரரசின் வீழ்ச்சியை அதன் காரணங்களை அந்நூல் பேசியது. முற்கால தகவல்கள், வரைபடங்கள், ஓவியங்கள் என ஆதார தரவுகள் நிரம்பிய ஆய்வு நூல் அது. ஒரு பேரரசு எழுந்ததையும் வீழ்ந்ததையும் நாம் அப்படி தான் அறிந்துகொள்ள வேண்டும்.  ஆனால் ஒரு பேரரசு பற்றி அப்படியான புத்தகங்கள் தமிழில் எழுதப்பட்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற ஏக்கத்தை அந்நூல் உருவாக்கி இருந்தது. 


Noboru Karashima எழுதிய ஆய்வு கட்டுரைகளையும் ஜெயன் தான் எனக்கு அறிமுகம் செய்தார், ப்ரஹ்மதேய நிலங்கள் தொடங்கி சோழர் கால நிலவுடைமை சமூக நிலைமைகளை அதன் மூலம் அறிய முடிந்தது. சோழர்களின் வணீகம், அயல் வர்த்தக உறவுகள் போன்றவை குறித்து எனக்கு ஏற்பட்ட புரிதல்கள் எல்லாம் இதன் மூலம் ஏற்பட்டவையே. 


பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்த சமயத்தில் படித்துவிட்டு தான் படம் பார்க்க வேண்டும் என்ற வைராக்யத்தில் ஒரு வாரம் அமர்ந்து இரண்டு பாகங்கள் வாசித்தேன், படித்த பகுதி வரை திரைப்படம் பிடிக்கவில்லை, அதனால் அடுத்த பாகத்திற்காக எந்த முன் முயற்சியும் எடுக்கவில்லை. சோழர்கள் பற்றிய ஒரு மேம்போக்கான சித்திரத்தை நான் பெற்று கொண்டது இப்படியாக தான். 


என்னுடைய இந்த சோழ சித்திரத்தில் மேலும் சில வரிகளை தீட்டி இருக்கிறது சமீபத்தில் வெளியான ‘சோழர்கள் இன்று’ புத்தகம். தமிழ்நாட்டு மன்னர்கள் குறித்த ஒரு அறிமுகத்தையும், சோழர்களின் ஆட்சி பற்றி சில அவதானிப்புகளையும், நிர்வாகம், வணீகம், நீர் மேலாண்மை, கலை, போர் பற்றிய செய்திகளையும் இந்நூல் வழங்குகிறது. 


ரவிக்குமார், அ. கா. பெருமாள், நொபோரு கராஷிமா, ஆ. சிவசுப்பிரமணியன்  ஆகியோரின்  கட்டுரை மட்டும் இந்நூலில் இடம்பெறாமல் போயிருப்பின் இது சோழர்கள் பற்றிய நவீன கட்டுரை வடிவிலான மெய்கீர்த்தியாக தான் அமைத்திருக்கும். 90% நூல் சோழர் புகழ் பாடுவதாகவும்  10% விமர்சிப்பதாகவும் அமைந்திருக்கிறது. சில முக்கியமான ஆளுமைகளிடம் நேர்காணலோ கட்டுரையோ கேட்டு அதனை இத்தோடு இணைத்திருக்கலாம் என்ற உணர்வு, மதன் கௌரி,ஹேமா ராகேஷ் கருத்தை எல்லாம் பதிவு செய்திருந்த போது ஏற்பட்டது. குறிப்பாக ஆர். பாலகிருஷ்ணன், தீ.ஹேமமாலினி, ஸ்டாலின் ராஜாங்கம், காமினி தண்டபாணி ஆகியோரது கட்டுரைகள் எதிர்பார்த்து இதில் இடம்பெறாமல் போனது ஏமாற்றம் அளித்தது. 


சோழர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை உறவுகள், தென் கிழக்காசிய நாடுகளுடனான வணீகம், வர்த்தக குழுக்களுக்கு அவர்கள் அளித்த ஆதரவு, வர்த்தகத்தை நிலைநாட்ட மேற்கொண்ட போர், வெளியுறவு கொள்கை, இந்திய பெருக்கடலில் அவர்கள் கட்டுப்படுத்த  மேற்கொண்ட முயற்சிகள், அதன் மூலம் ஏற்பட்ட திருமண உறவுகள் போன்றவற்றை பேசும் பகுதிகள் சுவாரசியமானவை. மேலும் ஆய்வுகளை வேண்டி நிற்பவை. 


கலை, இசை, போர் , நீர் மேலாண்மை, போன்ற உள்நாட்டு  அம்சங்களை பேசுவது ஒரு வகை சலிப்பை ஏற்படுத்தினாலும் புது விஷயங்களையும் அறியமுடிந்தது. சில கட்டுரைகள் உரையாடல் வடிவில் மாற்றப்பட்டு, புரிந்துகொள்ள எளிமையாக இருந்த அதேவேளையில்,  கேள்விக்கு சமந்தமற்ற பதில்களையும்  சில இடங்களில் படிக்க முடிந்தது.


ரவிக்குமார் , அநிருத் கனிசெட்டி, பேராசிரியர் எஸ்.நீலகண்டன், ஹெர்மன் குல்கே, அசோக் வர்தன் ஷெட்டி, ஆகியோர் கட்டுரை தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த கட்டுரைகள். சோழர் களங்கள்,  சோழ தூதர்கள் ஆகிய பகுதிகள் புதிதாக இருந்தன. சோழ தூதர்கள் பகுதியில் கலைஞர், ஆர்தர் காட்டன், கே.கே.பிள்ளை ஆகியோர் பற்றிய ஒப்பீடு நன்றாகவே இருந்தது. 



சோழ மன்னர் ஓவியங்களை ட்ராட்ஸ்கி மருது அவர்களும், கட்டுரையாளர்கள் ஓவியங்களை சுந்தரன் முருகேசன் அவர்களும் அபாரமாக வரைந்துள்ளார். சிலரது கட்டுரைகளை விட இவர்களது கோட்டோவியங்கள் கவர்ந்தன. 


தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்ற பகுதியும், சோழர்கள் கதை என்ற பகுதியும் தென்னிந்திய மன்னர்கள் குறித்த நல்ல அறிமுகத்தை வழங்குகிறது . 


சமகால ஜனநாயக விழுமியங்களுக்களுடன் மாமன்னர்கள் கால விழுமியங்களை ஒப்பிட இயலாது, அடிமைகள் உழைப்பை மூலதானமாக்கி வளர்ந்த பேரரசுகள் அவை. அரசியல்-சமூகம்- பொருளாதாரம் என்று எந்த வகையிலும் பேரரசுகளின் காலத்தை பொற்காலம் என்று சொல்லவியலாது. 


சோழர்களை என் முன்னோர் என்று சொல்லி பெருமிதம் அடைய நவீன ஜனநாயக யுக மனிதனால்  இயலாது என்றே நினைக்கிறேன். புலி கொடியை அடையாளமாக கொண்ட ஒரு விடுதலை இயக்கம், நெகிழ்வுத்தன்மையற்று பெருமிதம் பேசியே வீழ்ந்து. பழமையின் மீது நாம் கொள்ளும் பெருமிதம் எதிர்காலம் பற்றிய சிந்தனையை முடக்குகிறது. பிற்கால சோழர்கள் எழுச்சிக்கு காரணமாக அவர்கள் கொண்டிருந்த எதிர்காலம் குறித்தான அபிலாஷையாக தான் இருந்திருக்க முடியும். அத்தகைய எதிர்காலம் குறித்த சிந்தனையை நாமும் ஏற்படுத்தி கொள்வது தான் அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 


சோழர் கால செங்கோல் என்று  சொல்வதை அப்படியே நம்பி இந்துத்துவ பெருமிதம் பேசும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வகையில் இதுபோன்ற அறிமுக நூல்கள் உண்மை நோக்கிய  நமக்கான தேடலை உந்தி தள்ளும் சாத்தியங்களை கொண்டவை. பழமையில் இருந்து பாடம் கற்கவேண்டியாவது நாம் அவைகளை பற்றி கற்க வேண்டியுள்ளது. இந்துத்துவ தேசியவாத கருத்துநிலை கோலோச்சும் காலத்தில் மெய்யான பழமை அறிதல் இன்றியமையா ஒன்றும் கூட.


நிறை குறைகளுடன் ‘சோழர்கள் இன்று’ தொகுப்பை மதிப்பிட்டால், மாபெரும் தமிழ் கனவும், தெற்க்கலிருந்து ஒரு சூரியனும் எப்படி அண்ணா, கலைஞர் குறித்த அறிமுக நூல்களோ அதை போலவே சோழர்கள் பற்றி விரிவான அறிமுகத்தை இந்நூல் வழங்க முற்படுகிறது. சிறந்த நூல்களை உருவாக்க இம்முயற்சி உதவும். 


சிறுவயதில் பார்த்த தஞ்சையை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசையை இந்நூல் எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.  


 







Comments