அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது

 




     மெய்களை விடப் பொய்கள் அதிகம் புழங்கும் 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  கடந்த நூற்றாண்டைப் போல் விழுமியங்கள் பெரிய அளவிலான ஏற்பைப் பெறுவதில்லை. இதனால் சமூகம் சிறு சிறு குழுக்களாக சிதறுண்டு கிடக்கிறது. நவீன இனக்குழுக்கள் நாள்தோறும் உருவாகி வருவதை சமூக வலைத்தளம் நமக்குத் தெரிவிக்கிறது. பொய் மீது கட்டப்படும் கோபுரங்கள் அதிக உயரத்தை அடையும் நாட்களை மிகச் சுலபமாகக் கடந்து கொண்டிருக்கிறோம். 

இந்த நூற்றாண்டு நம்மால் கைக்கொள்ள இயலாத தகவல்களுக்கானது(data/information). புத்தகங்களையும், தொலைக்காட்சி திரைகளையும் மொபைல் திரைகள் பதிலீடு செய்து கொண்டிருக்கின்றன. சமூக நம்பிக்கைகள் பொய்த்து, உணர்வு அடிப்படையிலான தனிநபர் நம்பிக்கைகள் ஆதிக்கம் செலுத்தும் தகவல் தொழில்நுட்ப  யுகம் தொடங்கி இருக்கிறது. 

தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய இயலா வண்ணம் அது பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. தகவல் பெருக்கம், உண்மைகளைக் கண்டடைய விடாமல் உணர்வுகளுக்கு மட்டும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. உணர்வுகள் உண்மைகளை விட ஆறுதலளிப்பவை. அதனாலேயே உணர்வுகளைக் கொண்டு சிறு சிறு அடையாளங்களை உருவாக்கிட முடிகிறது. மரபார்ந்த பிற்போக்கு அடிப்படைவாத அடையாளங்களும் எழுச்சி பெறுவதற்கு உணர்வு பெருக்கம் காரணமாக அமைகிறது. 


நான்/ மற்றவர் என்ற எதிர்நிலைகள் தான் உரையாடலைச் சாத்தியப்படுத்துபவை. ஆனால் தகவல் யுகத்தில் வெறும் ‘நான்’ மட்டும்  தான் செயல்படுகிறது. நான் உண்மை என்று உணர்வதே எனக்கு உண்மையாக இருக்கிறது. Algorithm, Data, Information ஆகியவரை இந்த உணர்வின் மீதான பிடிப்பை மேலும் பெருக்குகிறது. உண்மை நோக்கிய பயணமே உரையாடலைச் சாத்தியப்படுத்தும், உணர்வு நோக்கிய தற்காலிக நிம்மதி உரையாடலை சாத்தியப்படுத்துவதில்லை. இப்படியான தகவல் திரட்சி(Info Bombs) அளிக்கும் நெருக்கடியை உலகிலுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் எதிர்கொண்டு வரும் நிலையில் பெரியாரின் வாசகத்தைத் தலைப்பாகக் கொண்ட “அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது” என்ற கருத்துரிமை சார்ந்த கட்டுரை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. 


‘மாதொருபாகன்’ நூலுக்கு எதிராக அடிப்படைவாதிகள் ஏற்படுத்திய நெருக்கடிகள்  "எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார். அவர் கடவுள் இல்லை, அவர் தன்னை உயிர்த்தெழுப்பப் போவதில்லை. அவருக்கும் நம்பிக்கை இல்லை. மறுபிறப்பு. ஒரு சாதாரண ஆசிரியர், அவர் ப.முருகனாக வாழ்வார். அவரை விட்டுவிடுங்கள்.” என்ற துயர் நிறைந்த வரிகளை ஒரு படைப்பாளி எழுதினார். 


‘கோழையின் பாடல்கள்’ கவிதை நூலை வாசித்தவர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘எழுதாமலிருந்த’ இரண்டாண்டு மௌனத்தைக் கேட்டிருக்க முடியும். தனக்குத் தெரிந்த ஒன்றைச் செய்யக்கூடாது என்று இச்சமூகம் முடக்கும்போது ஒரு மனிதன் வெளிப்படுத்தும் உணர்வுகளை (கோபம், வருத்தம், வலி, ஆற்றாமை) இந்த கவிதைத் தொகுப்பில் கவனிக்கலாம். இந்த கவிதைகள் எல்லாம் பக்குவப்பட்டு ஒரு கட்டுரை வடிவம் பெற்றால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு தொகுப்பாக அமைந்திருக்கிறது “அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது” என்ற கருத்துரிமை கட்டுரை தொகுப்பு. முன்னுரையில் “‘கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை கிடையாது’ என்பதே என் பார்வை. அதை நோக்கி மனித சமூகம் நகர்வதற்கு எத்தனையோ காலமாகலாம்.” என்கிறார் நூலாசிரியர்.இத்தொகுப்பில்  பெருமாள் முருகன் ஒரு கருத்தாளர் மட்டுமில்லை கருத்துரிமை முடக்கப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டவராகவும் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். 


27 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் சமீபமாக வந்த கட்டுரைகள் பல இணைய மற்றும் அச்சு இதழ்களில் வாசித்தவை, இதில் பல கட்டுரைகளோடு முரண்படவும் செய்திருக்கிறேன். சமூக அதிகாரத்தில் மேல்தட்டில் இருப்பவரையும் அடித்தட்டில்  இருப்பவரையும் ஒரே தராசில் வைத்து இருவரது கருத்துரிமையின் தன்மையும் ஒன்றெனக் கோரும் தாராளவாத பார்வையில் நான் உடன்படுவதில்லை. அதே போல் சுயமாக ஒருவர் முன்வைக்கும் ‘கருத்துக்களின்’  காலகட்டம் கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் யுகத்தில், கருத்துக்கள் வகித்த இடத்தை ‘ பிரச்சாரங்கள்’ இட்டு நிரப்புகின்றன. பிரச்சாரங்கள் ஏற்கனவே நிலவும் மேலாண்மை கருத்தியலை ஊதிப் பெருக்கப் பயன்படுத்தப் படுபவை , ஆழ்ந்த உள்ளீடுகள் ஏதுமற்று தன்மை கொண்டவை.  கருத்துரிமை பிரச்சார உரிமை ஆகாது. சமுக வலைத்தள யுகத்தில் சமூகத்தில் வெறுப்பை விதைக்கும், அதன் மூலம் வன்முறைக்கு வழிவகை செய்யும் பிரச்சார கருத்துக்களை  கருத்துரிமையில் சேர்க்க முடியாதென்றே கருதுகிறேன். 


கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லை இல்லை என்று சொல்லும் அதே நேரத்தில் வெறுப்பை உமிழும் கருத்து பிரச்சாரங்கள் ஆபத்தானவை என்பதிலும் நாம் தெளிவாக இருக்க வேண்டும். 


மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளை தொடங்கி பத்ரி வரை கருத்துரிமை குறித்தான பல நிகழ்ச்சிகள் இதில் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் காந்தி வருகிறார், பெரியார் வருகிறார், ராஜாஜி வருகிறார், சல்மான் ருஷ்டிக்கும், நோம் சோம்ஸ்கிக்கும்   இடமிருக்கிறது, டானியல் ஜெயந்தன் வருகிறார், மலையாள மற்றும் ஒரிய எழுத்தாளர்கள் வருகிறார்கள், மனுஷ் வருகிறார், விடுதலை சிகப்பியின் கருத்துரிமை பேசப்படுகிறது, ஜெயமோகனுக்கு பெ.மு பாணியில்  மென்மையான கண்டனமும் பதிவு செய்யப்படுகிறது.  சாதி, மதம், அரசு, நீதிமன்றம், காவல்துறை  போன்ற அதிகார அமைப்புகளும் அவர் மேற்கொண்ட கருத்துரிமை முடக்க நடவடிக்கைகளும் கண்டிக்கப்படுகின்றன. மரபார்ந்த அமைப்பு முதல் நவீன அமைப்புகள் வரை கருத்துரிமை ஒரு கோட்பாடாகவும் நமக்கு விவரிக்கப் படுகிறது. 

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள்பல்வேறு  காலகட்டங்களில் ஒரே வகைமையின் கீழ் எழுதப்பட்டவை என்பதால் ‘கூறியது கூறல்’ தவிர்க்க முடியா ஒன்றாக மாறிவிடுகிறது. பல நேரங்களில் இது ஒருவித தெளிவையும் அளிக்கிறது. 

சமீபத்தில் வெளியான பெ.மு வின் ‘நெடுநேரம்’ நாவல் கூட அசுரலோகத்து கதாபாத்திரங்களையும், ஊர்ப் பெயர்களையும் தாங்கி வருகிறது. மாதொருபாகன் பிரச்சனை ஏற்படுத்திய வடு புனைவுக்கு மேலும் ஒரு புனைவுத் தன்மையைக் கொடுத்துள்ளது.  இக்கட்டுரை தொகுப்பில் கூறப்படுவதைப் போல் படைப்பாளியே மேற்கொள்ளும் ‘சுய தணிக்கை’ என்றும் இதைக் குறிப்பிடலாம். புனைவில் இயல்பாக இடம்பெறும் யதார்த்தத்தை அழித்துப் புனைவைக் கூடுவதற்குக் ஒரு காலத்தில் அவர் சந்தித்த கருத்துரிமை முடக்கம் வழிவகை செய்துள்ளது வருந்தத்தக்கது. 100 ஆண்டு கடந்து 'நெடுநேரம்' நாவலை  வசிக்கும் வாசகன், இந்த காலகட்டத்தைக் கருத்துச் சுதந்திரத்திற்கு மிக மோசமான காலகட்டமாகவே மதிப்பிடுவான். 


தகவல் தொழில்நுட்ப யுகத்தில், எல்லாம் ‘மிகை’ஆக்கத்திற்கு ஆட்பட்டு வரும் காலகட்டத்தில் கருத்துரிமை குறித்தும் நாம் நிறையச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. அதற்கு இந்த தொகுப்பு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையும், கருத்துரிமை களத்தில் தொடர்புள்ளி என்றும் சொல்லலாம்.  



Comments