அந்நியன்
“இன்று அம்மா இறந்துவிட்டால் ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம் எனக்குத் தெரியாது.” இப்படியான அதிர்ச்சி மிகுந்த வரிகளைக் கொண்டு தொடங்குகிறது ஆல்பர்ட் காம்யூவின், அந்நியன்(The Stranger) . பொதுவாக 3rd Hand Translationsஐ தவிர்த்துவிடுவேன், அதாவது மூல மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும் எழுத்துக்கள் சுவாரஸ்யமற்ற நடையில் படிக்கக் கடினமாக இருப்பதாகத் தோன்றும். தொடக்கக் கால புத்தக வாசிப்பின்போது யான் பெற்ற அனுபவம் இது தான். ரஷ்ய இலக்கியங்களைத் தமிழில், மிகக் கொடுமையான மொழிநடையில் படிப்பது சலிப்பூட்டியது. படித்தால் ஆங்கிலத்திலேயே பிடித்துவிடலாம் என்ற உணர்வையும் அது ஏற்படுத்தியது. காம்யூவின் இந்நூல் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாலும் 'க்ரியா' பதிப்பித்திருக்கும் காரணத்தாலும் இந்நூலைத் தேர்ந்தெடுத்தேன். ஏமாற்றவில்லை.
உழைப்பிலிருந்து அந்நியமானவன் வாழ்க்கை மீதான பிடிப்பை இழக்கிறான், அவனுக்கு எல்லாம் அர்த்தமற்றதாக படுகிறது. வாழ்க்கை எந்த அர்த்தத்தையும் கொண்டிருக்கவில்லை, எந்த நம்பிக்கையைக் கொண்டு அதனை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளவியலாது என்பதை அவன் உறுதியாக நம்புகிறான். வாழ்க்கை அவனுக்கு அபத்தங்கள் நிறைந்த ஒன்றாகவே படுகிறது. இந்த அபத்தத்தை வாழ்க்கையின் அர்த்தமாக அவன் பாவிக்கிறான். அவன் இருப்புக்கு அபத்தம் அவசியமாகிறது. அர்த்தமற்ற நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையை யதார்த்தமான ஒன்றாக அவன் நம்பத் தொடங்கி அதன் மூலம் அவன் ஏற்படுத்திக்கொள்ளும் இருத்தலிய கோட்பாடு அபத்தவாதமாக(absurdism) வெளிப்படுகிறது.
‘அந்நியன்’ நாவல் முழுக்கவே அபத்தம் நிறைந்ததாக இருக்கிறது, நாயகன் Meursault தனது வாழ்க்கையை அப்படி தான் நமக்குத் தெரிவிக்கிறான். தாயின் இறப்பு, காதலியுடனான உடலுறவு, திருமணம் பற்றிய எண்ணம், முதலாளியுடனான உறவு, நட்பு, சுயத்தின் மீதான விருப்பம் என எல்லாம் அவனுக்கு இயல்பானவை, அதை அவன் உணரும் தருணத்தைக் கடந்து அதில் ஒன்றும் இல்லை என்பதை அவர் மிக ஆழமாக நம்புகிறான். அவன் மட்டுமின்றி அனைவரது வாழ்க்கையும் இப்படியானதாகவே அவனுக்குப் படுகிறது. மிக இறுக்கமான தருணத்தில் கூட அவனுக்குள் நகைச்சுவை உணர்வு உருவாகிறது, வெளியில் சொல்லாவிட்டாலும் அவன் அதை அனுபவிக்கவே செய்கிறான். தனக்குத் தண்டனை உறுதியானதும் தன்னை சந்திக்க வராத காதலி இறந்திருப்பாளா என்று அதிர்ச்சியடையும் அவனுக்கு அது இயல்பான ஒன்றாகவும் படுகிறது. மனிதர்களை விட 4 சுவர்கள் அவனுக்கு ஆறுதல் அளிக்கின்றன. நாவல் முழுக்கவே இப்படியான தருணங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கிறது, இறுதியில் கூட, சாவை அவன் மிக இயல்பாக எதிர்கொள்கிறான். இறப்பைக் கட்டி அணைக்கவும் அவன் தயாராக இருக்கிறான்.
கடவுள் என்பது மாயை நிறைந்த ஒன்றாக இருப்பதால் அவனால் கடவுளையும் கடவுள் சார்ந்த கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்திர உலகம் எவ்வித பிரமையும் அற்று யதார்த்தம் நிறைந்ததாக அவனுக்குப் படுகிறது.
Meursault பாத்திரம் எனக்குச் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் நாவலை நினைவூட்டியது , அந்நாவல் இப்படி தான் தொடங்குகிறது “ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான்”. காம்யுவின் ‘அந்நியனும்’, சு.ராவின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலும் இந்த வகையில் இறப்பிலிருந்து தொடங்குபவை, இருத்தலுக்காக ஏங்குபவை, நெற்றியில் அடித்தார் போல் அபத்தங்களை வெளிப்படையாகப் பேசுபவை.
ஒரு காலத்தில் கடவுள், அதன் மூலம் உருவாக்கப்பட்ட செயல்பாட்டு அதிகாரமாக அரசர், அவரை சார்ந்து மக்கள்/அடிமைகள் ஆகியோர் இருந்தனர். அறிவியல் வளர்ச்சி இதை எல்லாம் மாற்றி ஜனநாயக புரட்சிக்கு வித்திட்டது, எந்திர மயமாக்கல் மனித உழைப்பை ஆதாரமாகக் கொண்டது, இது அனைவரையும் பங்குதாரர்களாக உணரச் செய்தது, உற்பத்தியாகும் பொருளோடு தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வை அளித்தது, ஆனால் முதலீட்டும் ஆர்வம் இந்த உழைப்புக்கும் பொருளுக்குமானபிணைப்பை பின்னுக்குத்தள்ளி முதலையும் லாபத்தையும் முதன்மையாக்கியது. மனிதன் எந்திரத்தின் பாகம் போல் ஆகிப்போனான். இதனால் ஏற்படும் அந்நியமாதல் உலகம் முழுக்கவே அதிகரித்தது. காலனிய நாடுகளில் இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. பிரெஞ்சு காலனியாக இருந்த அல்ஜெரில் அமைந்த கதைக் களமும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் காம்யூவின் ஆரம்பக்கால வாழ்க்கையைப் பிரதிபலித்ததாகக் கருதலாம். அதன் விளைவாகவும் இந்நாவலை கொள்ளலாம்.
சமகாலத்தில், Social Media, Music Concerts, Happy Streets, Rage Room, போன்றவையெல்லாம் நம்மை காம்யூவின் ‘அந்நியன்’ ஆக விடாமல் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. சுயத்தை மறந்து யதார்த்தத்தில் அந்நியனாக உழலும் மனிதனுக்கு இவை அளிக்கும் நிம்மதி அபத்த உலக கடக்க உதவுகிறது.
அந்த வகையில் வெறுமையைப் போக்கிக் கொள்ள ஏதும் மற்ற உலகில் மனிதன் எப்படி இருந்திருப்பான் என்பதை உணர காம்யூவின் இந்த நாவல் நமக்கு உதவும்.
Comments
Post a Comment