தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்


 



ஒரு மாநிலக் கட்சி என்ற அளவில் மட்டுமல்ல, இந்தியத் தேசிய விடுதலை இயக்க பாரம்பரியத்தைச் சாராமல் மாநிலத்தில் ஆட்சியை அமைத்த முதல் கட்சியும் திமுக தான்.  தமிழர் என்ற சுயமரியாதை அடையாளத்தின் மூலம் மக்கள் திரளை கட்டி எழுப்பியது திமுக. அதன் வெளிப்பாடு தான் 'தமிழ்நாடு' பெயர்மாற்றம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழும் தமிழ்நாடும் அடைந்த மாற்றங்கள் பல. தனிமனித விழுமியங்களைத் தாண்டி தமிழ்ச்சமூகம் தனக்கென ஒரு கூட்டு அபிலாஷையை உருவாக்கிக் கொள்ளத் தமிழ்- தமிழர்- தமிழ்நாடு என்ற சுயமரியாதை அடையாளம் இன்றளவும் அவசியமாக இருக்கிறது. 


தமிழை ஒரு பிராந்திய அடையாளம் என்று சுருக்கி பார்ப்பதைவிட ஒரு உலகளாவிய அடையாளமாக விரித்துப் பார்க்க வேண்டும் என்பதைத் தான் திராவிட இயக்கம் விரும்பியது. உலகில் தனக்கான இடத்தை ஏற்படுத்த, உலக அறிவை உள்ளூர்மயப்படுத்த, அதன் மூலம் அறிவை மக்கள்மயபடுத்தும் கனவுகளோடு ஒரு அடையாளத்தை நாம் இன்றைக்கும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் பெருமிதம்  கொள்ளுமே அதே வேளையில் இவ்வடையாளத்தைக் கொண்டு நமது அபிலாஷைகளை வளர்த்துக் கொள்ள முயலவேண்டும். 


தரணியை ஆள வேண்டும் என்பது நமது கனவல்ல, இந்த உலகத்தில் நமது அடையாளம் என்னவாக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். 


தமிழராக உணரும் அனைவர்க்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள். 



Comments