ஜூன் 30 2001
கலைஞர் நூற்றாண்டில் சில விஷயங்களை செய்யலாம் என்று நினைத்து செய்து கொண்டிருந்தேன், பழைய செய்திகளை படிப்பதும் அந்த காலகட்டம் பற்றி சிந்திப்பதும் அன்றைய அரசியல் நிலைமைகளை புரிந்துகொள்வதுமாக நாட்கள் கடக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதும், அதை தொடர்ந்து இணையத்திலும் வெளியிலும் நடைபெறும் விவாதங்களையும் மனதில் ஓட்டிப்பார்த்து கொண்டிருக்கையில், தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் பற்றி ஆய்வு செய்த Francis Codyன் மற்றுமொரு சமீபத்திய ஆய்வு நூலான “The News Event”ஐ Skim செய்ய நேர்ந்தது.
2001 ஜூன் மாதம், 30 அன்று நாளிரவு நடந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களது கைதையும் அந்த அராஜக காட்சிகளை சன் டிவி ஒளிபடமெடுத்து நாள் முழுக்க ஒளிபரப்பி நாடுமுழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிகழ்வை ‘news event’ என்ற வரையறைக்குள் கொண்டு வந்து, அது போன்று கடந்த இரண்டு பத்தாண்டுகளில் நடைபெற்ற முக்கியமான News Eventகளை பற்றிய ஆய்வாக அந்நூல் தென்பட்டது. (படித்துவிட்டு நூல் அறிமுகம் எழுதுகிறேன்)
காலச்சுவடு செப்டம்பர்- அக்டோபர் 2001 இதழின், முகப்பு ‘பாசிசத்தின் பேய் நகங்கள்’ என்பதை படித்துவிட்டு உள்ளே நுழைந்தேன், தேர்தலில் நிற்காத ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் காவல்துறை உதவியுடன் நிகழ்த்தி கொண்டிருந்த அரச பயங்கரவாதங்களை கண்டித்தும், கலைஞரின் கைதை பாசிசத்தின் அறிகுறியாக சுட்டிக்காட்டியும், மீடியா இதை எல்லாம் மக்களுக்கு தெரிவிக்கும் விதத்தை அடிப்படையாக கொண்டும் “அரச பயங்கரவாதமும் மீடியா பயங்கரவாதமும்” என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்.
இதே இதழில் சுந்தர ராமசாமி எமெர்ஜெண்சி கால நினைவுகளை கொண்ட “இருண்ட காலம்: ஜூன் 26, 1975 – ஜூன் 29, 2001:
பயம் – நனவிலும் - கனவிலும்” என்ற கட்டுரையும் வெளியாகி இருந்தது. கலைஞரின் கைது பற்றி எந்த தகவல்களையும் அது கொண்டிருக்கவில்லை என்றாலும், அவசர நிலை பிரகடன காலத்தின் கோரமுகங்களை அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. சாமானியன் பார்வையில் கலைஞரின் கைதை ராஜேந்திர சோழன் என்ற ஒருவர் கொச்சையாக எழுதி இருந்தார், அது திமுக எதிர்ப்பு கட்டுரை என்பதை விட பாசிச ஆதரவு கட்டுரை என்றே உணர முடிந்தது. ‘நாடகத்தின் வரலாறும் வரலாற்றின் நாடகமும்’ என்ற தலைப்பிலான தேவிபாரதியின் கட்டுரை மட்டுமே அந்த கைதுக்கு நியாயம் செய்யும் சொற்கோர்வையை கொண்டிருந்தது. நிற்க.
Frontline இதழின் 20-07-2001 என்ற பாதிப்பை பார்த்தேன், கலைஞர், மாறன், டி , ஆர் பாலு ஆகியோரின் கைதை கண்டித்து ‘Tamilnadu’s Shame’ என்ற கவர் ஸ்டோரியை அவ்விதழ் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அச்சமயத்தில் இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய திரை பிரபலங்களும் கைதினை கண்டித்திருந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே முதலமைச்சராக, ஜெயலலிதா பதவியேற்க உதவிய விந்தை ஆளுநர் பாத்திமா பீவி ராஜினாமா செய்திருந்தார், ஜூலை 2ம் தேதி தேர்தல் வெற்றி என்ற வேண்டுகோள் நிறைவேறியமைக்காக கேரளாவில் இருக்கும் ‘ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு’ ஒரு யானையை பரிசாக வழங்கி இருந்தார், ஜெயலலிதா. அந்த படமும் Frontline இதழில் வெளியாகி இருந்தது.
நெஞ்சுக்கு நீதி ஆறாம் பக்கத்தில் கலைஞர் 16, 17 ம் அத்தியாயங்களில் ‘காரிருளில் காட்டாட்சி தர்பார்’ என்ற தலைப்பிலும் ‘நீ எங்கிருந்தாலும் வாழ்க என்றார் அண்ணா’ என்ற தலைப்பிலும் இந்த கைது குறித்தான நினைவுகளை எழுதி இருந்தார். அந்த கைதின் காரணமாக உயிர்நீத்த தொண்டர்களின் பெயர்கள் உட்பட அனைத்தும் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்தது.
ஊடகவியல் ஆய்வாளர் Nalini Rajan தொகுத்திருந்த ‘21St Century Journalism in India’ என்ற நூலில் கலைஞர் வாழ்கை வரலாற்றாசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், “My Days at Sun Tv” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை கலைஞரின் கைது என்பது தொடக்கமாக தான் இருந்தது, 2004 வரை இது போன்ற ஊடக/அரசியல் கைதுகள் தொடர்ந்த வண்ணமே இருந்ததை சுட்டிக்காட்டி, சன் டிவி கலைஞரின் கைது நிகழ்வை நாள் முழுக்க ஒளிபரப்பியதை நியாயப்படுத்தியும், அதை தொடர்ந்து பேச்சுரிமைக்கு எதிராக நடைபெற்ற ஜெயலலிதா அரசின் சர்வாதிகார செயல்பாடுகளுக்கு எதிராக சன் டிவி விளங்கியதையும் குறிப்பிட்டு எழுதி இருந்தார். (ஊடகத்துறையில் இருப்பவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய கட்டுரையும் கூட)
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதும், 2001 கலைஞரின் கைதை நக்கலிடித்து பதிவிட்டவர்களின் மனநிலையை நினைத்து முகம்சுளித்து கொண்டேன், அப்போதிருந்த அரசியல் நிலைமை இன்றைக்கு முற்றிலும் மாறியிருக்கிறது என்றாலும் சில ஒற்றுமைகளை வேற்றுமைகளையும் இரு நிகழ்வுக்கு இடையிலும் பார்க்கமுடிகிறது.
கலைஞர் கைதின் போது திமுக மாநிலத்தில் எதிர்க்கட்சி, ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்த கட்சி, கவர்னர் ஜெயலலிதா அனுதாபி. இன்றைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் போது திமுக மாநிலத்தில் ஆளும்கட்சி ஒன்றியத்தில் எதிர்க்கட்சி, கவர்னர் ஒன்றிய அரசின் அடிமை. இரண்டு நிகழ்வுகள் நடைபெற்ற சமயத்திலும் பிற மாநில தலைவர்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பிய நிகழ்வு இங்கு கவனிக்கத்தக்கது. கலைஞர் கைதின் போது விசிக தலைவர் டாக்டர் திருமா, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார்.
இரண்டு கைதுகளும் தன்மையால் வேறானவை என்றாலும், ஒப்பிட தக்கவல்லவை என்றாலும், ஒன்றிய அரசும் ஒன்றிய அரசின் கைக்கூலியாக இருக்கும் ஆளுநரும் இவ்வளவு அதிகாரம் கொண்ட அதிகார மையங்களாக உருவெடுத்திருப்பதும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலிமை குன்றிய ஒன்றாகவும் உருவெடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.
இக்கட்டுரை எவ்வித நோக்கமும் இன்றி எழுதி பார்க்க எண்ணி எழுதிய ஒன்றே, எந்த முடிச்சியையும் கோர்க்க விரும்பவில்லை, வேண்டுபவர்கள் ஆதார ஆவணங்கள் படித்து இணைத்து பார்த்து கொள்க.
Comments
Post a Comment