Murder on the Menu


 

 பிராமணாள் கபே பெயர்ப்பலகை அழிப்புப் போராட்டத்தைப் பற்றிப் படித்து வளர்ந்த பார்ப்பனர் அல்லாதோருக்கு, பார்ப்பனரல்லாத ஒருவரால்  தொடங்கப்பட்டு வெற்றிபெற்ற உணவகத்தின் கதைகள் ஒரு வகையில் ஊக்கமளிப்பவை. அதுவும் சமூகத்தில் ஒரு காலத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டு பின்னர் மகிமை நிதியின்(Economic Capital) மூலமும், உறவின்முறை(Social Capital) மூலமும் ஏற்பட்ட கூட்டுமுயற்ச்சியால் தமிழ்நாட்டில் பொருளாதார வளம் மிக்க நாடார் சமூகத்திலிருந்து ஒருவர் உணவக தொழிலில் உச்சம் பெற்றால் யார் தான் கொண்டாடாமல் இருப்பார்கள். 


எல்லா கொண்டாட்டங்களுக்கு பின்னணியிலும்  பெரும் வலி  மிகுந்து கதை இருக்கத் தான் செய்கிறது. சரவண பவன் தொடங்கி, உணவக தொழில் கொடி கட்டி பறந்த அண்ணாச்சி ‘ராஜகோபாலுக்கு’ பின்னணியிலும் ஒரு கொடூரமான ரத்த சரித்திரம் இருந்தது. அப்படியான ரத்த சரித்திரத்தை தனக்குக் கிட்டிய சான்றுகளுடன் ஆங்கிலத்தில் சமைத்து “Murder on the Menu: The Sensational Story of the Tycoon who Founded Saravana Bhavan” என்ற பார்த்தவுடன் படிக்கத் தூண்டும் தலைப்பில் புத்தகமாகியுள்ளார் நிருபமா சுப்பிரமணியன். ஒரு திரில்லர் திரைப்படம் போன்று  சுவையான, விறுவிறு நடையில் புத்தகம் அமைந்துள்ளது. 


1980-களில் பொருளாதார தாராளமயமாக்கத்தோடு இணைந்தே நடைபெற்றது ராஜகோபால் அண்ணாச்சி தொடங்கிய சரவண பவனின் வளர்ச்சி, 2001 காலக்கட்டத்தில் அவர்  மீது  குற்றச்சாட்டுகள் எழத் தொடங்கிய சமயத்தில் அவர் உணவக தொழிலில் அதிபதியாக பெயர் பெற்றிருந்தார். அவர் கொண்டிருந்த அரசியல் தொடர்புகளும், சமூக தொடர்புகளும் அவரை சிறிது காலத்திற்குப் பாதுகாத்தது என்றாலும் இறுதியில் சட்டம் தன் கடமையை செய்தது. 


ஜீவஜோதி, பிரின்ஸ் சாந்தகுமார், ராஜகோபால், கணேசன், போன்ற பெயர்கள் 2000கள் சமயத்தில் தமிழ் புலனாய்வு ஊடங்ககளுக்கு தீனிப்போட்டன. ஒரு சைவ உணவக முதலாளியின் கொடூரமான பக்கத்தை  அவை  வெளிச்சம் போட்டு கட்டின. கடவுள், மூடநம்பிக்கை, ஜோசியம் போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயங்களை நம்ப தொடங்கிய ராஜகோபால், ஒரு ஜோசியரின் பேச்சை கேட்டுக்கொண்டு மூன்றாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அந்த மூன்றாவது திருமணம் அவரது தொழிலில் மேலும் முன்னேறும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் என்ற ஜோசியரின் சொல்வாக்கு சரவண பவன் என்ற சாம்ராஜ்யத்தின் அஸ்தமனத்திற்கு அடிகோலியது.  


80களின் தொடக்கத்தில் வளர தொடங்கிய உயர் மத்தியதர வர்க்கத்தின் சாட்சியாக சைவ உணவகங்கள் விளங்கின. இட்லி-வடை-பொங்கல்-சாம்பார் என்ற பண்டங்களை உணவகங்களில் சாப்பிடுவது ஒரு வகை சமூக அந்தஸ்தை ஏற்படுத்தியது. சமஸ்கிருதமயமாக்கல் என்பதன் அறிகுறியாகவும் இதை கொள்ளலாம். சுவையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாமல், தரமான உணவு வகைகளை சரவணபவன் தொடர்ந்து  அளித்த காரணத்தால், குறைந்த இடைவெளியில்  அதீத வளர்ச்சியை அடைந்தது. பார்ப்பனரல்லாத ராஜகோபால் உணவகத்தின் உரிமையாளராக இருந்தாலும், பார்ப்பனரான கணேசன் தான் நிர்வாகத்தை கவனித்து கொண்டார். உணவகத்தின் லாபமும், வீச்சும் அதிகரித்தது. 


சரவணபவன் உணவக தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கினார், ராஜகோபால். மனிதவளத்தையும் முதலீடாகப் பார்த்த காரணத்தால் இவ்வாறான வழக்கத்தை அவர்  கைக்கொண்டிருந்தார். திருப்பதியைப் பிரதிபலிக்கும் வகையில் வனதிருப்பதி என்ற ஒரு கோவிலைப் பல கோடிகள் செலவு செய்து தூத்துக்குடி புன்னையடியில் அமைத்தார். இதுபோன்ற நடவடிக்கைகள்  ஒருவகை வள்ளல் பிம்பத்தை அவருக்கு அளித்தன. 


பணம் வழங்கிய தற்காலிக அதிகாரம், இச்சைகளை நோக்கி அவரை இழுத்துச்  சென்றது. பண பலத்தை வைத்தும் ஆட்பலத்தை கொண்டு அவரது இச்சைகளை நிறைவேற்றிக் கொண்டார். சமூக அந்தஸ்து சிறிதும் குலையாமல் இவை எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. “வெற்றி மீது ஆசை வைத்தேன்!” என்பது அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் தலைப்பு, அதுவே அவரது வாழ்க்கை செயல்பாட்டுக்கு மிகப் பொருத்தமான உவமையாக அமைந்தது. 


பிரின்ஸ் சந்தகுமாரின் கொலையும் அதைத் தொடர்ந்த குற்றச்சாட்டுகள், விசாரணை, வழக்குகள், அது பற்றிய செய்திகள் ஆகியவை அவர் மீதான பிம்பத்தைக் குழைத்தாலும் வியாபாரத்தில் எவ்வித எதிர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெளிநாடுகளில் பல்வேறு கிளைகளை சரவண பவன் திறந்து தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியது. ஜீவஜோதியின் உறுதியும் பணத்திற்கு அடிமையாகாத குணமும் அவர் கொண்டிருந்த அரசியல் தொடர்புகளும் இந்த வழக்கில் அவர் கணவருக்காக நீதியைப் பெற்றுத் தந்தது. தாமதமான நீதியானாலும் இது ஜீவஜோதிக்கு ஆறுதலூட்டியது.  


அவரது வழக்கின் முன்னேற்றத்தோடு சரவண பவனின் வீழ்ச்சியும் தொடங்கியது, அடையார் ஆனந்த  பவன், அட்சயம், ரத்னா கஃபே போன்ற உணவகங்கள் இதற்க்கு மாற்றாக வளர தொடங்கின. போட்டியாளர்கள் நிறைந்த உணவக தொழிலில் ராஜகோபால் அண்ணாச்சியின் உடைபட்ட பிம்பம் மீள முடியாத சரிவை சந்தித்தது. 


இந்நூலில் கதை சொல்லல் தன்மை அதன் பலம் என்றாலும், அதுவே அதன் பலவீனமாகவும் இருக்கிறது. தரவுகளுக்கான ஆதாரங்கள், அடிக்குறிப்புகள் எதுவும் நூலில் இடம்பெறவில்லை. நூல் ஆசிரியரின் ஒருதலைபட்சம் பல இடங்களில் வெளிப்படுகிறது. குறிப்பாக கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது அவர் கொண்டிருக்கும் பார்வை,  இந்த சார்பை(Bias) வெளிப்படுத்துகிறது. வதந்திகளை உண்மைகளாக நிறுவ முயன்றுள்ளாரோ!! என்று சந்தேகிக்கும் அளவிற்கு அவரது சார்பு வெளிப்படையாக அமைந்துள்ளது. 


ஜீவஜோதி பின்னாட்களில் பாஜகவில் சேர்ந்தது, துக்ளக் ரமேஷ் போன்ற வலதுசாரிகளுடனான இந்நூலாசிரியரின் தொடர்பு, இவருக்கு உதவிய அதிகாரிகளின் பெயர்கள் போன்றவற்றை பார்க்கும்போதெல்லாம் இந்த சந்தேகம் வலுக்கிறதே ஒழிய குறையவில்லை. மொத்தத்தில் இந்த நூல் இவர் சமைத்ததா? இல்லை உள்நோக்கத்தோடு வேறு எங்காவது வாங்கி வந்து படைத்ததா? என்ற ஐயத்தை ‘Murder on the menu’ ஏற்படுத்தாமலில்லை. 





Comments