சாலாம்புரி - ஒரு திமுக நாவல்

     




திமுக குறித்து நான் வாசித்த சொற்ப அளவிலான புனைவிலக்கியங்கள் பெரும்பாலும் கட்சி குறித்து எதிர்மறையான பார்வையை கொண்டிருப்பவை. கதை, சிறுகதை, நாவல் என்று எல்லா வகை இலக்கியங்களிலும் கட்சிக்கு எதிரான அல்லது விமர்சன பார்வையே நிரம்பி இருக்கும். எழுத்தாளர் இமையம் அவர்களின் ‘வாழ்க வாழ்க’, ‘கட்சிக்கார பிணம்’  போன்ற எழுத்துக்களும்  இப்படியானவையே. ஒரு கட்சி தொண்டன் கூட கட்சியை விமர்சித்து கதை எழுதும் சூழல் தான் தமிழ் இலக்கிய பரப்பில் நிலவுகிறது. அந்த வகையில் கொஞ்சம் மகிழ்வூட்டும் வகையில் , ஆரம்பகால திமுக குறித்து ஒரு நல்ல சித்திரத்தை நமக்களிக்கிறது எழுத்தாளர் அ. வெண்ணிலாவின் ‘சாலாம்புரி’. அவரது சிறு வயதில் கேட்ட கதைகளை வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருக்குமாயின் இந்நூலை ‘Memoir’ என்று கூட சொல்லலாம். யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக இந்நாவல் அமைந்திருப்பதே இவ்வதானிப்புக்கு காரணம். 


கடந்தாண்டு வெளியான ‘Rule of the Commoner’ என்ற ஆய்வு நூல் திமுகவின் முதல் 18 ஆண்டுகளை பற்றிய செய்திகளை Ideation, Imagination, Mobilization என்ற கோட்பாட்டு அடிப்படையில் நமக்களிக்கிறது. ஒரு வகையில் இந்த நாவலை படித்தபோது இத்தகைய கோட்பாடுகளோடு சம்பவங்களை என்னால் பொருத்தி பார்த்து புரிந்துகொள்ளவும் முடிந்தது. Robert L Hardgrave, Marguerite Ross Barnett, போன்ற மேற்கத்திய ஆய்வாளர்கள் திமுகவின் தொடக்க கால அரசியலை ஆய்வுசெய்துள்ளார்கள்.  இருவருமே ஒரு தகவலை தீர்க்கமாக முன்னிறுத்தியுள்ளனர், தமிழ்நாட்டில் நடந்த அதி தீவிரமான அரசியல்மயப்படுத்துதல் திமுகவின் அரசியலோடு பின்னி பிணைந்தது. 


1951 தேர்தலை விட 1957 தேர்தலில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் வாக்கு அளிப்போர் சதவிகிதம் அதிகரித்திருப்பதை நம்மால் இவாய்வுகள் மூலம் அறியமுடிகிறது. 1957  தேர்தலில் தி.மு.கழகம் வென்ற பெரும்பாலான இடங்கள் வட தமிழ்நாட்டை சேர்ந்தவை. (மொத்தம் வென்ற 15 இடங்களில் 12 இடங்கள்) . இந்நாவலும் வட தமிழ்நாட்டில், குறிப்பாக வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் நெசவாளர்கள் நிறைந்த ஒரு கிராமத்தில் நடந்த அரசியல் மாற்றங்களை கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு கடத்துகிறது. 


இந்த நாவல் 1957 தேர்தலில் வட ஆற்காடு மாவட்டத்தில் தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஒரு கிராமத்தில், ஒரு குடும்பத்தில், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் நடைபெற்ற அக-புற மாற்றங்களை பற்றியதாகவே அமைந்துள்ளது. கட்சி , அரசியல், தேர்தல் பற்றிய தகவல்களை தாங்கி வரும் பக்கங்கள் எல்லாம் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்த புத்தகம் என்றாலும், என்னை அறியாமலே  241ம் பக்கத்தில் 10 வரிகளை மட்டும் Highlight செய்து கொண்டேன். பல இடங்கள் மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்தின. நூலின் முடிவு அபாரம். 


நடராஜன், வடிவேலு முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து வரும் பகுதிகளை எல்லாம், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வாத்தியார்- கபிலன்  வரும் காட்சிகளுக்கு இணையானவை. கருத்தியல் ரீதியிலாக இவர்கள் இருவருக்கு இடையே நடைபெறும் உரையாடலும் அப்படியானவையே. 


1957 காலகட்டத்திற்கு உட்பட்டு, கட்சி கிளை கட்டுவதில் தொடங்கி , ஊர் சந்திக்கும் சிக்கல்களில் கட்சியின் நிலைப்பாடுகளை விவாதிப்பது, குடும்ப நிகழ்ச்சிகளில் அரசியலின் வரம்புகளை தெரிவிப்பது, மரபார்ந்த குடும்ப விழுமியங்களுக்கு கட்சியின் நவீன கருத்துக்களுக்கும் இடையே நிலவும் வேற்றுமைகளையும், சாதி-மத சிக்கல்களையும் இந்நூல் நமக்களிக்கிறது. 


மரபுக்கும் - நவீனத்திற்கும் இடையே நடக்கும் உள்ளார்ந்த முரண்களை, அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் ஒரு சமூகமும் தனி மனிதனும் எவ்வகையில் உள்வாங்கி கொள்கின்றனர் என்பதை இந்நாவலின் கதா பாத்திரங்கள் மூலம் அறியமுடிகிறது. 



காலம்தோறும் தி.மு.கழக தொண்டன் அன்பவித்த நெருக்கடிகள் சாதாரணமானவையல்ல, நமக்கெல்லாம் மேம்போக்காக தெரிந்த நெருக்கடிகளான, இந்தி எதிர்ப்பு போராட்டம், காவல்துறை வன்முறை,  மிசா கொடுமைகள், ஈழ தமிழர்  போராட்டம், ராஜிவ் காந்தி படுகொலை, கலைஞர் கைது போன்ற நிகழ்வுகள் ஒருபுறமென்றால். கருப்பு சட்டை போட்டதற்காகவே கிராமங்களில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட பதிவுசெய்யப்படாத  ஆரம்பகால கட்சி நிகழ்வுகள் ஏராளம். கருப்பு கோடியை எரிப்பது, கருப்பு சட்டை காரர்கள் மீது வன்முறையை ஏவுவது, கிளை கழகம் கட்ட கூட ஊர் பெரியவர்கள் அனுமதி மறுப்பது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் கட்சி தொண்டர்களின் நினைவுகளில் மட்டும் தேங்கி நிற்பவை. பதிவு செய்யப்பட வேண்டியவை. 


திமுக வெற்றிக்கு எம்ஜியாரின் திரைபடங்களை மட்டுமே காரணம்காட்டும் ஒரு போக்கு, மேட்டுக்குடி அரசியல் பார்வையாளர்களிடம் இன்றளவும் நிலவுகிறது, ஆனால் தபாலில் ‘நம் நாடு’, ‘திராவிட நாடு’, ‘முரசொலி’ ஏடுகளை  வாங்கி தேர்வுக்கு தயாராவதை போல் 3 மணி நேரம் வரி விடாமல் படித்த தலைமுறை ஒன்று தமிழ்நாட்டில் இருக்கதான் செய்தது. தொண்டர்களுக்காக உலக அறிவையும் உள்ளூர் அரசியலையும் புரியும்படி எழுதி பரப்பிய தலைவர்கள் கழகத்திற்கு வாய்த்திருந்தனர். 


 அதனால்தான் , அண்ணாவை போலவே தம்பிகளும் அரசியல் தெளிவை கொண்டிருந்தனர். இன்றளவு வரை கழகம் பல இன்னல்களை கடந்ததற்கு காரணம் அதுபோன்ற ‘எண்ணி துணிந்த’ நிதானமும், கொள்கை தெளிவும் தான்.  ஒரு புனைவாக இந்நூல் அதுபோன்ற தருணங்களை கற்பனைக்கு உகந்த வகையில் நமக்கு தெரிவிக்கிறது. 


பொருளாதார முதலீடு என்ற ஒன்று எதுவும் இல்லாத காலகட்டத்தில் கூட, கிளை கழகத்தில் பல்வேறு சாதியை சேர்ந்த உறுப்பினர்களை அனுசரித்து அவர்களையும் உள்ளடக்கி, கைத்தறி நெசவு  மூலம்  பெற்ற அன்றாட வருமானத்தில்  கட்சிக்கு நிதியை திரட்டிய கொள்கை தீரம் நிறைந்த தொண்டர்கள் இந்நூல் முழுக்க வந்து செல்கிறார்கள். பொருளாதார ரீதியாக திமுக என்ற கட்சி ஆரம்ப காலங்களில் மிகவும் நலிவடைந்தே இருந்துள்ளது. 100 ரூபாய் வசூலிப்பது கூட கடினம். திமுக தலைவர்கள் அதற்காக கையிலெடுத்த ஆயுதங்கள் தான் சினிமா, நாடகம் போன்றவை. அந்த வருவாயில் பத்திரிகை நடத்தினர், கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 


ஒரு தனி மனிதனாக, கட்சி தொண்டனாக  நடராஜன் படும் பாடுகளை எல்லாம் இந்நூலை படிக்கும்போது உணர முடிகிறது.  ஊர், குடும்பம் என்பதை காட்டிலும் கட்சிக்கும், கட்சி கொள்கைக்கும் பிரதான முக்கியத்துவம் அளித்துள்ளான். ஏற்கனவே சமூகத்தில் நிலவி இருக்கும் மரபார்ந்த கருத்துக்களோடு முடிந்தளவிலான சமரசத்தை அவன் ஏற்படுத்தி கொண்டே கட்சியில் பயணிக்கிறான். யதார்த்தமான முடிவுகளை அவனால் எடுக்க முடிகிறது. ஊர் திருவிழாக்களில் பங்கேற்கிறார், முன்னின்று நடத்துகிறது, பொது நலனில் அக்கறை கொண்டிருக்கிறான், அனைத்து சாதி மக்களையும் அனுசரித்து, உள்ளடக்கி நடக்கும் பண்பினை அவன் கொண்டிருக்கிறான். ஒரு சாமானிய திமுக தொண்டன் இப்படி தான் இயங்கி இருப்பான். 


 இந்நூலில் நடக்கும் பல உரையாடல்கள், யதார்த்தமானவை. ஒரு விளிம்புநிலை மனிதன் முற்போக்கு அரசியலுக்கு ஆட்பட்டால் அவர் சந்திக்கும் சிக்கல்களை பேசும் அதே வேளையில், அக்கருத்துக்கள் அவனுக்கு அளிக்கும் தைரியத்தையும், அவன் பெரும் கருத்து-ஊக்கம் அவனுக்கு அளிக்கும் ஆற்றலையும், வடிவேலு மற்றும் நடராஜனின் வாழ்க்கையின் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். 


முடிந்தளவிலான அரசியல் தகவல்களை துல்லியமாக இந்நூல் பதிவு செய்கிறது, வட ஆற்காடு வட்டார வழக்குகள் பல எனக்கு பரிச்சயமில்லாத காரணத்தால் சில சொற்களின் அர்த்தம் புரியவில்லை. 


வெண்மையில் கறுப்பு, சிவப்பு வண்ணங்களை ஏற்றியிருக்கும் துணிக்கு ‘சாலாம்புரி’ என்று பெயர். ஒரு சிறு காலத்திற்குட்பட்ட, காங்கிரஸ் கட்சியின் மேட்டிமை அரசியலை உழைக்கும் மக்களின் நிறங்களான கருப்பையும் சிவப்பையும் கொண்டு துடைத்தெறிந்த திமு கழக தொண்டனின் அனுபவங்களை இந்நூல் மூலம் நாம் அறிய முடிகிறது. 


தனிப்பட்ட முறையில் எனக்கு, தாத்தாவுடனான பல கடந்த கால நினைவுகளை இந்நூல் கிளறிவிட்டது. ஒரு கிராமத்தில் அரசியல்மயப்பட்ட சாமானியனின் இருப்பை நான் அறிவேன். இப்படியான மனிதர்கள் தான் இன்றைக்கும் திராவிட அரசியலின் ஜீவநாடிகள். 


ஒரு தொண்டனாக இருப்பதற்கான தகுதிகளை இந்நூலில் வரும் நடராஜனின் முடிவுகள் கொண்டு நாம் நிர்ணயிக்கலாம் என்றே நினைக்கிறேன். சமகாலத்தில் வாசிப்பு ஆர்வம் கொண்ட அரசியல் ஆர்வலர்களும், தி.மு. கழக தொண்டர்களும் வாசிக்க வேண்டிய நாவல் சாலாம்புரி. 


ஒரு வார காலமாக சிறந்த வாசிப்பனுபவத்தை அளித்த, நூல் ஆசிரியர் அ. வெண்ணிலா அவர்களுக்கு என் அன்பு நன்றி.  


Comments