The crooked timber of new india - நூல் அறிமுகம்
1990ம் ஆண்டு அரசியல் கோட்பாட்டாளர் Isaiah Berlin எழுதிய The Crooked Timber of Humanaty வெளியானது, அதன் முதல் கட்டுரை (The Pursuit of the Ideal) படிக்கும்போது சிந்தனை புலத்தில் பல திறப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. 1996ம் ஆண்டு ஊடகர் பி. சாய்நாத் எழுதிய, இன்றைக்கும் கள ஊடகவியலாளர்களுக்குக் கையேடாகத் திகழும் ‘Everybody loves a good draught’ புத்தகம் வெளியானது. இந்தியா அரசியல் விடுதலை அடைந்து 50 ஆண்டு கடந்த பின்னரும் எப்படி பல்வேறு துறைகளில், வளர்ச்சி குறியீடுகளில் பின்தங்கி இருக்கிறது என்பதைத் தனிநபர்கள் படும் பாடுகள் மூலம் பதிவு செய்திருப்பார் சாய்நாத். இந்தியாவின் 50 ஆண்டுக் கால அரசியல் விடுதலையில் அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைக் கண்டுகொள்ளாமல் தவிர்த்திருப்பதை இந்நூலைக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
நிர்வாக ரீதியிலான பின்னடைவுகளை உணர்ந்துகொள்ள சாய்நாத் புத்தகம் உச்சம் என்றால், சமீபத்தில் வெளியான The crooked timber of new india என்ற நூல் பாஜக அரசின் கடந்த 9 ஆண்டுக்கால கொடூரங்களைச் சிறு சிறு கட்டுரைகள் மூலமாக நமக்கு அளிக்கிறது. பாஜகவின் போலி வாக்குறுதிகளைத் தோலுரிக்கும் அதே வேளையில் 75 ஆண்டுக்கால சுதந்திர இந்தியாவில் ஜனநாயக விழுமியங்கள் நீர்த்துப்போயிருப்பதையும் மீள முடியாத நிலையை இந்தியா அடைந்திருப்பதையும் ஒரு எச்சரிக்கையாகவே இந்நூல் நமக்குக் கடத்துகிறது.
2014 முதல் பாஜக கைக்கொண்டிருக்கும் மக்கள் விரோத மதவாத அரசியலை அந்தந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறு சிறு கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது. வெறும் விமர்சனமாக அல்லாமல் எண்ணிக்கை தரவுகளோடும் பாஜக முன்வைத்த போலி வாக்குறுதிகளோடும் ஒப்பிட்டு இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருப்பது 2024 தேர்தலை எதிர்கொள்ளவும் நமக்கும் பயன்படக்கூடும்.
மோடி 2014ல் பேசிய உரையையும் 2022ல் பேசிய சுதந்திர தின உரையையும் ஒப்பிட்டு எழுதியுள்ள கட்டுரை கடந்த 9 ஆண்டுக் காலத்தில் மதவாதம், அரசியல் வெளியில் அடைந்திருக்கும் செல்வாக்கைத் தெரிவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்ன் தேர்தல் பிரிவான பாஜகவின் அரசியல் என்பது நீண்ட நெடிய சமூக கட்டமைப்பின் விளைவு என்றே கொள்ளவேண்டும்.
1980 களின் பிற்பகுதியில் தெளிவாக இயங்க தொடங்கிய அடிப்படைவாத மத அரசியல் 30 ஆண்டுகள் கழித்து அடைந்திருக்கும் இடம் அவர்கள் தரப்புக்குப் பொறுத்திருந்து பெற்ற வெற்றி என்றாலும், அது இந்தியாவின் கூட்டாட்சிக்கும் மதச் சார்பின்மைக்கும் விடுக்கப்பட்ட சவால். இந்தியாவின் ஐடியா என்று இன்றளவும் நாம் அடைய முயன்று கொண்டிருக்கும் சிந்தனைக்கு நேர் மாறான ஒரு சித்தனையை பாஜக செயல்படுத்த துடித்து கொண்டிருக்கிறது.
கடந்தாண்டு வெளியாகி அதிக பிரதிகள் விற்பனையான அரசியலாளர் தேவனூரு மஹாதேவாவின் RSS – Its Depth and Breadth ஆர் எஸ் எஸ் பற்றித் தெரிவித்த விஷயங்களோடு இந்நூலின் சில கட்டுரைகளும் சமகாலத்தில் ஆர் எஸ் எஸ் பரவி இருக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
2019 ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக தனது திட்டங்களுக்குப் பெயர் வைப்பதில் தொடங்கி எல்லா விதமான செயல்பாடுகளிலும் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறையையே கைக்கொண்டு வருகிறது, 80:20 பார்முலா என்று யோகி ஆதித்யநாத் உபியில் பேசி ஒரு இஸ்லாமிய வேட்பாளர்களைக் கூட தேர்தலில் நிறுத்தாமல் ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இது போலவே கர்நாடகாவில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிராக அரசியல் செய்தது, மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்தது, ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என மக்கள் விரோத செயல்பாடுகளைக் கூறிக்கொண்டே இருக்கலாம்.
இந்துத்துவ தத்துவம் செயல்வடிவம் எடுக்கும்போது இஸ்லாமியர்களை எப்படி நடத்தும் என்பதற்கு பாஜகவின் மக்கள்தொகை அரசியல் ஒரு சான்று, பிற மதத்தவர்களை விட இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்ற தரம் தாழ்ந்த பொய்யைத் தொடர்ந்து பொது வெளியில் கூறி பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. இந்த பொய்யைத் தரவுகளைக் கொண்டு முறியடிக்கிறார் இந்நூல் ஆசிரியர். முன்னாள் தேர்தல் ஆணையர் S. Y. Quraishi
இத்தலைப்பில் ஒரு நூலையே எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மைகளை எல்லாம் துளியும் மதிக்காமல், வெற்று பழம் பெருமைகளைக் கொண்டு மட்டும் ஒரு வெறுப்பு அடையாளத்தை பாஜக கட்டமைத்து அதன் மூலம் மக்களை ஒன்று திரட்டிக் கொண்டிருக்கும் இந்துத்துவ காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் வெளிப்படையாக எதையுமே மக்களுக்குச் சொல்ல அஞ்சுகிறார்கள்,கொரோனா மரணங்கள், தேர்தல் பத்திரங்கள், PM Cares நிதி, உள்ளிட்ட பல தரவுகள் நமக்குத் தெரிவிக்கப் படாமலே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மக்களவையும், மாநிலங்களவையும் விவாதங்கள் இன்றி வெறும் சட்டத் திருத்தங்கள் மூலமும் வெளிநடப்புகள் மூலமுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளம் கண்காணிப்புகள் மிகுந்த ஒருதலைபட்ச அமைப்பாக உருமாறியுள்ளது. அரசியலமைப்பால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் ஆளும் வர்க்க கைப்பாவைகளாக மாறிப்போய் இருக்கிறார்கள். பத்திரிகைகள் அனைத்தும் பக்கச் சார்புடனும், ஒருதலைபட்சமாகவும் செயல்படுகின்றன, அதையும் மீறி கேள்வி எழுப்பினால் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு UAPA பாய்கிறது. மதவாதம், சாதியவாதம், அடிப்படைவாதம் அனைத்தும் தலைவிரித்தாடுகிறது.
நமது அரசியல் அமைப்பின் முகப்பில் எழுதியுள்ள அனைத்து சொற்களையும் பொருளற்றவையாகக் கடந்த 9 ஆண்டுக் கால பாஜக ஆட்சி உருமாற்றி இருக்கிறது. அவற்றில் பல முக்கியமான அம்சங்களை இந்நூல் விவாதிக்கிறது. ஆசிரியரின் முடிவுரையின் மீது எனக்கு சில முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை விவாதிக்கும் நேரமிதுவல்ல என்பதை அடியேன் அறிவேன்.
Mathur Sathya இந்நூல் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார், இந்த வார இறுதியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு கூட்டம் நூலாசிரியர் பங்கேற்பில் நடைபெறவிருக்கிறது, 2024 மக்களவை தேர்தலுக்கு நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படியான வேளையில் இதுபோன்ற புத்தகங்களைப் படித்து பாஜக என்ற மக்கள் விரோத கட்சிக்கு எதிரான கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல நாம் முற்பட வேண்டும்.
இந்திய ஒன்றிய நிதி அமைச்சரின் கணவராக இருந்துகொண்டு இது போன்ற புத்தகத்தை வெளியிடுவதே இந்நூலின் வெற்றி என்று சொல்லலாம். Parakala Prabhakarக்கு வாழ்த்தும் பாராட்டும்.
Comments
Post a Comment