Midnight’s Machines: A Political History of Technology in India.






   “இந்த மொபைல் போன் வந்ததும் வந்துச்சு எல்லாரையும் கெடுத்துட்டு போய்டுச்சு, தடுப்பூசி போட்டு எல்லரையும் சாகடிக்க பாக்குறாங்க, அந்த காலத்துல நம்ம முன்னோர்கள் எல்லாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்தாங்க தெரியுமா, இந்த EVMல கணக்க மாத்தி தேர்தல்-ல ஜெயிச்சுட்டாங்க”  போன்ற தொழில்நுட்பத்திற்க்கும்  அறிவியலுக்கும் ஒவ்வாத வாதங்களை நாம் வருடம் முழுக்க பல விதங்களில் கேட்க முடியும்.



இந்தியா போன்ற காலனிய சுவடுகளைக் கொண்ட துணைக் கண்டத்தில் நவீனம் என்பது அரசு அதிகாரத்தால் மட்டுமே நிலை நிறுத்தப்பட்டு வந்தது.  நவீனத்தின் மூலம் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களும் அப்படியே செயல்படுத்தப்பட்டன. மேலிருந்து திணிக்கப்பட்ட மாற்றமாகவே அவை இருந்தது. காலனிய அரசு மறைந்த பிறகும் இந்த போக்கு தொடர்ந்தது. 



மக்களுக்கும் தொழில்நுட்பத்துக்குமான இணைப்பை அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துவதன் மூலம் உருவாக்க முடியும் என்று இந்திய அரசியலமைப்பு சபை நம்பியது அதனால் Article 51 A (h) to develop the scientific temper, humanism, and the spirit of inquiry and reform; என்ற சாராது அடிப்படை கடமையின் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது. ஆனால் அரசின் திட்டமிடல் மக்களைத் தொழில்நுட்பத்திற்கு அந்நியமாக்கியதே தவிர நெருக்கமாகவில்லை. சோலார் குக்கர், வானொலி, அணு ஆராய்ச்சி, இஸ்ரோ, தகவல் தொழில்நுட்பம், ஆதார், மோடி அரசின் திட்டங்கள் போன்றவை இங்கு செயல்படுத்தப்பட்ட விதத்தையும்  அவற்றைச் செயல்படுத்த அரசு ஆற்றிய பங்கினையும் ஒரு வரலாற்றுக் கதையாடலை அடிப்படையாகக் கொண்டு பேசுகிறது Arun Mohan Sukumar எழுதி இருக்கும்  Midnight’s Machines: A Political History of Technology in India. 




இந்நூலில் பல செய்திகள் சுவாரசியமானவை, இதன் அத்தியாயங்களும் தலைப்புகளும் அந்த காலகட்டத்தில் நிலவிய தொழில்நுட்பம் குறித்தான கருத்துக்களைத் தெரிவிக்கிறது. நேருவின் காலகட்டம் THE AGE OF INNOCENCE என்றும் இந்திரா காந்தியின் காலகட்டம் THE AGE OF DOUBT என்றும் 1990 களுக்கு முன்பான காலகட்டம் THE AGE OF STRUGGLE என்றும் அதன் பிறகான காலகட்டம் THE AGE OF REDISCOVERY என்றும் அழைக்கப் படுகிறது. 


பல நேரங்களின் அரசின் திட்டமிடல் மக்களின் அபிலாசைகளுக்குச் சற்றும் தொடர்பில்லாமல் இருந்து வந்திருப்பதை இந்நூலை வாசிக்கையில் உணர முடிகிறது.  முதல் முதலில் விறகடுப்பில் சமைப்பதைக் குறைக்க அனைத்து மக்கள் பயன்படுத்தும் விதத்தில் இந்திய அரசு  அறிமுகப்படுத்திய தொழிநுட்பம்:  சோலார் குக்கர். ஆனால் அதன் அன்றைய விலை 50 ரூபாய். யாராலும் வாங்கமுடியாமலும் முறையான வகையில் பராமரிக்கமுடியாமலும் மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். 


மக்களை அறவியல் மீது நம்பிக்கையுள்ளவர்களாக மாற்றாமல் தொழில்நுட்ப பரவல் சாத்தியமில்லை என்று அரசு முடிவெடுத்து  Community Development Scheme களை அரசு தொடங்கி இருந்தது, ஆனால் சோலார் குக்கர் போன்றவற்றின் தோல்வியும் சரியான கண்காணிப்பு இன்மையும் திட்டக் குழுவின் அணுகுமுறையும் இதை முற்றிலும் முடக்கிப்போட்டது. தொழினுட்பத்தை மக்கள்மயப்படுத்தும் முயற்சியின் தோல்வி மக்களுக்குத் தொழில்நுட்பங்கள் மீதிருந்த நம்பிக்கை இழக்கச் செய்தது. கணினி, அணு உலை, தடுப்பூசி  மீதான நம்பிக்கையின்மையை இது ஏற்படுத்தியது. வெகுஜன மக்களுக்குத் தொழில்நுட்பம் அச்சமூட்டும் ஒன்றாகவே பார்க்கப்பட்டது.  





இந்திரா காந்திய காலகட்டத்தில் Appropriate Technology இயக்கம் பெரும் தாக்கம் செலுத்தியது, மக்களுக்குத் தொழில்நுட்பங்கள் மீதான அச்சத்தை இது அதிகரித்து, சந்தேக உணர்வை ஏற்படுத்தியது. இந்தி மாநிலங்களில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் தோல்வி அடைந்தமைக்கு இந்த இயக்கமும் முக்கிய காரணமாக அமைந்தது. எமெர்ஜென்சியை தொடர்ந்து இந்திரா காந்தி சந்தித்த தேர்தல் தோல்விக்கு இவையும் காரணமாகக் கருதப்பட்டது. Liscence Rajன் உச்சம் அரசு சர்வாதிகாரத்தோடு சேர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. 




சந்தை பொருளாதாரத்தோடு சேர்த்தே தொழில்நுட்பமும் வெகுஜன மக்களிடையே பரவ தொடங்கியது வானொலி, கை கடிகாரம், போன்ற நுகர்வு சாதனங்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இது உலகமயமாக்கலோடு சேர்ந்தே நடைபெற்றது. பனிப் போரின் முடிவு இந்த போக்கிற்கு வினையூக்கியாக அமைந்தது. விவசாய துறையில் நவீன சாதனங்களை பயன்படுத்தப்பட்டன. பல மாநிலங்களில் இந்த பொருட்களை வாங்க மானியம் வழங்கப்பட்டது. 




90 களின் பிற்பகுதியில் தகவல் தொழில்நுட்ப துறையின் வருகை  பல்வேறு வேலைவாய்ப்புகளையும் புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப் படுத்தியது. மக்கள் பரவலாக நுக தொடங்கினர். தொலைக்காட்சி அத்தியாவசிய நுகர்வு பொருளாக மாறிப்போனது, இன்றைக்கு கைப்பேசி வந்தடைந்திருக்கும் இடம் தொழில்நுட்ப பரவலாக்கத்தைத் தான் நமக்கு உணர்த்துகிறது. ஆதார் முதல் வாங்கி சேவை வரை இன்றைக்கு அனைத்தும் கைவசமாகியுள்ளது. 



  தேர்தல்களைத் தொழில்நுட்பம் தீர்மானிக்கிறது, அரசியல் கதையாடல்களைக் கட்டமைக்க உதவுகிறது இன்றைக்குத் தடுப்பூசி போட்டதற்குச் சான்று கூட தொழில் நுட்பத்தின் மூலமே வழங்கப்படுகிறது. எந்த சமூக வலைத்தளம் பாஜகவின் கொள்கைகளைப் பரப்ப உதவியதோ அதுவே இன்றைக்கு அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறியுள்ளது. BBC Documentary, டிவிட்டர் ஊடகர்கள் முடக்கம்,  என அவர்களது சித்தாந்தங்களுக்கு இது அச்சமூட்டும் ஒன்றாக மாறியுள்ளது.  நேரு, இந்திரா காலத்தில் தொழில்நுட்பத்தின் மீது மக்கள் கொண்டிருந்த மனநிலை இப்போது மாறி இருந்தாலும், மீண்டும் அத்தகைய மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த பாஜக அரசு முயல்கிறது. ஒரு வட்டத்தின் முடிவில் தொடங்கிய இடத்திற்கே வர முயல்கிறது பாஜக, என்ற எச்சரிக்கையோடு இந்நூல் நிறைவடைகிறது. 




மேல் குறிப்பிட்ட அனைத்தும் இந்நூல் பற்றிய மிகக் குறைந்த அளவிலான தகவல்கள் தானே தவிர முழுமையானவை அல்ல. பல தனிமனிதர்களின் உழைப்பு இந்நூலில் மிகைப்படுத்தப் பட்டிருப்பது ஒரு வகையில் தேவையற்ற ஒன்று எனத் தூண்டியது. 




பல புதிய தகவல்கள், சுவாரசியமான நடை என இந்நூல் நல்ல அறிவார்ந்த வாசிப்பனுபவத்தை வழங்கியது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் அவசியம் வாசிக்கலாம்.  




Comments