தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார்
நடந்து முடிந்த சென்னை புத்தக காட்சியில், அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் பெரியார் குறித்த புத்தகங்களே இடம்பெற்றதாக Siddarth Muralidharan-எழுதிய Periyar wins yet more hearts and minds at the 2024 Chennai Book Fair என்று தலைப்பிடப்பட்ட கட்டுரை தெரிவிக்கிறது. பெரியாரை மையமாக வைத்து ஒரு கவிதை நூல்(சுகுணா திவாகர்), ஒரு கட்டுரை தொகுப்பு(இந்து தமிழ் திசை), ஒரு அறிவியல் நூல்(மயில்சாமி அண்ணாதுரை) உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியாகி உள்ளன. எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பேச்சுரிமை/எழுத்துரிமை’ சார்ந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது(காலச்சுவடு)” என்ற தலைப்பில் வெளியானது. பெரியாரின் மேற்கோளிலிருந்து பெறப்பட்ட தலைப்பு இது.திமுக இளைஞர் அணி முன்னெடுப்பில் புது வரவாக அமைந்திருக்கும் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பாக திரு.Govi Lenin எழுத்தில் சொக்கலிங்கம் அவர்களின் தூரிகையில் “திராவிடத்தால் வாழ்கிறோம்” என்ற தலைப்பில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு இரண்டு பாகமாக படக்கதை வடிவில் வெளியாகியுள்ளது. அருண்.மோ “பெரியார் தாத்தா” என்ற தலைப்பில் ஒரு படக்கதை நூலை வெளியிட்டுள்ளார். இது தவிர்த்து முன்கூட்டியே பெரியார் குறித்து வெளியான பல புத்தகங்களும் சென்னை புத்தக காட்சியில் அதிகம் விற்பனையானதாகத் தெரிகிறது.
சினிமா, இலக்கியம், அரசியல் என தமிழ்நாட்டளவிலும் இந்திய ஒன்றிய அளவிலும் பெரியார் அதிகம் விவாதமாகும் காலகட்டமாக இக்காலகட்டம் திகழ்கிறது. பெரியார் ஆதிக்க எதிர்ப்பு மரபின் பிரதிநிதியாக இருப்பதால், இந்துத்துவ காலகட்டத்தில் அதிகம் விவாதிக்கப் படுகிறார். அவர் மீது வெளிப்படும் எதிர்ப்பையும் வெறுப்பையும் எதிர்கொள்ள பெரியாரியம் பக்குவப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் பல்வேறு புலங்களில் வெளிப்படும் இதுபோன்ற கலை, இலக்கிய வெளிப்பாடுகள்.
1990ம் ஆண்டு வெளிவந்த காவிய புலவர் பண்ணனின் “தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார்”(விடியல்) நூல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து மறுபதிப்பு காண்கிறது. பெரியாரின் சமகால பொருத்தப்பாட்டினை இதை வைத்தே உணர முடியும். சாமி சிதம்பரனார் எழுதிய “தமிழர் தலைவர்” நூலின் தகவலைச் சுருக்கப்பட்ட வடிவில், சுய அனுபவ கலவையுடன், எளிய மொழி நடையில் 130 பக்கங்களில் நமக்களிக்கிறார் பண்ணன். ‘பெரியார்’ திரைப்படம் பார்ப்பதை விடக் குறுகிய நேரத்தில் படித்து முடித்துவிடக் கூடிய புத்தகம்.
இந்நூல் ஒரு Hagiography தான் என்றாலும், சாமானியருக்குப் பெரியாரை எளிமையாக அறிமுகம் செய்யும் வேலையைச் சிறப்புறச் செய்கிறது. தமிழினம் ஆண்டாண்டு காலமாகச் சந்தித்த சாதிய அடிமைத் தனத்தை “பெரியார் ஒருவரே!” உணர்ந்தார் என்ற கவிதையுடன் தொடங்குகிறது இந்நூல். 30 அத்தியாயங்களில், பெரியாரைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நிகழ்வுகளை விவரிக்கிறார் பண்ணன்.
தி.கவிலிருந்து பிரிந்து பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கிய பிறகான காலகட்டத்தை மிகவும் மென்மையான நடையிலேயே விமர்சிக்கிறார். பண்ணனின் திமுக சார்பு நிலை இதில் வெளிப்படுகிறது. அண்ணா மறைந்த போது பெரியார் ஆற்றிய உணர்வுப்பூர்வமான அஞ்சலி, பெரியாரின் மறைவுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அளித்த ராணுவ மரியாதை ஆகியவற்றிற்குப் பின்னணியிலிருந்த கழக பாச தொடர்பை பண்ணனின் இந்நூல் தெரிவிக்கிறது.
பெரியார் குறித்து திராவிட இயக்க ஆதரவு பார்வை கொண்டவரின் வரலாற்றுப் பதிவாக இந்நூலைக் குறிப்பிடலாம். பண்ணனின் ‘திராவிட அரசியல் வரலாறு’ புத்தக தொடரின் முதல் பாகமாக இது வெளியாகி இருக்கிறது. பெரியார் ஆர்வலர்கள் ஒரு முறையேனும் படித்தறிய வேண்டிய பல்வேறு தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது.
மிகச் சுருக்கமாக, எளிமையாக, அதே சமயத்தில் ஓரளவுக்கு முழுமை பெற்ற சித்திரமாகப் பெரியாரை நமக்கு அறிமுகம் செய்கிறார் பண்ணன்.
Comments
Post a Comment