இந்திய இலக்கியச் சிற்பிகள்: கலைஞர்

   





   தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தொடர்ந்து கலைஞரும் சாகித்திய அகாடமியின் இந்திய இலக்கிய சிற்பிகள்  புத்தக தொடரில் இடம் பெற்றிருக்கிறார். முனைவர் மு. இராசேந்திரன் இந்நூலை எழுதி இருக்கிறார். 



நவீன இலக்கியப் பரப்பில் அகப்புற நவீனத்தின் பிரதிநிதியாகக் கலைஞரை அடையாளப்படுத்துகிறார் நூலாசிரியர். தமிழ் இலக்கியத்தைச் சமகால நிலைமைகளோடு பொருத்தி அகப்புற நவீனமாகியவர்களுள் குறிப்பிடத்தக்கவராகக் கலைஞரை அவர் குறிப்பிடுவது ஒட்டுமொத்த திராவிட இயக்க எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். 



திராவிட தமிழ் மரபிலிருந்து எடுத்துக்கொண்ட கதைகளை நவீன ஜனநாயக விழுமியங்களுக்குள் பொருத்திப் பார்த்து அவற்றை வெகுஜன தன்மை கொண்டபடைப்புகளாக  மாற்றும் போக்கு திராவிட இயக்க எழுத்தாளர்களிடம் வெளிப்பட்டது.  


  இலக்கிய உரைகள், கட்டுரை, கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், திரைப்படம், சொற்பொழிவு, தன்வரலாறு என்று கடல் போலிருக்கும் கலைஞரின் பன்முக படைப்பாளுமையின் கரையில் மட்டும் கால் நனைக்கும் விதத்தில் சில எடுத்துக்காட்டுகளை இந்நூல் மூலம் நமக்களிக்கிறார் முனைவர் இராசேந்திரன். 


கலைஞரை இலக்கியவாதியாக அகப்புற நவீனத்தில் பொருத்துவதும், அதற்கு உகந்த உதாரணங்களை அவரது படைப்பின் துணை கொண்டுவழங்குவதில்  இந்நூலில் பெரும்பாதி பக்கங்களை  எடுத்துக்கொண்டிருக்கிறது. நிறைவுரையில் கலைஞரை ஒரு இலக்கிய சிற்பியாகச் செதுக்கிய பெருமை அவரது ஊரான திருக்குவளைக்கும், அவரது தந்தை முத்துவேலருக்கும், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், டாக்டர் சி. இலக்குவனார், முத்து கிருட்டிண நாட்டாரய்யா, இராசகோபாலப் பிள்ளை எனும் தமிழாசிரியர், கவிஞர் சுரதா, கவிஞர் கா.மு. ஷெரீப் போன்ற கவிஞர்களும்  உந்து சக்தியாக இருந்திருப்பார்கள் என்பது அவரது அவதானிப்பு. பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சிக்கவி பாரதிதாசன் ஆகியோரையும் கலைஞரின் இலக்கிய ஆளுமைக்குத் துணை புரிந்த சமகால படைப்பாளிகளாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 


இந்திய இலக்கியப் பரப்பில் நிலவும் இருவேறு மரபுகளில், தமிழ் மரபில் ஆழங்கால் பட்ட கலைஞரைச் சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை பரிச்சயமும் நிபுணத்துவமும் கொண்ட ஒரு இலக்கியவாதியாக மிகச் சுலபமாக நிறுவிட முடியும். உண்மையைத் தேடி அலையும் வாசகனுக்கு இருக்கும் தேடல் உணர்வு கடைசி வரை அவரிடம் இருந்தது. 




தனது படைப்புகள் மூலம் ஒரு அரசியல் இயக்கத்தை அவர் முன்னெடுத்தார். 1950களில் தொடங்கி அவ்வியக்கத்தின் தொடரோட்டத்தில் பலர் வந்து சென்றாலும், அவர் மட்டுமே அதில் உண்மையாகவும், நேர்மையாகவும், சலிக்காமல் தொடர்ந்து இயங்கும் தன்மையைக் கொண்டிருந்தார். 





 இவை அனைத்தையும் கடந்து அவரிடம் ஒரு ஜனநாயக பண்பு இருந்தது, அறிவை ஜனநாயகமாக்க அவர் தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார்.  திருக்குறளைப் பேருந்துகளில் இடம்பெறச் செய்தது. பொது இடங்களுக்குத் தமிழ்ப்  புலவர்களில் பெயரைச் சூட்டுவது. சிலை, நினைவுச் சின்னங்கள் அமைப்பது, நூற்றாண்டு கொண்டாட்டம், படைப்புகளின் நாட்டுடைமையாக்கம், பொது நூலக இயக்ககம் என்று அவரது செயல்பாடுகளில் மட்டுமல்லாமல் இலக்கியங்களிலும் இப்போக்கு வெளிப்படுகிறது. 




உரை ஓவியம்-9 , கட்டுரைகள் - 45, கடித இலக்கியம் - 54 தொகுதிகள், கவிதைகள் - 9 தொகுப்புகள், சிறுகதைகள் - 64 , புதினங்கள் -16 (சமூகப் புதினங்கள் -10, வரலாற்றுப் புதினங்கள்-6), நாடகங்கள் - 29, திரைப்படங்கள் கதை, திரைக்கதை, வசனம் - 60, திரை இசைப் பாடல்கள் - 53, தொலைக்காட்சித் தொடர்கள் - 3, சொற்பொழிவுகள் - 93 , பயண நினைவுகள், தன்வரலாறு- 19 இவை கலைஞரின் தொகுக்கப்பட்ட படைப்புகள். இந்த படைப்புகளின் பட்டியல் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 




சுயமரியாதை- சமூக நீதிக்கான வேட்கை கலைஞரிடம் கடைசி வரை இருந்தது, தன்னால் முடிந்தளவிலான லட்சியங்களை அவர் அடைய முற்பட்டார். அடுத்த  தலைமுறையைத் தனது படைப்புகள் மூலம் உசுப்பி எழுப்ப  அவரது இலக்கியங்களையும் பயன்படுத்திக் கொண்டார். அவரது அரசியலுக்குக் கலையும் எழுதும் கருவிகளாக அமைந்தன. அதனால் தான் அவர் உணவை  போலவே எழுதுவதையும் அத்தியாவசியமான ஒன்றாக அவர் கருதினர். 




அவரது பேனா தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் எழுதியது. அப்படியான எழுத்தில் அரசியல் கலந்த அகப்புற நவீன இலக்கியத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இந்நூல் ஒரு பருந்து பார்வையை நமக்களிக்கிறது. 




கலைஞரின் நூற்றாண்டு தொடங்கி இருக்கும் இத்தருணத்தில் இப்படியான ஆய்வு ரீதியிலான படைப்புகள் வெளிவருவது கலைஞர் எனும் பன்முக ஆளுமையைப் புரிந்துகொள்வதில் தமிழ்ச் சமூகம்   எடுத்து வைக்கும் முதல் படி என்றே சொல்லலாம். 






Comments