இது வீரப்பன் ஆதரவு பதிவல்ல!
இது வீரப்பன் ஆதரவு பதிவல்ல!
ஜெயலலிதா அரசு ஆட்சியிலிருந்த 1992ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் நடந்தேறிய கொடூரத்தை நாம் மறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதி பழங்குடிகள் வசிக்கும் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கிவைக்க பட்டிருப்பதாகக் கூறி நடத்தப்பட்ட சோதனையில் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கலந்துகொண்டு அந்த கிராமமே சூறையாடப்பட்டது. 34 பேர் உயிரிழந்தார், 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் 28 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். 2011இல் இதற்கான தீர்ப்பு வெளியாகி 215 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். (விடுதலை திரைப்படத்தை முதல் முறை பார்த்தபோது இந்நிகழ்வு தான் கண் முன் வந்து சென்றது)
The hunt for Veerappanஆவணப்படம் வடமேற்கு மாவட்டங்களில் குறிப்பாக மலைப் பகுதிகளில் நடைபெற்ற காவல் மற்றும் வனத் துறை வன்முறைகளை மென்மையாகவே தொட்டுச் சென்றிருப்பதாகத் தோன்றியது. மக்கள் மனதில் அரசின் வன்முறைகள் ஏற்படுத்தும் வடு, தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகக் கடத்தப் படுகிறது. அரசின் அநீதிகளால் மொத்தமாக அந்நியமான(Alienated) மக்கள் திரள் வன்முறையைக் கையில் எடுக்கிறது. வீரப்பன் இப்படியான சமூக நெருக்கடிகளிலிருந்து உருவான ஒரு பாத்திரமாகக் கொள்ளலாம்.
1996ம் ஆண்டு நக்கீரன் பத்திரிகையாளர் ஒருவரால் வீரப்பனின் 9 மணி நேர உரையாடல் பதிவு செய்யப்பட்டது, சன் டிவியில் அது ஒளிபரப்பானது. பின்னாட்களில் “முதல் வேட்டையும் முதல் கொலையும்”(நக்கீரன் பதிப்பகம்) என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியானது. ‘சந்தனக்கட்டை’ வீரப்பனின் Memoirஆக இதைக் கொள்ளலாம்.
இந்த Documentaryன் தொடக்கத்தில் கூறப்பட்டிருக்கும் சமூக ஏழ்மைகளின் விளைவுதான் வீரப்பன். விவசாயத்தில் நிலையான வருவாய் இல்லாத காரணத்தால், மலைக்குச் சென்று மாடு மேய்ப்பது அப்பகுதி மக்கள் அனைவர்க்கும் பழக்கமானது, தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருக்கும் வன விலங்குகள் வேட்டையாடல் என்பதும் இதனூடாக இயல்பாகிப் போனது. அரிசிக்குக் கூட பஞ்சம் என்ற காரணத்தால் வேட்டைதான் தீர்வாக இருந்தது. நிலையான வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் வேட்டை என்பது நிரந்தரமான ஒன்றாக ஆகி விடுகிறது.
வனத் துறைக்குத் தெரியாமல் இவை நடைபெறவில்லை, கையூட்டு பெற்றுக் கொண்டே இவை எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. வேட்டையோடு சேர்த்து சந்தனக்கட்டைகளும் கடத்தப்பட்டிருக்கின்றன. இதற்கும் வனத்துறையின் ஆதரவு இருந்துள்ளது.
சோதனை எனக் கூறி கிராமங்களில் இருக்கும் ஆடு மாடுகளைக் களவாடுதல், பெண்கள் மீது பாலியல் ரீதியிலான அத்துமீறல்களை மேற்கொள்ளுதல் போன்ற மனிதமற்ற நடவடிக்கைகளிலும் காவல்துறையும் வனத்துறையும் ஈடுபட்டுள்ளதை வீரப்பன் ஆவணப்படம் முற்றிலும் புறக்கணித்துள்ளது.
எஸ்.பி கோபாலகிருஷ்ணன் அங்குள்ள மக்களால் ‘ஆடு திருடி’ என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி அமைப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ்நாட்டில் நடைபெற்ற பெரும்பாலான கலவரங்களில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் முற்றிலும் அநீதியானவை. இந்த ஆவணப்படம் காவல்துறையின் ஒடுக்குமுறைகளுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்றே தோன்றுகிறது.
வீரப்பன் மேற்கொண்ட வன்முறைகளை மதிப்பிடும் அரசின் அறநெறிக்கும்(Morality), அரசின் கொடூரங்களை எதிர்க்க வீரப்பன் கொண்டிருந்த அறநெறிக்கும்(Morality) எவ்வித ஒத்திசைவு இல்லாததையே ஒட்டுமொத்த வீரப்பன் சம்பவமும் நமக்குக் காட்டுகிறது.
இதில் அரசின் தரப்பை நியாயப்படுத்துவதும் வீரப்பன் தரப்பை நியாயப்படுத்துவதும் சிக்கலான ஒன்றாகவே இருக்கும்.
Comments
Post a Comment