Rule of the Commoner - EPW விவாதம்


 


  தமிழ் சமூகம் ஒரு அரசியல் சமூகமாக பரிணமிக்க திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. தமிழ் சமூகம் தனது திராவிட-தமிழர் என்ற சுமரியாதை அடையாளத்தை கொண்ட ‘அரசியல் சமூகமாக’(Political society) இன்றளவும் நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது. 


அடங்கி செல்லும் சமூக(Obedient society) நிலைமைகளில் இருந்து ஆற்றலை வெளிப்படுத்தும்(Achievement society) சமூகமாக மாற்றமடைந்த ஒரே காரணத்தால் தான் இன்றைக்கு நாம் பொருத்தப்பட்டுள்ள அரசியல் சமூகமாக  

நம்மை அடையாளப்படுத்தி கொள்கிறோம். 


இயல்பாகவே ஒரு அரசியல் சமூகம் - வேட்கை நிறைந்த சமூகமாகவும், சிவில் சமுகம் படிந்து போகும் சமூகமாகவும் இருக்கிறது.  


அரசியல்மயப்பட்ட சமூகம், அரசியல் மூலம் பெற்ற தன்னுணர்வால் வேட்கை மிகுந்த சமூகமாக உருமாறுகிறது. இந்த உருமாற்றம் கூட்டு லட்சியமாகவும், தனி மனித அபிலாஷையாகவும் வெளிப்படுகிறது. தமிழ் சமூகம் தன்னை ஒரு கூட்டாக உணர தொடங்கிய போக்கு 1949 ல் தொடங்கி 1967ல் அரசியல் தலத்தில் நிறைவை அடைகிறது. அன்றைக்கு உருவாகிய அந்த தமிழ் அரசியல் தளத்திற்குள்(political Frontire) தான் சமகால அடையாள முரண்கள்(contestation) எல்லாம் ஒன்றை ஒன்று முட்டி மோதி நிலைநிறுத்தி கொண்டிருக்கிறது. நிற்க. 



18 ஆண்டு(1949-1967) காலத்திற்குள் எப்படி இத்தகைய அரசியல் கூட்டுணர்வு சாத்திய பட்டது என்பதை தான் கடந்தாண்டு வெளியான ‘Rule of the Commoner’ நூல் ஆய்வு செய்கிறது. அந்த நூல் குறித்து EPW இதழில் 3 கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. 


April 1 2023 EPWல்  ‘A Revolution Achieved?- The Latest Study of the Dravidian 

Movement Follows Its Leaders’ என்ற கட்டுரையை Rupa Viswanath எழுதி இருந்தார், தலித் விமர்சனத்தை இந்நூல் கருத்தில் கொள்ளவில்லை என்பது அவர் விமர்சனத்தின் மைய சாரமாக இருந்தாலும், இத்தகைய விமர்சனத்தில் ஒருவகையாக உதாசினம் வெளிப்படுகிறது. தலித் ஆதரவு நிலைப்பாடு சமகால ஆய்வாளர்களுக்கு ஒருவகையான ‘விமர்சிக்கும்’ உரிமையை அளிக்கிறது, இத்தகைய உரிமையை தலித் தரப்பு ஆய்வாளர்களும் அங்கிகரிக்கிறார்கள். பார்ப்பனர்x பார்ப்பனர் அல்லாதார் அரசியல் விவாதத்தில்  இருந்து பார்ப்பனர் அல்லாதார் x தலித் அரசியல் விவாதம் நோக்கி நகர வேண்டும்/(இம் முரனையும் பேச) வேண்டும்  என்பது அவர்கள் வாதம். இதில் நியாயம் இருக்கிறது என்றாலும் இத்தகைய இருவேறு முரண்பாடுகளை ஒரே தளத்தில் வைத்து  ஒப்பிட்டுவிட முடியாது. மேலும் இத்தகைய தலித் விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை என்ற வாதம், நூலை சரியாக புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட ஒன்றாகவே படுகிறது. இதே புத்தகத்தில் திராவிட இயக்கம் கட்டமைக்க முயன்ற Counter- Narratives பற்றி குறிப்பிடும்போது: பாரதிதாசன் எழுதிய ‘இரணியன்’ நாடகம் ,  மணிக்கொடியில் வெளிவந்த புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதைக்கு எதிர்வினையாக குடிஅரசு இதழில் சீலன் எழுதிய ‘அக்ரஹாரம்’ கதை, ராஜாஜி கல்கி இதழில்  எழுதிய இராமாயணத்துக்கு எதிராக முரசொலியில் கலைஞர் முகஜி என்ற புனைபெயரில் ஆற்றிய எதிர்வினை போன்ற அனைத்திலும் தலித் சார்புநிலை விமர்சனமும் அடங்கியே இருந்தது. 


ஏற்கனவே, திராவிட இயக்கத்தால் ‘கட்டமைக்கப்பட்ட’ வரலாற்றை திருத்தி எழுதுகிறோம் என்று சொல்லி ஆய்வுலகில் இயங்கும் தலித் ஆய்வாளர்களும், சில முக்கியமாக குறிப்புகளை ‘மறதியில்’ தவிர்த்து விடுகிறார்கள். அன்னை  சத்தியவாணி முத்து திமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய நிகழ்வுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அவர் மீண்டும் திமுகவில் இணைந்த நிகழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை, 1952 தேர்தலில் அம்பேத்கரின் Schedued caste Federation வேட்பாளர்களை திமுக ஆதரித்த நிகழ்வும் இதை போலவே ‘மறதியில்’ தவிர்க்க படுகிறது. 


மேலும் திமுகவின் செந்தமிழ் மொழிநடையை விமர்சிக்கும் ரூபா, அத்தகைய மொழி நடை ‘பொது கூட்ட’ மேடைகளில் செய்த ‘சாதி நீக்கத்தை’ குறிப்பிட தவருகிறார். கொச்சை தமிழ் என்பது வட்டார சாதி தமிழாக இருந்ததும், திமுக வெகுஜன அரசியல் வெளியில் முன்னிருத்திய செந்தமிழ் மேடை தமிழ் சாதியற்ற உள்ளார்ந்த விழுமியங்களை வெளிப்படுத்தியதையும்,  இக்கூற்று குறித்த Bernard Bateன் ஆய்வையும் ரூபா படிக்க தவறியிருப்பார் என்று நான் கருதவில்லை. 


மேலும் திராவிட-தமிழ் அடையாளம் உருவாவதற்கு முன்பே பல்வேறு தலித் முன்னோடிகள் இருந்ததையும் சாதி ஒழிப்பை அவர்கள் பேசியதையும் ரூபா குறிப்பிடுகிறார். தலித் இயக்க முன்னோடிகள் கொண்டிருந்த திராவிட இயக்க தொடர்பை குறிப்பிடாமல் எழுதப்படும் தலித் வரலாற்று எழுத்துக்கள் ஒரு புறம் பெருகிவரும் காலகட்டத்தில் இக்கூற்று எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்றபோதிலும், திராவிட இயக்கத்திற்கு வெளியில் நடைபெற்ற சாதி எதிர்ப்பு இயக்கங்களை கணக்கில் கொண்டால் அதில் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர், வள்ளலார், வைகுண்டர், மறைமலை அடிகள் உள்ளிட்டோரும் அடங்குவர் தானே. 


 மேலும் இவர்களால் சாத்தியப்படாத ‘அரசியல் வெளி’ திமுக முன்னெடுத்த ‘Ideation- imagination- mobilization’ அரசியலாக்கத்தால் சாத்தியப்பட்டுள்ளதை தான் Rule of the Commoner. Construction of The People/Formation of the Political என்பதை தவிர்த்து மற்ற புள்ளிகள் அனைத்தையும் ரூபா தொட்டு பேசி இருக்கிறார். 


இந்த நூல் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையிலும், எவ்வித தெளிவுமின்றி ரூபா எழுதி இருந்த கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் விதத்திலும் ‘What Transforms?  Capital and Democracy in Tamil Nadu’ என்ற தலைப்பில் July 15 2023 EPWல் Rule of the Commoner நூல் ஆசிரியர்கள் Rajan Kurai Krishnan, Ravindran Sriramachandran, V M S Subagunarajan ஒரு கட்டுரை எழுதி இருந்தனர். அதன் முடிவு பகுதியை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன், “ நிலையான தேர்தல் ஜனநாயகத்திற்கும், அரசியல் ரீதியாக வீரியமாக நடைபெறும் தொடர் போட்டிகளுக்கும், பாசிச அணிதிரட்டல்களுக்கு எதிராக இங்கு உருவாகி இருக்கும் அரசியல் என்பதே எங்களை பொறுத்தவை பெரும் சாதனைதான், இதுவே நாங்கள் புத்தகத்தில் மேற்கொண்ட பகுப்பாய்விற்கு மதிப்பளிக்கிறது”. என்னை பொறுத்தளவில் இதை விட கண்ணியமான எதிர்வினையை யாராலும் எழுதி விட முடியாது.


 ரூபா விஸ்வநாத் கட்டுரையை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள நீலம் இதழ் அதற்கு எதிராக வெளியான இக்கட்டுரையையும் மொழியாக்கம் செய்து வெளியிடும் என்று நம்புவது ஏமாற்றம் அளிக்கும்  ஒன்றாக அமையும் என்ற போதிலும், அம்பேத்கரின் ‘ஜனநாயக விழுமியங்களை’ போற்றும் அவர்கள் இதை வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன். (ரூபா விஸ்வநாத் கட்டுரையை தப்பு தப்பாக மொழியாக்கம் செய்து தனது கருத்துக்களை எல்லாம் மொழிபெயர்ப்பாளர் இடையில் சொருகி இருப்பதை கவனிக்காமல் இருக்கும் அளவிற்கு நீலம் இதழ் ஆசிரியர் குழு கவனக்குறைவாக இருப்பதை எண்ணி வியக்கிறேன்)


22 July 2023 epw இதழில் கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்று துறை பேராசிரியர் Raj Sekhar Basu, ‘Rule of the Commoner’ நூலுக்கு ஒரு மதிப்புரை எழுதி இருக்கிறார்,  ‘Contradictions within the Practices of a People’s Party’ என்று தலைப்பிடப்பட்ட  இக்கட்டுரையின் முடிவு பகுதி சமகால அரசியல் நிலைமைகளோடு இந்நூல் நிறுவும் கூற்றை ஒப்பிடுகிறது. திமுக கட்டமைக்க முயன்ற அரசியலில் ‘மக்கள்’ என்ற தொகுப்பு, சமகாலத்தில் பார்ப்பனரல்லாதார் மற்றும் ஆதி திராவிட மக்களிடையே நடைபெறும் அரசியல்/கருத்தியல் ரீதியிலான கருத்து வேறுபாடுகளால் முழுமையடையாமல் இருப்பதையும் போதாமைகளை கொண்டிருப்பதையும் Raj Sekhar Basu சுட்டி காட்டுகிறார். இவ்வாதம் மேலும் சில ஆய்வுகளை வேண்டி நின்றாலும், ‘இந்நூல் காலம் கடந்தும் இன்னும் பல ஆய்வாளர்களை, மிக சமீபத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வை, ஆய்வு செய்ய தூண்டி கொண்டே இருக்கும்’ என்கிறார். 


‘Rule of the Commoner’ நூலை சுற்றி நடைபெறும் இத்தகைய அறிவு தள விவாதங்கள், திராவிட ஆய்வு புலத்தை உசுப்பி எழுப்பும் என்று நம்புகிறேன்.



P.S : இந்நூலை, பெங்களூரில் நடந்து முடிந்த I.N.D.I.A ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அம்மையாருக்கு திமுக தலைவர் அன்பளிப்பாக வழங்கினார் என்பது  குறிப்பிடத்தக்கது. 









Comments