மூன்று

        


உங்கள் கட்சி கொள்கை என்னவென்று கேட்டதற்கு ‘அண்ணாயிசம்’ என்று சொன்ன புரட்சி நடிகரால் தொடங்கப்பட்ட கட்சி இன்றைக்கு ஆட்டமிழந்த பேட்ஸ்மேனின் ஸ்டம்புகள் போல் மூன்றாகச் சிதறிக் கிடக்கிறது. மூன்று பத்திரிகை, மூன்று தொலைக்காட்சி சேனல், மூன்று லெட்டர் பேட், மூன்று மாநாடு, மூன்று கட்சி அலுவலகம், மூன்று சின்னம், மூன்று கொடி என்று மூன்றும் முட்டிக்கொண்டு கிடக்கிறது. தெய்வத்தாய் படத்தில்  மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்றுவாய் அசைத்தவர்  இப்படி மூன்றாகச் சிதறிக் கிடப்போம் என்று நினைத்திருக்க மாட்டார். இந்த லட்சணத்தில் குப்பைக்குக் கூட ஆகாத வகையில் மூன்று கட்சியும் மூன்று பத்திரிக்கை தொடங்கிநடத்தி வருகறார்கள். 



பத்திரிகை 6 பக்கம் என்றால் அதில் விளம்பரம் மட்டும் 4 பக்கம், மீதி இரண்டு பக்கத்தில், ஒருவரை ஒருவர் திட்டி செய்தி வெளியிட ஒன்றரை பக்கமும், ஆளுங்கட்சியை விமர்சிக்க அரை பக்கமும் பயன்படுத்தப் படுகிறது.  ஒரு பத்திரிகைக்குக் குறைந்தபட்சம் என்று கருதப்படும் ‘தலையங்கம்’ கூட இந்த மூன்று பத்திரிகைகளிலும் இடம்பெறுவதில்லை.  தனக்கான சுயமான பார்வை கூட இல்லாத மூன்று கட்சிக்குப் பத்திரிகை தான் ஒரு கேடா என்றும் கேட்கத் தோன்றுகிறது. 



 எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற திரை பிரபலங்கள் இருந்திருந்தால் கூட, ‘என் காதலி’, ‘திரைக் கடலோடி திரைப்படம் எடுத்தோம்’ என்று ஏதாவது தொடர் எழுதி பத்திரிக்கை விற்பனை செய்திருக்கலாம், படிக்கத் தெரியாத தொண்டர்களின் கூடாரமாகிப் போன, மூன்றாகச் சிதறி கிடைக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாக இருக்கப் போகிறது?  கவலை அடையும் அளவுக்குப் பெரிய பிரச்சனை இதுவல்ல. ‘அண்ணா’ பெயரில் பத்திரிகை நடத்திய எம்.ஜி.ஆர்ன் தொண்டர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்கள்  'புரட்சி தொண்டன்' இதழை  அண்ணாவின் படம் கூட இல்லாமல் வெளியிட்டிருப்பது  வரவேற்கத்தக்கது. எடப்பாடி அதிமுகவும், டிடிவின் அ.ம.மு.கவும் ஓ.பி.எஸ் யிடம் பாடம் கற்க வேண்டும்.   


வெகு விரைவில், கருப்பும் சிவப்பும் காவியாகி, ஒரு பக்கம் மோடியும் மறுபக்கம் அமித்ஷாவும் நடுவில் பாரத மாதாவும் இடம் பெரும் காலம் தொலைவில் இல்லை என்பதைத் தான் காளான் போல் புதிதாக உதிக்கும் உள்ளீடற்ற பத்திரிகைகள் காட்டுகின்றன. 







Comments