அட்டையைப் பார்த்ததும் ஏமாந்து போகும் வழக்கம் !


     

  கலைஞர் மறைந்த பிறகு அவருக்கு பல்வேறு வகையில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது, பல்துறை நிபுணர்கள் ஏதோ ஒரு வகையில் தமிழ்ச் சமூகம் கண்ட ஆகா சிறந்த ஒரு ஆளுமையின் மறைவை நினைவு கூறியிருந்தனர். பல சிறப்பிதழ்கள் வெளியானது, கலைஞரை எதிர்த்து அரசியல் பேசிய சிலர் கூட மிக ஆத்மார்த்தமான அஞ்சலியை அவருக்குச் செலுத்தினர். Frontline ஒரு சிறப்பிதழைக் கொண்டு வந்தது, அஞ்சலிக் கட்டுரைகள் பல சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. மார்க்சிய அறிஞர் எஸ்.வி.இராஜதுரை உணர்வுப்பூர்வமாக ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். வெகுஜன ஊடகமான முகநூலில் பல உருக்கமான கட்டுரைகளையும் காண முடியாது. ஒரு மனிதர் இறந்த பிறகும்  இளம் தலைமுறையைச் சேர்ந்த பல இளைஞர்களை(நான் உட்பட) தன்  வசம் ஈர்த்துள்ளார் என்பதே கலைஞர் கிரீடம் அமைத்த  திராவிட இயக்கத்தின் வெற்றி என்பேன். 



திராவிட இயக்கத்தை அறிவியக்கம் இல்லை என்றும், அது  கூத்தாடிகள் மூலமும்  மொழி வெறியின் மூலமும் கட்டமைக்கப்பட்ட இயக்கம் என்றும் தொடர் அவதூறுகள் கல்விப் புலத்தில் எழுப்பப்பட்டு வந்தன.  இந்த சிந்தனை பள்ளியைச் சேர்ந்த பலர் இன்றைக்கு வேறு நிலைப்பாடுகளை நோக்கி நகர்ந்திருப்பது கண்கூடு.



 இதே நிலைப்பாட்டோடு கலைஞர் மறைந்த பிறகு, குறைவான கால இடைவேளையில் ஆங்கிலத்தில் அவருக்கு இரண்டு புத்தகங்கள் எழுதப்பட்டன. இருவரும் பெண் ஊடகர்கள். பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். கலைஞரின் மீது மரியாதை கொண்டவர்களாக முன்னுரையில்  கட்டிக்கொண்டாலும், ஆழ்மனதில் இருக்கும் வன்மங்களை வரிகளுக்கு இடையே புகுத்துவதில் திறமைசாலிகள். 




சந்தியா ரவிசங்கர் எழுதிய Karunanidhi: A Life in Politics புத்தகத்தை இப்படி தான் மதிப்பிட விரும்புகிறேன், கலைஞரின் நெஞ்சுக்கு நீதி நூலை அரைகுறையாக மொழிபெயர்த்து, இடையில் ஜெயலலிதா, கலைஞர் மீது கொண்டிருந்த மலிவான அபிப்ராயங்களை எல்லாம் ஆங்கிலத்தில் கிறுக்கி ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் படைத்துள்ளார். அதையே கொஞ்சம் மாறுதலோடு, மேலும் சிலரது அபிப்பராயங்களையம் தன்னுடைய சார்பு தன்மை கொண்ட சுய மதிப்பீடுகளையும் கோர்த்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் வாஸந்தி. தமிழில் ‘கலைஞர் எனும் கருணாநிதி’ என்பது தான் தலைப்பு. 



ஒரு புத்தகத்தை மதிப்பிடுவது வாசகருடைய கடமை என்றே இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்தேன் , நூல் ஆசிரியரே இது ‘பட்சமில்லாத பார்வையுடன் எழுதப்பட்ட ’ புத்தகம் என்று சுய தம்பட்டத்துடன் இந்நூல் தொடங்குகிறார். கலைஞர் குறித்து காற்றில் பரவிக் கிடைக்கும் பொய்களையும் புரட்டுகளையும் நூல் முழுக்க ஆங்காங்கு தூவி வைத்திருப்பதைப் பார்க்கமுடிந்தது. 


  கலைஞர் மறைந்த இரண்டே ஆண்டுகளில் ஆங்கில வெளியில் அவரை எப்படி அடையாளப் படுத்த வேண்டும் என்பதை இருவரும் அறிந்தே இத்தகைய புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள் என்பது என் அவதானிப்பு. மேலும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த எவராலும் கலைஞருக்கு நேர்மையான வாழ்க்கை வரலாற்றை எழுதி விட முடியாது என்பது என் ஆழமாக நம்பிக்கை. 


கலைஞர் தன்னை சூத்திரர் என்று அடையாளப்படுத்திக் கொண்டதையும், ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொன்னதையும் தாழ்வுணர்ச்சி என்று விளிக்கிறார் இந்நூல் ஆசிரியர். மேலும் கலைஞர் ஆங்கிலத்தையும் இந்தியும் அறியாததால் தான் ஒன்றிய அரசியலில் பெரும் பதவிகளை வகிக்கத் தயங்கினார் என்கிறார். இது ஆசிரியருடைய தனிப்பட்ட அபிப்ராயமாக இருக்கலாம், ஏ.எஸ் பன்னீர்செல்வம் எழுதிய நூலைப் படித்தவருக்கோ அல்லது கலைஞரின் நெஞ்சுக்கு நீதியைப் படித்தவருக்கோ இப்படித் தோன்றி இருக்க வாய்ப்பில்லை. 


கலைஞர் தனது சுயத்தைத் திராவிட-தமிழ் சுயமரியாதை அடையாளத்தோடு மிக ஆழமாகப் பிணைத்துக் கொண்டவர். தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினாரோ அப்படியே அவர் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். “நான் ஒரு மானமிகு சுயமரியாதைக் காரன்” என்பதே அவரது நிரந்தர அடையாளமாக இருந்தது, தாழ்வுணர்வு கொண்ட எவராலும் தன்னை அப்படி முன்னிறுத்த முடியாது என்றே நினைக்கிறேன். அவர் கூறிய சுயமரியாதை அடையாளத்தில் திராவிட-தமிழ் பண்புகளும் அடங்கி இருந்தது.  பழமை மீதான பற்றும் புதுமை மீதான தேடலும் வாழ்நாள் முழுவதுமே அவருடன் செயல்பட்டது. ராமானுஜர் நாடகத்தை அவர் இறுதிகால ஆன்மீக பற்றுதலுக்காக  மேற்போட்டுக் கொள்ளவில்லை மாறாக இந்துத்துவம் சுவீகரிக்க முயலும் ஆளுமைகளை அவர் மதத்திற்கு அப்பாற்பட்டவையாக நிறுவ முயன்றார்.  இப்படியான ஒருவரை இந்நூலில் தொடர்ந்து அவரை பலவீனங்கள் கொண்டவராகவும், அஞ்சி நடுங்கியவராகவும் பாவிப்பது எரிச்சலை ஏற்படுத்தியது. 


கலைஞரின் நூற்றாண்டு தொடங்கி இருக்கும் இத்தருணத்தில், இந்நூலை எழுதியவரே  எடுத்துப் படித்தால் பல மதிப்பீடுகளை மாற்றிக் கொள்வர். ஆங்கிலமும் இந்தியம் தெரியாதவர் என்று பல இடங்களில் குறிப்பிடும் வாஸந்தி, இந்நூலையே அரைகுறை தமிழில் தான் எழுதி இருக்கிறார். பல இடங்களில் Google Translator பயன்படுத்தி மொழி பெயர்த்தது போல் தான் இருந்தது வாசிப்பு அனுபவம், உவமைகள் என்ற பெயரில் இவர் மேற்கொள்ளும் ஒப்பீடுகள் சலிப்பை ஏற்படுத்தின . ஒரு அடிக்குறிப்புகள்/மூல நூல்கள் பற்றிய சுவடு  கூட இல்லாமல் வாழ்க்கை வரலாறு எழுத முடியும் என்பதைத் தான் இதுபோன்ற நூல்கள் காட்டுகின்றன.





ஆ இராசா எழுதிய ‘2G Saga Unfolds’ நூலைப் பற்றிக் குறிப்பிடும் வாஸந்தி ஏனோ அதில் வந்த தீர்ப்பின் சாரத்தைத் தர மறுக்கிறார், மு.க. ஸ்டாலின் பற்றிக் குறிப்பிடும்போதும் சரி,  கனிமொழி பற்றிக் குறிப்பிடும்போதும் சரி, இந்நூல் ஆசிரியரின் ஒருதலைபட்சம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. 




ஒரு சாமானிய வாசகன் இந்நூலைப் படித்தால், பல அபத்த கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள இயலும், அரசியல் தெளிவுள்ளவர்கள் படித்தால் இந்நூலைக் காசு போட்டு வாங்கியதற்காக வருத்தப்படுவார்கள்.




 கலைஞர் குறித்து எளிமையாகத் தெரிந்துகொள்ள ‘படிக்கக் கூடாத’ புத்தகங்களின் பட்டியலில் சந்தியா ரவிசங்கர் நூலை முதலாவதாகவும் வாஸந்தி புத்தகத்தை இரண்டாவதாகவும் வரிசைப் படுத்த விரும்புகிறேன். முன்முடிவுகளோடு ஒரு கருத்தை நிறுவ எடுக்கப்பட்ட முயற்சி தான் இவ்விரு நூல்களும். 




கலைஞர் நூற்றாண்டில் சோழர்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஊடகர் தொகுத்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகம் கூட கலைஞர்  குறித்து  வெளியான சிறந்த தொகுப்பல்ல, அண்ணாவுக்கு 700 பக்கத்தில் புத்தகம் போட்டுவிட்டு, 95 வயது வரை வாழ்ந்த கலைஞருக்கு 400 பக்க புத்தகம், அதுவும் ஏனோ தானோ கட்டுரைகளோடு வெளியிடுவது ஒரு மாபெரும் ஆளுமைக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றே கருதவேண்டி இருக்கிறது. இன்றைக்குக் கட்சிக் காரர்கள் அதிகம் பரிசளிக்கும் புத்தகமாக இது விளங்கினாலும், அது தலைப்பாலும், அட்டை படைத்தலும் ஏற்பட்ட ஒன்றே அன்றி கருத்துக்காக அல்ல. அத்தொகுப்பைப் படித்தவர்கள் அதன் போதாமைகளை உணர முடியும். 




 அட்டையைப் பார்த்ததும் ஏமாந்து போகும் வழக்கத்தை நம்மவர்கள் விட்டொழிக்க வேண்டும். இந்நூல் அதற்கொரு சாட்சி. 


Comments