மணிப்பூர் எரியூட்டப் பட்டிருக்கிறது.


  



 “மணிப்பூர் பற்றி எரிகிறது” என்ற செய்தி கடந்த சில வாரங்களாக பொது வெளியில் அதிகம் உரையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் பற்றிய Cover Story ஒன்றை ஆகஸ்ட் மாத The Caravan இதழ் வெளியிட்டுள்ளது. GREESHMA KUTHAR என்ற ஊடகவியலாளர்மணிப்பூர்  கள சூழலை மிக யதார்த்தமாக எழுதியுள்ளார். 



வெகுஜன ஊடகங்கள் மூலம் நமக்குத் தெரிவிக்கப்படும் தகவல்களைக் காட்டிலும் அங்கு நிலை மோசம் என்பதையே நேரடி கள ஆய்வின் மூலம் எழுதப்பட்ட இக்கட்டுரை தெரிவிக்கிறது. மலைப் பகுதி x  சமவெளிப் பகுதி மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் இதனை சுறுக்கிவிட முடியாது. மதம், இனம், தத்துவம், போன்றவையும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 



பேச்சுரிமை மட்டும் அங்கு முடக்கப்படவில்லை, அடிப்படை வாழ்வுரிமை கூட அங்கு  மோசமான நிலையிலேயே இருக்கிறது. மருத்துவ வசதி  மலைப் பகுதி மக்களான குக்கிகளுக்கு  முற்றிலும் முடக்கப் பட்டிருக்கிறது, சமவெளி மற்றும் மலைப் பகுதிகளில் இணையச் சேவை மே மாதம் முதலே தடை செய்யப்பட்டுள்ளது. 144 அமலில் இருக்கிறது. உணவுப் பஞ்சம் தொடக்க நிலையில் தலைதூக்கி இருக்கிறது. எவ்வித பொருள் பரிமாற்றமும் நடைபெறா வகையில் சாலை வசதிகள் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. குக்கி இன மக்களின் வாழ்விடங்கள் எரிக்க பட்டிருக்கின்றன. உளவியல்  ரீதியிலான அழுத்தங்களும் மலைப் பகுதி மக்களுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது. 




ஆளும் அரசும், அதிகார வர்க்கமும் சமவெளி மக்களுக்கும் இந்துத்துவ கருத்து நிலைக்கும் ஆதரவான விதத்தில் செயல்பட்டு வருகிறது. துப்பாக்கிகள் திருடப்பட்டு, வன்முறைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனி மனித கொலைகள், பெண் உடன் மீதான வன்முறை, போன்றவை அதிகளவில் நடந்திருக்கிறது, 200 மேற்பட்டோர் உயிரிழப்புகளையும்  1500க்கும் மேற்பட்டோர்  காயங்களையும் அடைந்துள்ளனர்.  இந்த கணக்கு கூடுமே ஒழியக் குறைவதற்கு வாய்ப்பில்லை. 




80 நாட்கள் கழித்து இந்திய ஒன்றிய பிரதமர் வாய் திறந்திருக்கிறார், உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது, நாடாளுமன்றம் மணிப்பூர் விவகாரத்தைக் காரணம் காட்டி முடங்கி இருக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.கள்  மணிப்பூரில் நிலவும் சூழலை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்கள். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதியிடம் ஒரு கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 




காலம் காலமாக இதுபோன்ற முரண்பாடு அங்கு நிலவுகிறது என்றாலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற மனித வெறுப்பு சக்திகள் அங்கு மேற்கொண்ட இந்துத்துவ செயல்திட்டங்கள் மக்களைப் பல தரப்பாகப் பிரித்து வன்முறையைத் தூண்டி அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. 




மொய்தி இனத்தில் சமவெளிப் பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களைத் தான் முதலில் எதிரியாகக் கட்டமைத்து, சமூகம் இந்துத்துவ சாதிய விழுமியங்களை உட்செரித்து சாதியாக பிளவுண்ட பிறகு அங்குச் சமவெளி மக்களுக்கும் மலைப் பகுதி மக்களுக்கும் இடையிலான  மோதல் தீவிரமடைந்தது. 




வன்முறையாளர்கள், போதைப் பொருள் விற்ப்பனர்கள், வந்தேறிகள் போன்ற மனிதத் தன்மையற்ற முத்திரைகளைக் குத்துவதன் மூலம் ஒரு  சமூகத்தையே  எதிரியாகக் கட்டமைத்திருக்கிறது மணிப்பூர் ஆளும் அரசு.




மணிப்பூர் தானாகப்  பற்றி எரியவில்லை,  ஆதிக்க சக்திகளால் கொளுத்தப் பட்டிருக்கிறது. டெல்லி இந்திய அரசு, வட கிழக்கு இந்தியாவை 75 ஆண்டு விடுதலைக்கு பிறகும் எப்படியான நிலையில் வைத்திருக்கிறது என்பதற்கு மணிப்பூரில் நடைபெற்று வரும் இன அழிப்பே சாட்சியமாகத் திகழ்கிறது. 




"Long years ago we made a tryst with destiny” என்று நேரு தொடங்கிய உரை இன்னும் முடிந்தபாடில்லை. 




45 பக்க கட்டுரை pdfஐ,  இணைத்திருக்கிறேன். ஆர்வமும் நேரமும் இருக்கும் அன்பர்கள் அவசியம் வாசிக்கவும். 




மணிப்பூர் எரியூட்டப் பட்டிருக்கிறது.  




 




Comments