அகில உலக 'சலபதி' ரசிகர் மன்ற தலைவர் அறிக்கை!
Gabriel García Márquezன் “Love in the Time of Cholera” நூலை இடையிலே நிறுத்திவிட்டு நேற்றிரவு, சலபதி மொழிபெயர்ப்பில் “துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்” என்று தலைப்பிடப்பட்ட பாப்லோ நெருடா கவிதைகள் நூலை இரண்டாவது முறையாக வாசிக்க தொடங்கினேன். முதல் முறை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வாசித்த நினைவு.
ஒரு வரலாற்றாய்வாளர் நேர்த்தியான மொழிபெயர்ப்பாளராகவும் அதே நேரத்தில் தமிழ் பண்டிதராகவும் இருக்க முடியும். அப்படி இருக்கும் ஒருவரால் மட்டும் தான் இத்தனை அபாரமான ஒரு அறிமுகத்தை நெருடாவுக்கு தமிழில் எழுத இயலும். என் 23 வயதில் நெருடாவின் சில கவிதைகளை மொழிபெயர்த்ததை இந்த வாசிப்பு நினைவூட்டி கொண்டேயிருந்தது.
ஒரு மனிதரின் இரண்டு பிறந்தநாளுக்கு மத்தியில் நிறைய மாறி விடுகிறது, சிலவற்றை தவிர.
இப்போதும் என்னிடம் புத்தக பரிந்துரை கேட்கும் அன்பர்களிடம் “அந்த காலத்தில் காபி இல்லை” நூலை தான் பரிந்துரைக்கிறேன். பெரியார் பற்றி தேட வேண்டுமென்றால் முதலில் சலபதி அது குறித்து ஏதாவது எழுதியுள்ளார் என்று தான் தேட செல்கிறது/சொல்கிறது நெஞ்சம்.
பெரியாரின் ஐரோப்பிய பயணம் குறித்த சலபதியின் “"From Erode to Volga: Periyar EVR's European Tour, 1931- 32” ஆய்வு கட்டுரையை, காணொளி வடிவில் மாற்ற முயன்று, The South Speaksஇல் அதை நிகழ்த்தவும் செய்தேன் . (Link in comments) பெரியாரின் ஐரோப்பிய பயணம் குறித்து தமிழ் சூழலில் வெளியான முதல் Info-creative காணொளி அதுவாக தான் இருக்கும்.
சமீபத்தில் வெளியான Aditya Balasubramanianன் “Toward a Free Economy Swantra and opposition politics in democratic India” நூலின் முன்னுரையில் அழகிய நன்றியை சலபதிக்கு தெரிவித்திருந்தார் அந்நூலாசிரியர். ஒரு ஆய்வு மாணவர் தனது குருவுக்கு 6 வரிகளில் 77 வார்த்தைகளை பயன்படுத்தி நன்றி தெரிவிப்பது அரிதாகபட்டது. மிக முக்கியமான ஆய்வு நூலக இது விளங்கும் அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. நூல் அறிமுகம் வெகு விரைவில்.
G. N. DEVY, TONY JOSEPH, RAVI KORISETTAR ஆகியோர் தொகுத்த “The Indians: Histories of a Civilization” நூலில் சலபதியின் கட்டுரையும் இடம்பெறும் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றம் தான். அந்நூலில் திராவிட இயக்கம் குறித்து இடம்பெற்றிருந்த ஒரே ஒரு கட்டுரையை ஸ்டாலின் ராஜாங்கம் எழுதி இருந்தார்.
‘அந்த கையெழுத்திட்ட கடிதம்’ வெளியான போது உடைந்து அழுதது உண்மைதான், அன்றிரவு மூன்றாம் சந்திப்பின்போது தனது நூலகத்திலிருந்து சலபதி எடுத்து படிக்க கொடுத்த சுந்தர ராமசாமியின் “எழுத்தின் ரகசியம்” கவிதையை வாசித்து தேற்றிக்கொண்டேன். பெருமாள் முருகன் ஐயாவின் அழைப்பு அமைதியூட்டியது. சாதனாவும் அருணும் மீட்டெடுத்தார்கள். ஆதர்சங்கள் ஏற்படுத்தும் மதிப்பீடுகள் குழையும் போது ஏற்படும் நம்பிக்கையிழப்பு கொடுமையானது என்பதை ஒரு கவிதையாக மட்டும் தான் என்னால் எழுத முடிந்தது.
நான் என்னவாக முயன்று கொண்டிருக்கிறேனோ, அதற்கு ஒரு வழிகாட்டியாக, தூரத்து ஒளியாக, என் பயணத்தின் திசைகாட்டியாக சலபதி திகழ்வார். பசுமரத்தாணி.
இடைப்பட்ட ‘ஊடல்’ மாதங்களை கவிஞர் இசையின் “எனக்கு தெரிந்துவிட்டது. நீ இல்லாது உன்னோடு இனித்திருக்க” என்ற வரிகளை கொண்டு நிரப்பி கொள்கிறேன்.
சென்னை இலக்கியத் திருவிழாவின் போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்களிடம், சலபதி என்னை அறிமுகம் செய்கையில் , “அகில உலக ரசிகர் மன்ற தலைவர்” என்று அறிமுகம் செய்தார். “1930களில் சென்னை” என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய அவ்வுரை கேட்க தாமதமாக சென்ற குற்ற உணர்வை அந்த பட்டம் தீர்த்தது.
தகுதியுடைய யாரேனும் அடித்து பிடுங்கும் வரை அப்பட்டத்தை நான் கொண்டிருப்பேன்.
அகில உலக 'சலபதி' ரசிகர் மன்ற தலைவராக பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து!
Keep Inspiring! 🙏😍
A.r. Venkatachalapathy
Comments
Post a Comment