These Seats Are Reserved Caste, Quotas and the Constitution of India
The Brief History of Equality என்ற புத்தகத்தில் Thomas Piketty இந்தியாவின் இடஒதுக்கீடு முறையை புகழ்ந்து எழுதி இருப்பார், ஒரு வகையில் அது EWSக்கு ஆதரவான பாராட்டும் கூட. குழுவாக சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் அதே வேளையில் தனி நபரும் சமத்துவத்தை அடைய இடஒதுக்கீடு தீர்வாக அமைய வேண்டும் என்பது EWS ஆதரவுக்கு பிக்கெட்டியின் வாதம்.
சாதி, நிறம், போன்ற குழு சார்ந்த ஏற்ற தாழ்வுகளில் இருந்து மீள்வதற்காக ஏற்படுத்தப் பட்ட இடஒதுக்கீடு எந்த அளவுக்கு முக்கியமோ, தனி நபரின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பொருளாதார ஏற்ற தாழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது இந்த வாதத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்.
ஐரோப்பிய மய்ய(Eurocentric) பார்வையில் இது நியாயம் என்றாலும் ஆண்டாண்டு காலமாக ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்த ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு தேவையான இடஒதுக்கீடே சரியாக அமல்படுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில், EWSஐ மட்டும் வேக வேகமாக அமல் படுத்தும் அவசியம் என்னவென்று தான் தெரியவில்லை.
அரசு தன்னிடம் இருக்கும் வளங்களை தனது குடிகளுக்கு நியாயமாக பங்கிட்டு வழங்க வேண்டும், அதற்கான ஒரு வழிமுறை தான் பட்டியலின, பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு. நேற்று கேட்டு இன்று கிடைத்திடவில்லை இடஒதுக்கீடு, அதற்கென நெடும் போராட்டம் நடந்தே வந்துள்ளது.
இடஒதுக்கீடு குறித்து Marc Glanter எழுதி இருக்கும் Competing Equalities: Law and the Backward Classes in India நூலை சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்க முயன்றுள்ளேன் ஆனால் முடிந்ததில்லை, Ashwini Deshpandey எழுதிய Affirmative Action In India நூலை படித்திருக்கிறேன், அதை கடந்து சிறு பதிவுகள், கட்டுரைகள், சிறு நூல்கள் என இடஒதுக்கீடு குறித்து ஆழமான புரிதல் எனக்குள் ஏற்பட காரணமாக இருந்துள்ளதது. Michael J. Sandel எழுதி இருக்கும் Tyranny of Merit இன்னும் முழுதாக படிக்கப்படாமல் பாதியோடு நிற்கிறது.
அவ்வகையில் இந்தியாவில் இடஒதுக்கீடு கொள்கை பரிணமித்து வந்த விதத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியிலும் விளக்க முற்படும் நூல் தான் Abhinav Chandrachud எழுதி இருக்கும் These Seats Are Reserved
Caste, Quotas and the Constitution of India.
சாதிய ஏற்றத்தாழ்வுகளில் இருந்து மீள ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் இடஒதுக்கீடு இந்தியாவில் எப்படி பரிணமித்து வந்தது, அதன் உள்ளார்ந்த சிக்கல்கள் என்ன, சட்ட ரீதியில் இடஒதுக்கீடு முரண்பாடு கொள்ளும் இடங்கள் எவை? அம்பேத்கர், நேரு போன்ற ஆளுமைகள் இடஒதுக்கீடு மேல் கொண்டிருந்த அபிப்ராயங்கள் எப்படியானவை, என்பதை எல்லாம் இந்நூல் சுருக்கமாக நமக்களிக்கிறது. குறைவான பக்கங்களில் விரிவான ஒரு கருத்தை படிப்பவருக்கு இந்நூல் வழங்குகிறது.
இந்தியாவில், குறிப்பாக அரசமைப்பு சட்டத்தில் ‘Class’ என்ற பதம் ‘Caste’ என்ற பதத்திற்கு இணையான ஒன்றாக பயன்படுத்த பட்டிருக்கிறது. காலனிய நிர்வாகத்தின் வளர்ச்சி போக்கில் இச்சொல் நமக்களிக்கப்பட்டு, பின்னாட்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு அங்கமாகவே ஆகி போனது. Depressed Class என்ற பதமும் ஒரு காலத்தில் பரந்துபட்ட அர்த்தங்களை கொண்ட ஒன்றாகவே இருந்துள்ளது, பின்னாட்களில் பட்டியல்கள் உருவாக்கப்பட்ட பிறகு இந்த சொல் பயன்பாட்டில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது. அதை போலவே Backward Class என்ற பதமும் பரந்துபட்ட அர்த்தங்களை கொண்டே வழங்கப்பட்டுள்ளது. பல நுணுக்கமான மாற்றங்களை இச்சொற்கள் சந்தித்துள்ள வரலாற்றினை இந்நூல் நமக்களிக்கிறது. ‘Backward Class’, ‘Other Backward Class’, ‘Socially and Educationally Backward Class’ (SEBC), ‘Most Backward Class’ (MBC), ‘Depressed Class’, ‘Scheduled Caste’, ‘Scheduled Tribe’, ‘Meritorious Reserved Candidate’ (MRC) and ‘Economically Weaker Sections’ (EWS). என்று இடஒதுக்கீடு சார்ந்து உருவாகியுள்ள வார்த்தைகளுக்கு பின்னிருக்கும் வரலாற்று அர்த்தங்களை இந்நூல் மூலம் நாம் பெற முடியும்.
காலனிய அரசிலிருந்து சமகால அரசு வரை இதுஒதுக்கீடு முறை வளர்ச்சி பெற்று வந்த வரலாற்றை ஒரு அத்தியாயம் சுருக்கமாக நமக்கு வழங்குகிறது. இந்திய அரசமைப்பு சட்டம் இடஒதுக்கீடு மீது கொண்டிருந்த பார்வையை படிக்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எவருக்கும் கோபமே ஏற்படும். குறிப்பாக ஒரு சோசியலிஸ்டாக இடஒதுக்கீட்டிற்கு எதிராக நேரு கொண்டிருந்த கொள்கை படிக்கும்போது எரிச்சலையே ஏற்படுத்தியது. தனி நபரின் தகுதிக்கு (Merit) நேரு அளிக்கும் அழுத்தம், ‘not generally in favour of reserved seats’ என்று M.R Krishna அவர்களுக்கு கடிதம் எழுதும் அளவிற்கு நீண்டது.
“அன்பின் Whatsapp உலகத்தாரே, அம்பேத்கர் இடஒதுக்கீடு 15 ஆண்டுகள் வரை தான் தொடர வேண்டும் என்றார்” என்று இன்றைய சமூக வலைத்தளத்தில் பரப்பப்படும் போலி செய்திக்கு பின்னல் இருக்கும் நெடிய உரையாடல் மீது இந்நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. இடைதுக்கீடு மிக சிறுபான்மையான அளவிலேயே அளிக்கப்படவேண்டும் என்று அவர் விரும்பியது உண்மை, proportional என்பதாக அல்லாமல் Adequate ரீதியிலேயே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அரசமைப்பு சட்டத்தில் ‘Classes’ என்ற பதத்திற்கு மாறாக ‘Minorities’ என்ற பதமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். ஆனால் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் சாதிகளும் பிற்படுத்தப்பட்ட வந்திருக்கும் காரணத்தால் அரசமைப்பு சட்டத்தில் Classes என்ற பதமே பயன்படுத்தப்பட்டது. அம்பேத்கர் தயாரித்த அரசமைப்பு சட்ட வரைவில், இடஒதுக்கீட்டிற்கு எந்த வித காலக்கெடுவும் இடம்பெறவில்லை. இப்படி பல்வேறு சுவாரசியமான தகவல்களை அம்பேத்கர் குறித்தான அத்தியாயம் நமக்களிக்கிறது.
இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டதே சுதந்திர இந்தியா 45 ஆண்டுகளை கடந்த பிறகு தான், இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஆணையங்கள் காகா காலேல்கர், மண்டல் ஆணையம், இடஒதுக்கீடு சம்மந்தமாக நிகழ்த்தப்பட்ட வழக்குகள் Indra Sawhney போன்றவை சமகால இடஒதுக்கீட்டின் பயன்பாட்டில் செலுத்தும் தாக்கத்தை இந்நூல் பேசுகிறது. சமீபத்தில் A.K Rajan எழுதி வெளியான ‘Constitution of India is Not What it is’ என்ற நூலும் அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
13 Point Roaster system, 100 point Roaster System ஆகியவற்றையும் புரியும்படி, எடுத்துக்காட்டுடன் இந்நூல் நமக்கு வழங்குகிறது. இடஒதுக்கீட்டை அமல்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்தங்களையும் அதற்கு பின்னல் இருக்கும் அரசியல் காரணங்களையும் தெரிவிக்கும் அதே வேளையில் 1950 இல் இடஒதுக்கீட்டிற்கு எதிராக எழுந்த குரல்கள் 1990 களில் முற்றிலுமாக நிசப்தம் அடைந்து போயிருந்ததை இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான அம்சமாக நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
முடிவுரை, இடஒதுக்கீடு குறித்து நீதிமன்றம் கொண்டிருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி இடஒதுக்கீட்டிற்கு எதிராக கேட்கப்படும் முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதிலையும் வழங்குகிறது.
சமகாலத்தில் இடஒதுக்கீடு குறித்து வெளியாகி இருக்கும் மிக முக்கியமான நூல் என்று இதை சொல்லலாம், தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டால் திருப்தி. வாய்ப்பும் ஆர்வமும் இருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
Comments
Post a Comment