வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்


   



தென் இந்தியாவிற்குத் தென் கிழக்காக “கண்ணீர்த் துளி” போல்இடம்பெற்றுள்ளது  இலங்கை. சிலருக்குத் தமிழீழம். இலங்கையின் வரைபடம் போலவே அதன் வரலாறும் பலரால் பல கதையாடல்களோடுஎழுதப்பட்ட ஒன்று. தமிழ்நாட்டில் பெரும்பாலும் அவை புலிகள் சார்பு கொண்ட Hagiographies-தான், வெகு சில விதிவிலக்குகள் உண்டு.




 தமிழ்நாட்டில் இன்றளவும் ஈழ ஆதரவு என்றால், மூளையைக் கழட்டி வைத்து விட்டு பாசிஸ்டுகளுக்கு இணையாகப் பேசும் பெரும் கூட்டத்தைக் காண முடியும். தமிழ்நாட்டு அரசியலில் 1980 தொடங்கி 2016 வரை இலங்கை அரசியல் பெரும் தாக்கம் செலுத்தியது. பூகோள அரசியலில் இன்றளவும் சீன vs இந்தியா என்ற வர்த்தக சந்தை போட்டியின்  முக்கிய கன்னியாக இருக்கிறது இலங்கை. ஒரு காலத்தில் ஈழ அரசியலுக்கு இருந்த முக்கியத்துவம் தமிழ்நாட்டில் குன்றி இருந்தாலும், இன்றைக்கும் ஈழம் குறித்த கிசுகிசுக்கள் அறிவுஜீவிகள் முதல் சாமானியர் வரை பெரும் ஆர்வத்தைத் தூண்டும் ஒன்றாகவே இருக்கிறது. 




இப்படியான சூழலில் இலங்கை குறித்து அண்மையில் வெளியான தரவுகள் வரை கருத்தில் கொண்டு சில முன்முடிவுகளோடும், பல அறியப்படாத வரலாற்றுச் சம்பவங்களோடும், புலிகளின் குறைகளைச் சுட்டிக் காட்டியும், இலங்கை அரசின் தீவிரவாதத்தை நிறுவியும் பல்வேறு கோணங்களில் எழுதப்பட்டுள்ள புத்தகம் தான் தி. லஜபதி ராயின் “வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்”.




அரசியல், சமூகவியல், புவியில், மொழியியல், மானுடவியல் என இலங்கை குறித்து வெளியான பல்வேறு துறை சார்ந்த  புத்தகங்களின் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது. பொது ஆண்டுக்கு மூன்று நூற்றாண்டுக்கு முன்பு தான் சிங்களர்களும் தமிழர்களும் இலங்கையில் குடியேறியுள்ளார்கள். சமகால இலங்கையில் இருக்கும் சிங்களர்-தமிழர் ஆகியோர் இன ரீதியாக பல்வேறு கலப்புகளை உட்செரித்து அரசியல் காரணங்களுக்காக இரு வேறு இனங்களாகப்  பிளவு பட்டு நிற்கிறார்கள் என்பதை இந்நூல் முதன்மைப் படுத்துகிறது. 



திராவிடப்  பொழில் காலாண்டிதழில் (volume 1, issue 3, Jul-sept 2021),  நோர்வே ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த  தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் “இலங்கையில் சமூகநீதி: சில அறிமுகக் குறிப்புகள்” என்ற கட்டுரை இலங்கையில் இருக்கும் சாதிய மட்டும் மத ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை நமக்கு வழங்குகிறது. லஜபதி ராயின் இந்நூல் அத்தகைய ஏற்றத் தாழ்வுகள் தோன்றிய விதத்தையும், அவை இன முரண்களாகக் கூர்தீட்டப்பட்டதற்கான காரணங்களையும் நமக்குத் தெரிவிக்கிறது. 




இன முரண், சமூக ஏற்றத்தாழ்வு, உலக வல்லரசுகளின் ஆயுத சந்தை, இந்தியா-இலங்கை இடையிலான இராஜதந்திர அயல் உறவு போன்றவை வேடர் நாட்டின் அரசியலைத் தீர்மானித்தது. சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு நிகராக தமிழ் வெள்ளாள சாதி வெறி ஈழத் தமிழர்களிடையே மேலோங்கி இருந்தது. மலையகத் தமிழர்களையும், தமிழ் முஸ்லிம்களையும், சக பிற்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழர்களையும் சமமாகப் பார்க்கத் தவறிய தமிழ் வெள்ளாளர்கள் இலங்கைத் தமிழர் ஒருங்கிணைவைப் பாழ் படுத்தினர். 




இந்த ஒற்றுமையின்மை தமிழர்கள் இடையே ஏற்கனவே நிலவிய முரண்களை மேலும் கூர் தீட்டி சகோதர படுகொலைகளுக்கும், தீவிரவாத ஆயுத போராட்டத்திற்கும் வித்திட்டது. புலிகள் இஸ்லாமியர்கள் மீது தொடுத்த தாக்குதல் ஹிட்லரின் நாசி படைக்கு நிகரானது என்கிறார் இந்நூல் ஆசிரியர். மேலும் புலிகளில் பலர் ஹிட்லரையும் ஹிம்லரையும் தங்களது ஆதர்சமாகக் கருதினர் என்றும் பல தரவுகளை அடுக்குகிறார். 



 ராஜிவ் படுகொலை, புலிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்த ஆதரவை மங்கச் செய்தது மட்டுமின்றி அகில இந்திய அளவில் மதவாத அரசியலுக்கு தொடக்கவுரை எழுதியது. கரும்புலிகள் என்ற தற்கொலைப் படை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசியல் கொலைகளை முன்னின்று மேற்கொண்டது. திமுக ஆட்சி கலைப்பும், அதைத் தொடர்ந்த ராஜிவ் காந்தி படுகொலையும் தமிழ்நாடு அரசியல் சூழலைப் புரட்டிப் போட்டது. இந்திய அளவில் இன்றுவரை கொலைகார சமூகமாகவே நாம் அறியப் படுகிறோம். ராஜிவ் படுகொலையைச் சுற்றி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் அதுகுறித்து பல தரப்பாரின் பார்வைகளையும் இந்நூல் தொகுத்துச் சொல்கிறது. 




சகோதர  படுகொலைக்குச் 'சாதி' முக்கிய காரணமாக இருந்ததைக் கவனப்படுத்தும் அதே வேளையில், இலங்கை அரசுடன் ஈழப் போராளி இயக்கங்கள் மேற்கொண்ட சமரசங்களையும், கூட்டணியையும் அதன் மூலம் ஏற்பட்ட அரசியல் இழப்பையும் நமக்களிக்கிறது. இன்றளவும் பிரபாகரனை வெள்ளாளராகப் பாவிக்கும் தமிழ்நாட்டுச் சாதி சங்கங்களின் அறியாமையைக் குறிப்பிட்டு பிரபாகரனின் படத்தைப் பெரியவர் வ.உ.சி-க்கு இணையாக வைப்பதன் அபத்தத்தைச் இந்நூல் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 




இலங்கையில் சோழர்கள் செலுத்திய ஆளுமையைப் பற்றி ஒரு அத்தியாயம் பேசுகிறது, அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் தொகுத்த ‘சோழர்கள் இன்று’ நூலில் இந்நூலாசிரியருக்கு ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கலாமோ என்று தோன்றியது. இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் குறித்த பகுதி, குஜராத் கலவரத்துடன் ஒப்பு நோக்கும் அளவிற்குக் கொடூரமானது.   



புலிகளை அதீதமாக விமர்சனம் செய்யும் ஒரே காரணத்திற்கு இந்நூல் பொது வெளியில் புறக்கணிக்கப்  படுவதில் வியப்பில்லை என்றாலும் புலிகள் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கு இணையாக இலங்கை அரசையும் இந்நூல் ஆசிரியர் விமர்சித்துள்ளார். இந்திய அரசுடனும், புலிகளுடனும் இலங்கை அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தையும் பின்னர் நடைபெற்ற ஒப்பந்த  மீறலையும் அதைத் தொடர்ந்து அங்கு ராணுவமும் அரசும் முன்னின்று நடத்திய இன அழிப்பின் தன்மையை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. 




இந்நூலின் கடைசி பகுதி இலங்கை குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் இதுவரை வெளியான பெரும்பாலான புத்தகங்கள் மீதான சிறு விமர்சன குறிப்போடு இடம்பெற்றுள்ளது. புலிகளோடு உண்மையிலேயே நெருக்கமாக உறவாடிய (சீமான் அல்லாத) தமிழ் ஆளுமைகளோடு இந்நூல் ஆசிரியர் மேற்கொண்ட நேர்காணல்களும், துணை நூல் பட்டியலும், அடிக்குறிப்புகளும் இந்நூலின் பெரும் பலம். 




நூல் ஆசிரியரின் கருத்துக்கள் சில இடங்களை வலிந்து  திணிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், இந்நூல் கொண்டிருக்குக்கும் தரவுகளுக்காகவும், புதிய தகவல்களுக்காகவும், அடிக்குறிப்புகளுக்காகவும் அவசியம் வாசிக்கப் பட வேண்டிய ஒன்று.  சமூகத்தில் உண்மைகள் என்று நம்பவைக்கப் பட்டிருக்கும் போலிகள் மீது இந்நூல் தீக்குச்சியைக் கிழித்தெறிகிறது.  






Comments