ஏ.கோவிந்தசாமி: உதயசூரியன் தந்த கொள்கைக் குன்று!




ஏ.கோவிந்தசாமி:  உதயசூரியன் தந்த கொள்கைக் குன்று!


“உள்ளமெல்லாம் இன்ப வெள்ளம் பொங்கவே ஓடி வருகிறான்... உதயசூரியன்..!”  என்று நாகூர் ஹனிபா கரகர குரலில் கர்ஜிக்கும்போது கழகத் தொண்டனுக்கு உடல் சிலிர்த்து நிற்கும். அப்படி, தி.மு.க.வின் அடையாளங்களுள்  ஒன்றாகத் திகழும் ‘உதய சூரியன்’ சின்னத்தில் முதன்முதலாக நின்று வென்றவர், ஏ.கோவிந்தசாமி.


அனைவராலும் அன்புடன் ‘ஏ.ஜி’ என்று அழைக்கப்பட்ட கோவிந்தசாமி, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மெட்ராஸ் மாநில சட்டமன்றத்தில் ஒலித்த முதல் திராவிடக் குரல்; அண்ணா அமைத்த ‘முதல்’ அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சர்; அண்ணாவுக்குப் பிறகு கலைஞரை முதலமைச்சராக அடையாளம் காட்டியவர்களுள் ஒருவர்; நெருக்கடியின்போது கழகத்தில் நுழைந்து, துயரங்கள் பல சந்தித்து, பாதிப்புகள் எதுவும் நேராமல் கழகத்தைக் காத்த கொள்கைச் செம்மல்.   

தி.மு.க., சட்டமன்றம் நுழையும் முன்பே தி..மு.க.வின் குரலைச் சட்டமன்றத்தில் நுழைத்தவர் ஏ.கோவிந்தசாமி. குலக் கல்வித் திட்ட எதிர்ப்பு, தமிழ்நாடு பெயர்மாற்றக் கோரிக்கைக்கு ஆதரவு, ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற முழக்கம் போன்றவற்றை 1957 ஆம் ஆண்டுக்கு முன்பே சட்டமன்றத்தில் எழுப்பியவர் ஏ.ஜி..! இதன் காரணமாகத்தான் ராஜகோபாலச்சாரி, ஏ.ஜி அவர்களை 'எ லோன்லி வாய்ஸ்' (A Lonely Voice)  என்று நகைத்தார். ஆனால் அந்த ஒரு குரல் பின்னாட்களில் பெரும் குரலாக ஒலிக்கப் போவதை ராஜகோபாலச்சாரி அப்போது அறிந்திருக்கவில்லை.  


பதவி மறுத்த கொள்கைக் குன்று


1918 ஜூன் 15 ஆம் தேதி, ஆனையப்பர் - மீனாட்சி அம்மாள் இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றதும், ‘தென்னாற்காடு நிலக்கடலை சந்தைக் குழுவில்’ எழுத்தர் பணியில் சேர்ந்தார். தந்தை பெரியார் தலைமையில் நடந்த வகுப்புரிமை மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.


1951-ம் ஆண்டு  எஸ்.எஸ்.ராமசாமி அவர்களைத் தலைவராகவும், ஏ.கோவிந்தசாமியை பொதுச்செயலாளராகவும் கொண்டு 'தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ தொடங்கப்பட்டது. இக்கட்சி தி.மு.க., தி.க., ஆகிய சமூக இயக்கங்களின் ஆதரவோடு முதல் பொதுத்தேர்தலில் பங்கேற்றது.  தென்னாற்காடு மாவட்டம் விக்கரவண்டி தொகுதியில் நின்ற ஏ.கோவிந்தசாமி அவர்களை  ஆதரித்து பெரியாரும் கலைஞரும் பிரசாரம் மேற்கொண்டனர்.


1951 தேர்தலில் அந்தக் கட்சி 19 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது.  வென்றவர்களுள் பலர் ராஜகோபாலச்சாரி காட்டிய பதவி ஆசைக்காகக் கொள்கையைவிட்டு விலகினர். ஆனால் ‘கொள்கைக் குன்றம்’ ஏ.ஜி., பதவியை நிராகரித்து உழைப்பாளர் கட்சியிலிருந்து விலகி, 'உழவர் கட்சி'யைத் தொடங்கினார்.


தென்னகம் தனி திராவிடம்

 

காங்கிரஸ் கட்சியுடன் இணங்காத உறுப்பினர்களைச் சேர்ந்துகொண்டு, 'திராவிட பார்லிமென்டரி கட்சி' என்ற ஓர் அமைப்பைத் தொடங்கி தி.மு.க.வின் கொள்கைகளைச் சட்டமன்றத்தில் பேசி  வந்தார் ஏ..ஜி. சட்டமன்ற விவாதம் ஒன்றில் 'திராவிடமே என் குறிக்கோள். தென்னகம் தனி திராவிடமாக விளங்கவேண்டும்' என்றார்.


1953 ஆம் ஆண்டு கழகம், மும்முனைப் போராட்டத்தை அறிவித்தது. அண்ணா உட்படக் கழகத்தின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். கழகம் நெருக்கடியைச் சந்தித்தது. சிறை செல்லும் முன் ‘நம் நாடு’ இதழில் ஒரு கூட்டறிக்கை வெளியானது. அதில், ஏ.கோவிந்தசாமி அவர்களைத் தலைமை நிலைய பொறுப்பாளராக நியமிப்பதாகவும், கழகத் தோழர்கள் அவருக்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. கழகத்துக்கு வரும்போதே அனைவரது மதிப்பையும் பெற்று பொறுப்பாளராக வந்தவர் ஏ.ஜி.


உழவர் கட்சி உதயசூரியன்


1954 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட மன்றத் தேர்தலில் ‘உழவர் கட்சி’ சார்பாக ‘உதயசூரியன்’ சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். 1956 ஆம் ஆண்டு திருச்சி ‘திருப்புமுனை’ மாநாட்டில் கழகம் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்தது. அப்போது தேர்தல் அறிக்கை உருவாக்கும் குழுவில் முத்தமிழிறிஞர் கலைஞரோடு இணைந்து ஏ.ஜி அவர்களும் பணியாற்றினார்.


தேர்தல் ஆணையத்திடம் ‘உதயசூரியன்’ சின்னத்தை அண்ணா கேட்டுப் பெற்றதற்கு ஏ. ஜி., அவர்களும் முக்கியக் காரணமாக இருந்தார்.  கழகம் பங்கேற்ற முதல் தேர்தலில் அனைவருக்கும் உதயசூரியன் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும், இன்று வரை ஒரு முறைகூட முடக்கப்படாமல் கழகத்தின் அடையாளமாகத் திகழும் தேர்தல் சின்னத்தின் வரலாறு கோவிந்தசாமி அவர்களது உழவர் கட்சியிலிருந்துதான் தொடங்கியது.  


1957 தேர்தலில் வென்று சட்டமன்றம் நுழைந்த 15 தி.மு.க. வேட்பாளர்களுள் ஏ.ஜியும் ஒருவர். 1957-1962 வரையிலான காலகட்டத்தில் தி.மு.கழகத்தின் சட்டமன்றச் செயலாளராகப் பணியாற்றினார். 1961 ஆம் ஆண்டு தொழிற்சங்க செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


காக்கப்பட வேண்டிய கழகக் கட்டுப்பாடு


அண்ணா பெரியாருக்குக் காணிக்கையாக்கிய, 1967 பார்ப்பனர் அல்லாதார் அமைச்சரவையில் ஏ. ஜி. அவர்களுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டது. நந்தன் கால்வாய்த் திட்டம், மீன் பிடி துறைமுகம், பால் தூள் தொழிற்சாலை, கோழிப் பண்ணைத் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமைச்சராக இருந்து செயல்படுத்தினார். அண்ணா மறைந்த பிறகு கலைஞரை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தவர்களுள் ஏ.ஜி. முக்கியமானவர். பிறகு, முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையிலான அமைச்சரவையிலும் வேளாண்துறையிலேயே நீடித்தார்.


வயதில் இளையவராக இருந்தாலும் அவரது உழைப்புக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அமைச்சராக இருக்கும்போதே நோயுற்றார். 1969 மே மாதம், உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார். அண்ணா மறைந்த மூன்றே மாதங்களில் ஏ. கோவிந்தசாமி அவர்களும் மறைந்தார் என்பதால்தான், ‘இன்பம் தனியாக வரும், துன்பம் துணையோடு வரும்’ என்று கலைஞர் அப்போது இரங்கல் தீட்டினார்.


சென்னை பெசன்ட் நகர் சுடுகாட்டில் அரசு மரியாதையுடன் ஏ.ஜி. அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெரியார் மூத்திரச் சட்டியைச் சுமந்துகொண்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ‘கழக கட்டுப்பாடு காக்கப்படவேண்டும். அதுதான் மறைந்த அமைச்சர் கோவிந்தசாமிக்கு நாம் செய்யும் கைமாறு’ என்றார் கலைஞர். இளைஞர் தி.மு.க. சார்பில் ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.


“தி.மு.க. தொண்டனாக இருந்து கடமையாற்றுவதே எனது வாழ்நாள் லட்சியம்” என்று  சொன்ன ஏ. கோவிந்தசாமி  அவர்களின் வாழ்க்கை தி.மு.கழகம் கடந்து வந்த சுவடுகளை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

Comments