மௌனம் ஏன் ?

  



Manoj Mittaன் Caste Pride புத்தகம் வெளியான உடனே படிக்கத் தொடங்கியும், பல இடங்களில் சாதி ஏற்படுத்திய மிக மோசமான வலிகளை பொருட்படுத்த முடியாமல் பாதியிலே நிறுத்தி இருக்கிறேன். இன்னும் முடித்த பாடில்லை. 


 சனாதனம் பற்றிய உரையாடலில் சாதியை நீக்கிவிட்டு வெறுமனே ஹிந்து மதத்தைச் சுட்டிக்காட்டி சில லிபரல்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் பேசும் மேற்கத்திய லிபரலிசம் முன்னிறுத்தும் அடிப்படையான சில மதிப்பீடுகளுக்கும் இந்த வாதம் எதிராக இருப்பது தான் இதில் முக்கியமானது. 


சனாதனம் என்பதில் சாதியும் அடங்கி விடுகிறது, வேதங்கள் நிரந்தரமானவை சாதிய படிநிலையும் நிரந்தரமானது என்பதைத் தான் சனாதன தர்மம் போதிக்கிறது. ஆண்டாண்டு காலமாக அரசியல்-சமூக வெளியில் சாதி நிகழ்த்திய வன்முறைகள் நம் சமகால கற்பனையில் கூட சிந்தித்துப் பார்த்திட இயலாதவை. அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களும், ஹிட்லர் ஜெர்மனியில் யூதர்களும் சந்தித்த கொடூரங்களுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல இந்தியாவில் பஞ்சமர்களும்-சூத்திரர்களும் சந்தித்த கொடூரங்கள். சமூக வெளியிலும் அரசியல் வெளியிலும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த,  தலையில் பிறந்த பார்ப்பனர்கள் பெரும்பாலான சீர்திருத்தங்களுக்கு எதிராகவே இருந்துள்ளனர் என்பதைத் தான் Mittaஇந்த நூலில் குறிப்பிடுகிறார். 


சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு இந்துத்துவர்களும் இந்து லிபரல்களும் ஆற்றும் எதிர்வினை மிக மோசமான தொனியில் வெளிப்படுகிறது. தனிமனித தாக்குதலும், கலைஞர் குடும்பத்தின் மீதான வன்மம் மட்டுமே இதில் பிரதானமாக வெளிப்படுகிறது. 


ஒரு சனாதனவாதியான பத்ரியின் பேச்சுரிமைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய தமிழ் அறிவுஜீவி வர்க்கம், அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எழுப்பப்படும் வன்முறைத்தனமான விமரிசனங்களுக்கு இதுவரை என்ன எதிர்வினை ஆற்றி இருக்கிறது ?  


“உதயநிதியிடம் நான் எதிர்பார்க்கிறேன்” என்று கட்டுரை எழுதிய டி.எம்.கிருஷ்ணா, “ உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்”  என்று கட்டுரை எழுதிய சமஸ் ஆகியோர் சனாதனம் குறித்த உரையாடலில் யார் பக்கம் ?


தமிழ்நாட்டில்  75 ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் எதிர்கால தலைவர் ஒருவர் இந்திய அளவில் சனாதனம் குறித்த உரையாடலைத் தூசி தட்டி தொடங்கி  வைத்திருக்கிறார். இந்தியாவைப் பற்றி அன்றாடம் கவலைப்பட்டுக் கட்டுரை எழுதும் சமூக நோக்கர்கள் அமைதி காப்பது என்ன வகை நியாயம். நாளைக்கு இந்துத்துவ பூதத்தை மட்டும் விரட்ட நம்மால் எப்படி முடியும்? 


அண்ணா ஹசாரே வெள்ளை ஜிப்பாவில் சாலைக்கு வந்த உடனே, கட்டுரைகளை எழுதிக் குவித்த தமிழ் அறிவுஜீவி வர்க்கம் இந்த உரையாடலில் பங்கேற்காமல் மௌனம் காப்பதேன். வேங்கைவயல், நாங்குநேரி, மேல்பாதி என்று சாதிய வன்முறைக்கு எதிராக எழுந்த குரல்கள், சனாதனத்தை எதிர்த்துப் பேசியதற்காக வன்மங்களைச்  சுமந்து கொண்டிருக்கும் உதயநிதிக்கு ஆதரவாக ஒரு சத்தம் கூட எழுப்பவில்லையே. 


தொலைவில் தெரியும் ஒளியைக் கூட அடையாளம் காணாமல் அறியாமையில் உழன்றே தமிழ்ச் சமூக அறிவுத்தளம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது.



Comments