வ.உ.சி - பெரியார் கண்மூடித்தனமான எதிர்வினைக்கு மறுப்பு
“பெரியாரிய வரலாற்று திரிபாளர்கள்” என்று முத்திரையைக் கையில் தூக்கிக் கொண்டு முகநூல் அமெரிக்கர் ஒருவர் வழக்கம் போல் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அமெரிக்கருக்கு ஆதர்சமான மூத்த பத்திரிகை வியாபாரி ஒருவர் நடத்தும் இணைய இதழில் வெளியான பேராசிரியர் கல்யாணராமன் எழுதிய கட்டுரையைப் படித்ததால் அவருக்கு மூக்குமேல் கோபமும் , வயிற்று வலியும் வந்துள்ளது.
சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்?’ என்ற ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ப. திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால், எவர் தமிழர்?” என்ற நூலை முதன்மையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வரங்கு இது என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.
கல்யாணராமன் கட்டுரையில் “திலகரின் சிஷ்யர், காந்தியைப் பின்பற்ற முயன்றவர், பாரதியாரின் மாமா எனப் பல நிலைகளில் வ.உ.சி. பயணித்திருந்தாலும், இறுதியாக அவர் - பெரியாரின் திசை நோக்கியே வந்துகொண்டிருந்தார்” என்ற இடம் அமெரிக்கருக்கு வயிற்றுச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது போல். வயிறு வலி தாங்காமல் கட்டுரை முழுக்க கத்தி கதறுகிறார். பாவமாகத் தான் இருக்கிறது, தனது தர்க்கம் சரி என்று நிறுவ திருமாவேலன், சலபதி ஆகியோரை வரலாற்று திரிபாளர்கள் என்கிறார், முத்திரை மனிதர். இந்துத்துவர்களோடு பெரியாரிய வரலாற்று ஆய்வாளர்களை ஒப்பிடுகிறார். இவருக்கெல்லாம் எதிர்வினை எழுத வேண்டுமா என்ற எண்ணம் ஒருபக்கம், அவதூறு செய்கிறாரே என்ற கோபம் ஒரு பக்கம். பெரிய திட்டமிடல் எதுவும் இன்றி, சாதாரணமாக அனைவரும் அணுகும் தரவுகளைக் கொண்ட இந்த எதிர்வினை எழுதுகிறேன்.
சுயமரியாதை இயக்கம்(1925) தொடங்கப்பட்டு மூன்றாண்டு கடந்திருந்தது, பெங்களூருவில் காந்தி- பெரியார் இடையில் நடந்த சந்திப்பு(1927) எந்த முடிவுமின்றி நிறைவுற்றிருந்தது. காந்தி வருணாசிரம கொள்கையைக் கட்டி பிரண்டு கொண்டிருந்த சமயம் அது, பெரியார் பகுத்தறிவு கொள்கையைப் பரப்பி வந்தார்.
1928 ஜனவரி 26 ‘குமரன்’ இதழில் பெரியவர் வ.உ.சி , “மனுஸ்மிருதி கொடுமை நிறைந்த நூல், எந்த நூலாயினும் குற்றமிருந்திருக்குமானால் அதனைத் தள்ளத் தயங்கக் கூடாது, நமக்குக் கடவுள் பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறார், அதனைக் கொண்டு ஆராய்வோம்.. கடவுள் எழுதினார் என்று கூறப்படும் நூலில் பிழையிருக்குமானால் அதனையும் தள்ளவேண்டியதுதான்….” கண்ணைத் திறந்து இந்த வரிகளைப் படிப்பவர்களுக்கு வ.உ.சி அவர்கள் 1928ல் எடுத்திருந்த நிலைப்பாடு புரியும்.
கடுஞ்சைவர் vs சீர்திருத்தச் சைவர் விவாதம் ஏற்படக் காரணமே, பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம் தான், பார்ப்பனர் அல்லாதார் அரசியலில் பெரியாரின் வருகை குடுப்பிடத்தகுந்த நிகழ்வு எனலாம். அது சைவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுயமரியாதை இயக்கம் மீது வஉசி-க்கு நல்ல அபிப்ராயமே இருந்தது, 1929 ம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலியில் நடந்த சைவ பெரியார் தனி கூட்டத்திலிருந்து வஉசி வெளியேறியமைக்கு காரணம் “சைவத்தில் சீர்திருத்தம் வேண்டும்” என்று அவர் கூறியதை அக்கூட்டம் ஏற்றுக் கொள்ளாததால்தான். சைவத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று வஉசி சொல்லியது எதனால்? அப்போது நிலவிய சமூகச்- அரசியல் சூழல் தானே காரணமாக இருக்க முடியும். நிலை இப்படி இருக்கையில் பெரியாரின் திசை நோக்கியே வ.உ.சி வந்துகொண்டிருந்தார் என்ற கூற்று எப்படி தவறாகும்.
வ.உ.சி மறைந்த போது காந்தி, நேரு, ராஜகோபாலாச்சாரி போன்ற தேசிய விடுதலை இயக்க தலைவர்கள் ஒரு இரங்கல் உரை கூட எழுதாமல் போனதேன்? “ராஜாஜிக்கு வகுப்புரிமை பிரச்சனையின் காரணமாக வஉசி மீது வெறுப்பு” இருந்ததாக மபொசி தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார், வகுப்புரிமை பிரச்சனை எழுந்தது எதனால்? இட ஒதுக்கீடு கேட்டால் ராஜகோபாலாச்சாரிக்கு எப்படி இனிக்கும்!
நீதிக் கட்சி மாநாடுகளில்(1925,1926) வ.உ.சி அவர்கள் கலந்து கொண்டது உண்மை, 1927 சேலம் மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரை ஆதரித்து அவர் ஆற்றிய தலைமையுரை உண்மை, 1928ம் ஆண்டு செட்டிநாட்டுக்குச் சென்று சிறப்புரையாற்றிய வஉசி அவர்களது உரையில் சுயமரியாதை கருத்துக்கள் நிறைந்திருந்தது உண்மை. விகிதாச்சார அடிப்படையில் அரசியல், கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டது உண்மை. (பார்க்க, சலபதி எழுதிய திராவிட இயக்கமும் வேளாளரும்(2021), வ.உ.சி வாராது வந்த மாமணி(2022) )
இவை எல்லாம் 1920-களின் பிற்பகுதியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1920-களின் பிற்பகுதியில் நடந்த அரசியல் மாற்றங்களை அமெரிக்கர் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன்.
வ.உ.சி மறிந்த பிறகும், தேச விடுதலைக்கு முன்னோடியாக விளங்கிய வ.உ.சி யின் பங்கை இதன் காரணமாகத் தான் ‘ஜெயபாரதி’ போன்ற காங்கிரஸ் ஆதரவு பத்திரிகைகள் மறைத்தனவா!
ஐரோப்பியர் நலனைப் பிரதிபலித்த மெட்ராஸ் மெயில் கூட ஓரிரு வரிகள் குறிப்பு எழுதி இருக்கிறதே!!
“சிதம்பரம் பிள்ளை விஷயத்தில் மௌனம் சாதிக்கும் ஜாதிப்பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கை கண்ட பின்னாவது பார்பனரலால்தாருக்கு ஆத்திரம் பொங்குமா” என்று 29-11–1936 குடிஅரசு இதழ் தலையங்கம் எழுதியதே, அதன் நியாயமான காரணங்களை மறுக்க முடியுமா?
பார்ப்பனர் அல்லாத ஒருவர் தேச விடுதலைக்காகப் பல இன்னல்களைச் சந்தித்தும் சில இதழ்கள் ஏன் மதிக்கவில்லை என்ற கோபம் குடிஅரசு இதழின் தலையங்கத்தில் வெளிப்படுவது கண்கூடு.
தலை சிறந்த அறிஞர்களை ஏதோ வரலாற்று திரிப்பார்கள் என்று இவர் சொல்வது உண்மையிலேயே முகம் சுளிக்க வைக்கிறது. கட்டுரையின் முடிவில் தரவுகள் மாறினால் முடிவுகள் மாறும் என்று மிக சாதூர்யமான நிலைப்பாட்டை எடுக்கிறார், அதற்கு முன் ஏற்கனவே இருக்கும் தரவுகளைக் கொஞ்சம் ஊன்றிப் படித்திருக்கலாமே அய்யா !!!
சலபதி தொகுத்துப் பதிப்பித்த “வ.உ.சி வாராது வந்த மாமணி” நூலை இவர் படித்துள்ளாரா? வ.உ.சி யின் சிவஞான போத உரை நூலையாவது?, MSS பாண்டியன் எழுதிய Notes on the transformation of the Dravidian Ideology கட்டுரையையாவது? பொதியவெற்பன் எழுதிய “பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும்” நூலையாவது? குறித்த பட்சம் திருமாவேலன் எழுதிய நூலையாவது இவர் படித்து சான்றுகளைப் பார்த்து எதிர்வினை ஆற்றுகிறாரா என்று பார்த்தால் எதையும் காணோம்.
இவருக்கு ஜால்ரா கொட்ட சில ஜோம்பிகள், அதைப் படிக்கச் சொல்லியும் பகிரச் சொல்லியும் ஒரு நவ நாகரீக பிச்சை கேட்பு , வெட்கம், அறிவு நாணயம், என்பது துளியும் இன்றி அடிமைகள் போல் அங்குக் குத்தவைக்கும் ஒரு கூட்டம்!!!!
Comments
Post a Comment