கலைஞர் 100 : விகடனும் கலைஞரும்!

  


  இந்த ஆண்டு  ஜூன் 3 அன்று தொடங்கிய கலைஞர் நூற்றாண்டு தமிழ்நாடு அரசு விழாவாகவும், கட்சி நிகழ்வாகவும், பல அமைப்புகளாலும்  தமிழ்நாடு முழுக்க சிறப்பான முறையில் கொண்டாடப் பட்டு வருகிறது. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை என இரண்டு பெரும் கட்டமைப்புகள் தலைநகரையும் கலைநகரையும் அலங்கரிக்கின்றன. அரசு விழாக்கள், அறிக்கைகள், கட்சி நிகழ்வுகள் அனைத்தும் ‘கலைஞர் 100’ லோகோவுடனே வெளியாகிக் கொண்டிருக்கிறது. 


திமுக தலைமை கழகத்தின் சார்பில்,சார்பு அணிகளுக்குக் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்நிகழ்ச்சிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. கலைஞர் 100 வினாடி வினா போட்டிகள், தொகுதி தோறும் கலைஞர் 100 பதிப்பகங்கள் ஆகியவை குறிப்பிட தக்கவை. 


இந்தாண்டு கலைஞரின் நூற்றாண்டு மட்டுமல்ல, பெரியாருக்கு 50-வது நினைவு விழா ஆண்டு,  திமுக தொடங்கப்பட்டு 75-வது ஆண்டு, மேலும் மாநில சுயாட்சி தீர்மானம் இயற்றப்பட்ட 50ஆண்டையும்  தமிழ்நாடு சட்டமன்றம் எட்ட உள்ளது. நூற்றாண்டை முன்னிட்டு முரசொலிநாளிதழ் மாதம் தோறும்  3ம் தேதியில் சிறப்பிதழ் வெளியிட்டு வருகிறது. எழுத்தாளர் இமையம் கலைஞர் எழுதிய புத்தகங்களின் தலைப்புகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதைப் போலவே கலைஞரைப் பற்றிய பல்வேறு புத்தகங்களும் எழுதப்பட்டு வருகின்றன. அவரது பழைய புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்படுகின்றன.  கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவர் பற்றி 100 புத்தகங்கள் போன்ற அறிவிப்புகளை எல்லாம் காண முடிந்தது. 


கலைஞரை பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்த்தும் சிலசமயங்களில்  ஆதரித்தும் எழுதிய விகடன் குழுமம் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ‘கலைஞர் 100 விகடனும் கலைஞரும்’ என்ற நூலைத் தமிழ்நாடு முதலமைச்சரை வைத்து வெளியிட்டது. முதலமைச்சர் மற்றும் இளைஞர் அணி செயலாளர் ஆகியோரின் வாழ்த்தோடு வெளியான 703 பக்க நூலைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. கலைஞர் எழுதியகட்டுரைகள்  சிறுகதை தொடங்கி அவரளித்த பேட்டிகள்,நேர்காணல்கள், கலைஞர் குறித்து பிறர் எழுதிய கட்டுரைகள், முக்கிய நிகழ்வுகளின்போது விகடன் எழுதிய தலையங்கள், கலைஞரைச் சுற்றி நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த கட்டுரைகள், கலைஞரின் குடும்பத்தினர் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை எல்லாம் இந்நூலில் படிக்க முடிந்தது. கூறியது கூறலை பல்வேறு இடங்களில் காணமுடிந்தது. 

மிகவும் இக்கட்டான அரசியல் சூழல் நிலவிய சமயத்திலும் கலைஞர் அளித்த சாதுரியம் நிரம்பிய பதில்களை இன்றைக்கும்  ரசிக்க முடிந்தது. காலமற்ற பதில்கள் அவை.  நிகழ்காலத்தில் அமர்ந்து கொண்டு கடந்த காலத்தை மட்டுமல்ல கடந்த கால மனிதர்களின் ஆளுமையை மதிப்பிடவும் இந்நூல் பயனுள்ள ஒன்றாக அமைகிறது. விமர்சனங்கள் அடங்கிய கட்டுரைகள் இதில் இடம்பெறவில்லை, மென்மையான விமரிசனங்கள் அடங்கிய கட்டுரைகள் மட்டும் இதில் இடம்பெற்றுள்ளன. முதலமைச்சரை வைத்து வெளியிட வேண்டும் என்பதால்  விகடன் செய்த ஏற்பாடாக இருக்கலாம். 

தற்போது கலைஞர் செய்திகள் ஆசிரியராக இருக்கும் திருமாவேலன் எழுதிய சில கட்டுரைகள் உணர்வுப்பூர்வமாக இருந்தன, ஒரு தகவலை வார்த்தை அலங்காரம் கொண்டு சுவையான ஒன்றாகச் சமைக்க முடியும் என்பதை அவரது கட்டுரைகள் உணர்த்தின. கலைஞரின் பேட்டிகளை எல்லாம் படிக்கையில்  கலைஞர் என்ற அரசியல் நாயகன் இல்லாத தமிழ்நாட்டு அரசியல் வெளி சுவாரசியம் அற்றதாக இருக்கிறதோ என்றே தோன்றுகிறது. 20தில் விளைந்த கலைஞர், தனது 70 ஆண்டுக்கால சமூக-அரசியல் வாழ்க்கையில் 50 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் அன்றாட அரசியல்  உரையாடலைத் தீர்மானிப்பவராக இருந்தார். அச்சுப் பத்திரிகை காலத்தில் மட்டுமல்ல, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வரை அவரது கருத்து பொருத்தப்பாடுடையதாகவே இருந்தது இப்போதும் அப்படியே. சனாதன சர்ச்சை எழுந்த போதும் கூட கலைஞர் பல இடங்களில் மேற்கோளிடப்பட்டார். அவரை வாழ் நாள் முழுக்க தூற்றியவர்களே அவரை மேற்கோள் காட்டும் நிலை சமீபத்தில் ஏற்பட்டது. 

 20-ம் நூற்றாண்டில் பெரும் புறக்கணிப்புகளையும் ஒடுக்குமுறையையும்  சந்தித்த திராவிட இயக்கம், தேசிய பார்வைக்கு மாற்றாக ஒரு பன்மைத்துவ அரசியல் பார்வையைக் கொண்டிருந்தது. மாநில சுயாட்சி, பிரதிநிதித்துவம், மத நல்லிணக்கம், மொழி உரிமை போன்ற கொள்கைகளில் திமுக கொண்டிருந்த நிலைப்பாட்டை அன்றைக்கு ஒன்றியத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் இன்றைக்கு வரித்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி தீர்மானத்தின் 50-வது ஆண்டில் அதே மாநில சுயாட்சியைப் பிரதானமாகக் கொண்டு INDIA கூட்டணி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. 75 ஆண்டுக் கால இடைவெளி திராவிட இயக்கத்தின் பொருத்தப்பாட்டினை முன்னாள் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியுள்ளது. 


ஆட்சி வட்டம் மட்டுமின்றி அறிவு வட்டமும் திராவிட இயக்கத்திடம் காட்டும் நெருக்கம், நமது கொள்கைகளை வெற்றிகரமாகச் செயலாக்கியதால் வந்த விளைவு. இந்நூலில் உள்ள கட்டுரைகளில் வெகு சில பகுதிகள் தவிர்த்து அனைத்து இடங்களிலும் ‘கருணாநிதி’ என்றே பயன்படுத்துகிறார்கள் கட்டுரையாளர்கள்,  நூலின் தலைப்பு ‘கலைஞர் 100: விகடனும் கலைஞரும்’ என்பதாக இருக்கிறது.  இந்த நுண் மாற்றத்தைச் சந்தர்ப்பவாதம் என்றாலும் 21-ம் ஆண்டில் திராவிட இயக்கத்தின் செல்வாக்கைக் குறிப்பதாகவும் கருதலாம். 


Comments