BCCI - The Caravan sept
2011 தூர்தர்சனில் ஒளிபரப்பான உலகக் கோப்பையோடு கிரிக்கெட் பார்ப்பது, அதன் மீதான ஆர்வத்தைப் போலவே வெகுவாக குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் ஐபிஎல் போட்டிகளைத் தாண்டி ரோஹித் 100 ஐ கடந்து விளையாடும் சில போட்டிகளை மட்டும் காண வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.
பின்காலனிய இந்தியாவை விடப் பழமையானது BCCI(1929) தொடக்கத்தில் சமஸ்தான மன்னர்கள், பெரும் செல்வந்தர்கள், உயர்சாதியினரைத் தலைவர்களாகக் கொண்டு செயல்பட்ட இந்த ஆணையம், இந்தியாவின் அரசியல் விடுதலைக்குப் பிறகு உயர் தட்டு மக்களிடம் செல்வாக்கு பெற்றது, 1983 உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்தும், 1990களுக்கு பிறகான LPG நடவடிக்கைகளின் காரணமாகவும் அது வெகுஜன அந்தஸ்தை அடைந்தது. 2021–22 கணக்குப்படி BCCIன் மதிப்பு Rs 23,159 crore. சர்வதேச அளவில் வளமானகிரிக்கெட் ஆணையமாகவும் இது விளங்கி வருகிறது.
நிலைமை இப்படி இருக்கையில், முன்னெப்போதையும் விட அரசியல் செல்வாக்கு இந்த ஆணைய வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜகவின் வருகைக்கு பிறகும் ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் ஜெய் ஷா தலைமையேற்றதைத் தொடர்ந்தும் விளையாட்டு அரசியலின் ஒரு கைப் பாவையாக மாறி வருவதாக இக்கட்டுரை தெரிவிக்கிறது.
1934 இத்தாலியில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் முஸோலினிக்கும், ஜெர்மனியில் 1936ல் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஹிட்லருக்கும், கொடுத்த பிரபலத்தை 2023ல் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மோடிக்கு அளிக்கும் வகையில் முதல் மற்றும் இறுதி போட்டிகள், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் எல்லாம் குஜராத் மோடி மைதானத்தில் திட்டமிட பட்டிருக்கிறது.
நரேந்திர மோடி பெயரில் குஜராத்தில் மிகப் பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தைத் திறந்துவைத்தது தற்செயலானதல்ல, அங்கு நடக்கும் பெரிய அளவிலான போட்டிகளில் மோடி கலந்து கொள்வதும், அங்கிருக்கும் பாஜக அரசியல்வாதிகளே 80,000 மேற்பட்ட சீட்டுகளை வாங்குவதும், paranoid nationalism என்றே கருதவேண்டி இருக்கிறது. G20 மாநாட்டிலும் இது தான் நடைபெற்றது. இந்தியா என்ற சர்வதேச அளவிலான பெயரை மறுத்து பாரதம் என்ற உள்நாட்டில் பயன்படுத்தப்படும் பெயர் இந்து தேசியவாதத்தின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டதற்கு கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து வந்த ஆதரவு இந்திய கிரிக்கெட் ஆணையத்தின் தற்போதைய நிலைமையைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.
இதன் மூலம் விளையாட்டு வீரர்களின் வெளிப்படையான தேர்தல் அரசியல் ஆதரவும் சமூக வலைத்தளம் மூலம் பட்டவர்த்தனமாகப் புலப்படுகிறது. இது கிரிக்கெட்டை முழுக்க முழுக்க ஹிந்து தேசியவாத அரசியல் கருவியாக மாற்றுவதற்கான மிகத் தீவிரமான நடவடிக்கை என்றே தோன்றுகிறது.
இம்மாத The Caravan இதழில் வெளியான BCCI பற்றிய கட்டுரையைப் படிக்கும்போது ஏனோ இந்திய கிரிக்கெட் உடனான எனது சிறுவயது நினைவுகள் கண் முன் வந்து சென்றது. விளம்பரங்கள் குறைவாக ஒளிபரப்பான காலகட்டம் அது.
இந்திய கிரிக்கெட்டை ஆழமாகக் கவனிக்கும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை என்றே படுகிறது. இனி வீரர்களின் திறமையை விட அவர்களின் அரசியலும், அவர்கள் ஈட்டும் பணமுமே பிரதானமாக இருக்கும்.
Comments
Post a Comment