"ரகசியமற்ற உலகம் சுவாரஸ்யமற்ற உலகமாகவும் இருக்கப் போகிறது."
சென்னை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னை மாநகராட்சியோடு இணைந்து தி ஹந்து குழுமம் புகைப்பட கண்காட்சியைச் சென்னை மாநகராட்சி- ரிப்பன் கட்டிடத்தில் ஏற்பாடு செய்திருந்தது. 50கள் தொடங்கி 90கள் வரையிலுமான புகைப்படத் தொகுப்பு இடம் பெற்றிருந்தது. மனதைக் கவர்ந்த புகைப் படங்களை மட்டும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன்.
அதில் சில படங்களை மட்டும் இங்குப் பகிர்கிறேன்.
1. முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று,தலைமைச் செயலக முதலமைச்சர் அறையில் நடைபெற்ற முதல் கூட்டம். இப்படத்தில் அண்ணாவுக்கு அருகில் கலைஞர் அமர்ந்திருப்பது தற்செயலானது அல்ல. தனது அரசியல் வரிசை அடையாளம் காட்டும் படமாகவும் இதைக் கொள்ளலாம்.
2. அண்ணா மறைந்து ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட தருணத்தில், கூடி இருந்த கூட்டம். அதில் கவனிக்க வேண்டிய ஒன்று, மக்கள் திரளாக அமர்ந்திருக்கும் சுவரில் ‘Hindi Down’ என்று ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் வாசகம். இன்றளவும் எத்தனை பொருத்தப்பட்டுள்ள வாசகமாக இருக்கிறது.
3. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா படங்களை எல்லாம் சமூக வலைத்தளத்தில் பார்த்த பிறகு, 1961ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தின் புகைப்படங்கள் ஆச்சரியமூட்டின. இலையில் பரிமாறப்பட்ட உணவைத் தரையில் அமர்ந்து மாணவர்கள் உண்ணும் காட்சி, சில மாணவர்கள் ஒரே இலையில் பகிர்ந்துண்ணும் காட்சி நெகிழச் செய்தது. அங்குத் தொடங்கி இன்றைக்கு நாம் வந்தடைந்திருக்கும் இடம் சுலபமாக அமைந்துவிட்டதல்ல.
4. 1991ம் ஆண்டு நடைபெற்ற அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலத்தில் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சரும் அன்றைய திமுக இளைஞர் அணி செயலாளருமான முக ஸ்டாலின். எல்லாரையும் முந்திக் கொண்டு ஒரு மாற்றுத் திறனாளி தோழர் தனது மூன்று சக்கர சைக்கிளில் செல்வது மனதைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கிறது.
இது போன்ற பழைய புகைப்படங்கள் நமக்குத் தெரிவிக்கும் ‘காட்சிச் தகவல்கள்’ எழுத்தைக் காட்டிலும் புரிந்துகொள்ளக் கடினமானவை. அனைவரது கைகளிலும் கேமரா வந்தடைந்த பிறகு புகைப்படங்களின் மதிப்பும், ‘அரிய’ என்ற சொல்லின் பொருளும் குன்றி வருவது வெளிப்படை. அனைத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளும் சமூகமாக நாம் உருவாகி இருக்கிறோம். ரகசியத்தனம் இல்லா சமூகம் என்னவாக உருவெடுக்கும் என்று தெரியவில்லை, அதனால் தான் பழைய புகைப்படங்களில் கிடைக்கும் ஆறுதலும், திருப்தியும் சமகால புகைப்படங்களில் கிடைப்பதே இல்லை. ரகசியமற்ற உலகம் சுவாரஸ்யமற்ற உலகமாகவும் இருக்கப் போகிறது.
The Hindu
Greater Chennai Corporation
#ChennaiDay
Comments
Post a Comment