MGR: The Man and The Myth

 




வட இந்திய ஊடகர் Neerja Chowdhury எழுதிய “How Prime Ministers Decide” நூலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. பிரதமர் பதவி போன்ற அதிகாரம் நிறைந்த பொறுப்பில் ஒருவரது முடிவுகள் எப்படி எட்டப் படுகின்றன என்பதை ஒட்டிய அத்தியாயங்கள் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளியாகி இருக்கிறது. நேரு பற்றி ஏற்கனவே பல்வேறு புத்தகங்கள் வெளிவந்த காரணத்தால் அவரை தவிர்த்துவிட்டு இந்திரா காந்தியின் எமெர்ஜென்சிக்கு பிறகான ஜனநாயக தேர்தல் நடத்துவது பற்றிய முடிவுகள் எல்லாம் எதனால் எடுக்கப்பட்டன என்பதை விளக்கமாகப் பேசுகிறது. இதைப் போலவே வி.பி சிங், ராஜிவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உட்பட பல்வேறு பிரதமர்களைப் பற்றியும் அவர்கள் எடுத்த முக்கிய முடிவுகளையும் அதற்குப் பின்னணியில் இயங்கிய அதிகார மையப் புள்ளிகள் குறித்தும் இந்நூல் வெளியாகி உள்ளது. முன்னுரையைப் படித்ததும், தமிழ்நாடு முதலமைச்சர்களுக்கு இப்படி ஒரு நூல் எழுதப்பட்டால் நல்லா இருக்குமே! என்ற எண்ணம் ஏற்பட்டது. 


முன்னாள் காவல் துறை அதிகாரி, K. Mohandas எழுதிய MGR: The Man and The Myth நூல் ஓரளவுக்கு Neerja Chowdhury நூலுக்கு நெருக்கமாக இருப்பதாகப் பட்டது. Mohandasன் இந்நூலைப் படிக்கத் தொடங்கியபோது அதன் முதல் சில பக்கங்களே இது எப்படிப் பட்ட நூல் என்பதை உணர்த்திவிடுகிறது. அது ஏற்படுத்திய விழிப்பும் கவன உணர்வும் இறுதிவரை தொடரவே செய்கிறது. செல்வாக்கு நிறைந்த ஒரு அரசு அதிகாரியாக எம்.ஜி.ராமச்சந்திரனின் Good Book-ல் இடம்பெற்றிருந்த K. Mohandas, MGR என்ற ஆளுமை மீது, தான் செலுத்திய தாக்கத்தை சுய தம்பட்ட பாணியில் நூலாக எழுதியுள்ளார். பெரிய பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் ஆகியோர் “நான் லாம் எப்படிப் பட்ட ஆளு தெரியுமா” என்ற தொனியில் பேசுவதைக் கேட்டிருப்போம் , அதே தொனியில் ஒரு நூல் எழுதப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் உணர முடியும். 



அதிகார மையங்கள் வெகுஜன இயல்புகளிலிருந்து தள்ளி இருக்கும் காரணத்தால் தான் மரியாதைக்குரிய ஒன்றாகக் கருதப் படுகிறது. வெகுஜ தன்மையிலிருந்து அதிகார மையம் எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி உள்ளதோ அவ்வளவு மதிப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. மாநாட்டு  மேடைகள், கோவில் கருவறை, இமய மலையின் உச்சி, முதலமைச்சர் நாற்காலி போன்றவை எல்லாம் இப்படியான பண்புகளைக் கொண்டவை. அதைப் போலவே சினிமா, அரசியல் போன்றவை உருவாக்கும் பிம்பங்களும், அதனால் ஏற்படும் ஆளுமையும், அந்த ஆளுமை ஏற்படுத்தும் கவர்ச்சியும், கவர்ச்சி பெற்றுத் தரும் மரியாதையும் அதிகாரத்தோடு தொடர்புடையவை. அதிகாரம் இரகசிய தன்மை கொண்டது. அனைத்தும் வெட்ட வெளியில் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி காட்சிப்படுத்தப்பட்டால் அதிகாரமும், மரியாதையும் அர்த்தமற்றவையாக ஆகி விடும். சமூக ஊடக யுகத்தில் அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள்/ஆளுமைகள் இத்தகைய சிக்கலைத் தான் சந்தித்து வருகிறார்கள். எவ்வித ஒளிவு மறைவு மற்ற, ரகசியங்கள் அற்ற வெளிப்படைத்தன்மை நிறைந்த ஒரு உலகத்தை சமூக ஊடகம் சாத்திய படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை ரகசியத்திற்கு எதிரானது, எனவே அதிகாரத்திற்கும் எதிரானதாகவே உள்ளது. எம்.ஜி.ஆர்  இந்த சமூக ஊடக யுகத்திற்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி, சினிமா, அச்சு ஊடகம் போன்றவை ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அவரது பிம்பம் உச்சத்திலிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒருவித கடவுள் தன்மையைப் பெற்றுத் தந்தது. அவர் சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு செய்ய ஒரு கூட்டம் இருந்தது. அவர் இறப்பை நம்ப முடியாத, இன்றளவும் அவர் சமாதியில் காது வைத்து வாட்ச் சத்தம் கேட்கும்  ஒரு கூட்டம் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் ரகசியங்கள், கவர்ச்சி அதன் மூலம் ஏற்பட்ட அதிகாரம். 



அப்படியான அதிகாரம் பொருந்திய ஒரு நபருடன் தான் கொண்டிருந்த தொடர்பும் அதன் காரணமாக, அவரை பற்றிய ரகசியங்கள் அனைத்தையும் நான் அறிவேன் என்ற சூரத்தனமும் இந்நூலுக்கு வித்தாக இருந்துள்ளது. இப்படியான நூலை எழுதுவதன் மூலம் சமூகம் தனக்கு வழங்கப்போகும் மதிப்பை அறிந்தே இந்நூலை Mohandas எழுதி உள்ளார். 




எம்.ஜி.ஆர் எடுத்த முக்கிய முடிவுகளுக்குப் பின்னணியில் தான் இருந்ததை, 3 பக்கத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு சம்பவத்தைக் கொண்டு நமக்குத் தெரிவிக்கிறார். எம்.ஜி.ஆர் பற்றிய அந்தரங்க விஷயங்கள் சிலவற்றை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஈழம் குறித்தும் ஈழப் போராட்ட அமைப்புகளை அதிமுக எதிர்கொண்ட விதம் குறித்தும் அறிந்து கொள்ள இந்நூல் ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. 




எம்.ஜி. ஆர் தலைமையிலான அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் காவல்துறை எடுத்த மக்கள் விரோத போக்கை எவ்வித குற்ற உணர்வும் இன்றி சட்டையில் குத்திக்கொண்ட பதக்கம் போல் பெருமையாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் ஈழப் போராட்டம் உச்சத்திலிருந்த காலகட்டத்தில் போராளி இயக்கங்களுக்குத் தமிழ்நாடு எப்படிப்பட்ட அடைக்கலத்தை அளித்தது, அந்த அடைக்கலம் ஏற்படுத்திய பின்விளைவுகள் ராஜிவ் படுகொலை வரை சென்றதையும் இந்நூல் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். ஈழப் போராட்ட இயக்கங்களை காவல்துறையும் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசும் எப்படி அணுகின என்பதை அறிந்துகொள்ள இந்நூல் பயன்படும்.



 அதே போல் அதிமுகவில் அதிகார மையங்கள் எப்படிப் பட்டவையாக இருந்தன, முடிவுகளைத் தீர்மானிப்பதில் எம்.ஜி. ஆர் கொண்டிருந்த அறுதி தன்மை ஆகியவற்றை எல்லாம் ஓரளவுக்கு அறிந்து கொள்ள முடிகிறது. ஆர். எம் வீரப்பன், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன், எஸ். டி. சோமசுந்தரம், இரா . நெடுஞ்செழியன் போன்றவர்கள் உண்மையிலேயே எம்.ஜி.ஆர்-ன் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துபவர்களாக இருந்தார்களாக என்ற கேள்விக்குப் பதில் தேடும் முயற்சியில் இந்நூல் முக்கிய பங்கு வகிக்கும். 




இந்நூலைப் படிக்கத் தொடங்குபவர்கள், தலைப்பைப் படித்ததும் எம்.ஜி. ஆர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய நூல் என்று எண்ணிவிடக் கூடாது. நூலின் 31ம் அத்தியாயத்தை முதலில் வாசித்துவிட்டு பிறகு இந்நூலைப் படிக்கத் தொடங்குவது பல தெளிவுகளை நமக்கு வழங்கும். எம்.எஸ்.எஸ் பாண்டியன் தனது ‘Image Trap’ நூலில், எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு நூல்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் இலக்கணங்களையே இந்நூலும் கொண்டிருக்கிறது. இருந்தாலும் பல Insider தகவல்களை இந்நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். அக்கால கட்டத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த விழிப்புடன் இந்நூலை வாசிக்கத் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். 




Philip Sprattன்  ‘D.M.K. in Power’, Mohan Ramன் ‘Hindi Against India. The Meaning Of Dmk’ ஆகிய சில கவனம் பெறாத நூல்களின் பட்டியலில் இந்நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி எம்.ஜி.ஆர் குறித்த விமர்சனங்கள் அடங்கிய ஒரு நூலாக இந்நூலின் தலைப்பை வைத்து முடிவு செய்வது மிகப் பெரிய Myth. 




 




 


Comments