ஆளண்டாப் பட்சி

 



 இது வரை நான் வாசித்த அளவில் பெருமாள் முருகனின் நாவல்கள் ஏதோ ஒரு வகை ஏக்கத்தில் தொடங்கித் தேடலில் நிறைவு பெரும், சில சமயம் நிறைவு பெறாமலேயே போகும். ‘மாதொருபாகன்’ - குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஏக்கம், ‘நெடுநேரம்’ அம்மாவைத் தேடி அலையும் மகனின் ஏக்கம், ‘பூக்குழி’ காதல் திருமணம் செய்தும் நிம்மதியைத் தேடும் ஏக்கம், ‘பூனாச்சி’ - 7 குட்டிகளைப் பெற்றும் அவற்றைத் தற்காத்துக் கொள்ள முடியாத ஏக்கம். இப்படி ஒரு பாத்திரத்தின் ஏக்கம் அவர்களைச் சுற்றியுள்ள கதை மாந்தர்களைத் தீர்மானிக்கும். அதிலிருந்து கதை மெல்லமாக, நிலத்தையும், சூழலையும், மனிதர்களின் ஆழ்மன ஓட்டங்களையும் கொண்ட விவரிப்புகளால் நகரும். 


‘ஆளண்டாப் பட்சி’ நாவல் பெருமா-முத்து இணையரின் நிலத்திற்கான ஏக்கம். கூட்டுக் குடும்ப சொத்து தகராற்றில் இளையவன் முத்து ஏமாற்றப் படுகிறான், முத்துவின் மனைவி பெருமா, முத்துவின் அண்ணனாலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். உழத் தகுதியற்ற நிலத்தை ஒதுக்கி தன்னை சொந்த குடும்பத்தாரே ஏமாற்றி விட்டனர்  என்ற வலியும், சொந்த அண்ணனால் தன் மனைவிக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டலும்  புதிய நிலத்தைத் தேடி அலையை வைக்கிறது. கொங்கு மண்டலத்தில் வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த பாத்திரங்கள் தான் பெருமாள் முருகனின் பெரும்பாலான கதைகளின் மாந்தர்கள் என்பதால் அந்நிலம் மழைக்கு ஏங்கித் தவிப்பதைப் போல், மாந்தர்களும் ஏதோ ஒன்றிற்காக ஏங்கித் தவிக்கிறார்கள். 


மாட்டு வண்டி, மாடுகள் இந்நாவலில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. நிலையற்ற வாழ்க்கையை வாழும் முத்து நிலைக்க ஒரு நிலம் தேடி அலைகிறான். நிலத்தை அடைந்ததும் மனம் அடங்கி விடவில்லை, ஏக்கம் குறைகிறது,  நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்குகிறது. இந்த வைராக்கியம்  புறச் சூழலால், தன் மனைவி சந்தித்த அவமானத்தால் ஏற்படுகிறது. 


Django Unchained திரைப்படத்தில் வருவதைப் போல், முத்துவுடன், குப்பண்ணன் என்ற கதாபாத்திரம் நாவல் முழுவதும் உடன் வருகிறார். அவர் கிண்டும் கேப்பங்களி, மாடுகளைப் பராமரிப்பதில் அவர் செலுத்தும் அக்கறை, பயணங்கள் மூலம் அவர் கொண்டிருந்த அனுபவ அறிவு, அதைக்கொண்டு அவர் சொல்லும் கதைகள் என நாவலின் முக்கிய துணை பாத்திரமாக குப்பண்ணன் வருகிறார்.  


குப்பண்ண சொல்லும் கதை ஒன்றின் மூலம் தான் நாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் பெரியார் வந்து செல்கிறார். தன் தாத்தாவிற்கும் பெரியாருக்கும் இடையே நடைபெற்ற சுவாரசியமான ஒரு உரையாடலைக் கதையாக்கிச் சொல்லுவார் குப்பண்ணன். தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் பெரியார் பயணம் செய்துள்ளார். அங்குள்ள செல்வாக்கான மனிதர்களின் வீடுகளில் தங்கிச் சொற்பொழிவாற்றும் வழக்கம் அவருக்குண்டு.  இந்நாவலில் கீழ கோயிலுக்கு முன்பு இருந்த நாற்பது கால் மண்டபத்தில் பெரியார் உரையாற்றுவதாக வந்த விவரிப்பு என் தாத்தா எனக்குச் சொல்லிய கதைகளை நினைவூட்டியது. 


இந்நாவலில் பெரும்பாலான இடங்களை யோசித்துப் பார்த்து அனுபவிக்க முடிந்தது. ஒரு கிராமம் எவ்வளவு பிற்போக்கானதாக இருந்தாலும், அநீதிகளுக்குத் துணை போயிருந்தாலும், கொடுமையானதாக இருந்தாலும்,  மனித மனம் கிராமங்கள் பற்றிக் கொண்டிருக்கும் கருத்து பெரிதாகச் சிதைந்துவிடவில்லை. அதி வேகமாக நகரமயமாகிக் கொண்டிருக்கும் சமூகத்தில் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்தவர்கள் கிராமங்களைச் சிலாகிக்கிறார்கள். ஊர், திருவிழா, சடங்கு, பண்பாடு போன்றவை ஏதோ ஒரு வகையில் மேலெழும்பிக் கொண்டே இருக்கின்றன. கொங்குப் பகுதியில் கிராம வாழ்க்கையை வாழ்ந்து பெற முடியாத அனுபவத்தைப் பெருமாள் முருகனின்  எழுத்துக்கள் மூலம் பெற முடிகிறது. நகரத்திலிருந்து கொண்டே கிராமத்தின் கதைகள் மூலம் கிராமத்தை நம்மால் உணர முடிகிறது. 


இந்நாவலில் பெருமாவை ஆளண்டாப் பட்சி என்று  சொல்லும் முத்துவின் அம்மாவே ஆளவேண்டா பட்சியாகத் தான் இருக்கிறார். “மனிதர்களை அண்ட விடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போவதாக”  நூலின் பின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது பல்வேறு கதா பாத்திரங்களுக்கு பொருந்திப் போகிறது. 

நல்ல புத்தகங்கள் திரைப்படமாகும் இந்த காலகட்டத்தில் ஆளண்டாப் பட்சியும்  அந்த வரிசையில் இடம்பெறும் என்று நம்பலாம்.  

இந்நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பான  Fire Bird ஜேசிபி இலக்கிய விருதின் குறும் பட்டியலில் இடம்பெற்ற சமயத்தில் வாங்கி, ஜேசிபி விருது பெற்ற பிறகு படித்து முடித்தது ஒரு வகை குற்ற உணர்வை அளித்தாலும், தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உந்துதலையும் கொடுத்திருக்கிறது. 









Comments