The colonial Constitution

   




அரசியல் சட்டம் திருத்தப் பட வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் நெடுநாள் கோரிக்கை. அதற்காக திமுக எடுத்துக்கொண்ட சிரத்தை அதிகம். அதனால் இழந்தவையோ பல. திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டதை அடுத்து  திமுகவின் அதிமுக்கிய கொள்கைகளுள் ஒன்றாக மாநில சுயாட்சி உருப்பெற்றது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த 1968ம் ஆண்டு, பிராட்வே அன்பு நிலையம்  வெளியிட்ட “அண்ணாவின் சொல்லாரம்” நூலில் அரசியல் சட்டம் திருத்தப்படும் வேண்டும் என்ற கோரிக்கை முதன்மையாக இடம்பெற்றிருந்தது. அதிகார குவிப்பை எதிர்த்தும் அதிகார பகிர்வின்  அவசியத்தை வலியுறுத்தும் ஒன்றாகவும் இந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தக் கோரிக்கை அமைந்தது. 



இதன் அரசியல் முயற்சியாக ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டது. ஒன்றிய-மாநில அரசுகளிடையிலான அதிகார பகிர்வை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த அறிக்கை முத்தமிழறிஞர் கலைஞருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முரசொலி மாறன், இரா.செழியன் தலைமையில்  குழு அமைக்கப்பட்டு திமுகவின் கொள்கை, மாநில சுயாட்சி கோரிக்கைக்கு  ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டது. முரசொலி மாறனின் ‘மாநில சுயாட்சி’ புத்தகம் திமுகவின் நிரந்தர கருத்தியல் ஆயுதமாக மாறிப்போனது. “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தைக் கலைஞர் முழங்கினார். இன்றளவும் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க அரசியல் சட்டத் திருத்தம் இன்றியமையா ஒன்றாகவே திகழ்கிறது.  நிற்க. 



Arghya Sengupta என்ற சட்டவியல் ஆய்வாளர் தனது சமீபத்திய “The colonial Constitution”(Juggernaut,2023) புத்தகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள அரசமைப்பு சட்டம் ஒரு ‘காலனிய அரசமைப்பு சட்டம்’ என்பதை நிறுவுகிறார். சமகால அரசமைப்பு சட்டத்தின் மீதான விமர்சனமாக அமைந்திருக்கும் இந்த நூல், இந்திய அரசியலமைப்பு உருவான வரலாற்றை மிகச் சுருக்கமாக அடிக்குறிப்புகளுடன் 285 பக்கங்களில் நமக்குவழங்குகிறது.  Rohit de, Gautam Bhatia ஆகியோரை விரும்பி வாசிப்போர் Arghya Sengupta-வின் இந்நூலையும் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். 










இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்திற்கு முன்பு, பல்வேறு சித்தாந்த தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு சட்ட உருவாக்க நடவடிக்கைகளை இந்நூல் பட்டியலிடுகிறது. காந்தி தரப்பு கிராமிய அரசியல்-பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைவை ‘ராம ராஜ்யம்’ என்ற லட்சிய வேட்கையோடு ஏற்படுத்தி இருந்தது, சவர்கரின் இந்து மகா சபையினர் “Hindusthan Free State” என்ற ஒரு அரசமைப்பு சட்ட வரைவை ஏற்படுத்தி இருந்தனர், டாக்டர்  அம்பேத்கர் Scheduled Caste Federation மூலம் முன்வைத்த constitution of the united states of india என்ற அடிப்படை உரிமைகளை முதன்மையாகக் கொண்ட சட்ட வரைவை முன்வைத்தார், நேருவின் Objectives Resolution பிரதான பங்கு வகித்தது. இத்தகைய ஆவணங்களை முதன்மையான ஒன்றாக நூலாசிரியர் பயன்படுத்தி இருக்கிறார். 





எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்ற கணக்கில் உலகப்போர், பாகிஸ்தான் பிரிவினை, சுதேச சம்மஸ்தானங்கள் போன்ற அரசியல்  நெருக்கடிகளைக் காரணம் காட்டி  1935 இந்திய அரசுச் சட்டத்திலிருந்த, 90% சரத்துகள் அப்படியே 1950 இந்திய அரசமைப்பு சட்டத்தில் சொருகப்பட்டிருப்பதாக இந்நூல் ஆசிரியர் வைக்கும் விமர்சனத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. அதற்கான சான்றுகளையும் அவர் வழங்கவே செய்கிறார். 



காலனிய அரசின் கீழ் செயல்பட்ட காவல்துறையின் அதிகாரங்கள் அப்படியே அரசியல் விடுதலை பெற்ற இந்தியாவிலும் தத்து கொள்ளப்பட்டது. விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிலிருந்தெல்லாம் சுதந்திரம் கேட்டார்களா, அவற்றில் பெரும்பாலானவற்றைப் புதிதாக  உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசமைப்பு சட்டமும் அளித்தபாடில்லை. பிரிட்டிஷ் காரர்களே வேண்டாம் என்று விட்டுச் சென்ற Preventive Detention-ஐ எல்லாம் 1950ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்பு சட்டம் கொண்டிருந்தது. தனிமனிதர்களை விட அரசு அதிகாரம் பொருந்திய ஒன்று என்பதை இதுபோன்ற சட்டங்கள் நிரூபித்தன. 




அம்பேத்கர் உள்ளிட்ட பலரும் கூட்டாட்சி இந்தியாவை விட மையப் படுத்திய அதிகாரங்களைக் கொண்ட இந்தியாவையே விரும்பினர். அம்பேத்கருக்கு நியாயமான காரணங்கள் இருந்தது. பாகிஸ்தான் பிரிவினை அவர்களது தரப்பை மேலும் வலுப்படுத்தியது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க ஒருங்கிணைந்த இந்தியா அவசியம் என்றார் அம்பேத்கர். 




அக-புற-பொருளாதார நெருக்கடியை(Emergency) காரணம் காட்டி ஆளுநர்கள் ஆட்சியைக் கலைக்கும் அளவுக்கான அதிகாரத்தை ஒன்றிய அரசு கொண்டிருந்தது. மாநிலங்கள் ஒன்றிய அரசின் விளையாட்டு பொம்மைகள் போல் நடத்தப்பட்டன. இன்றளவும் நடத்தப் படுகின்றன.  ஒன்றிய அரசின் அதிகார குவியலுக்குப் பின்னணியில் செயல்பட்ட அரசியலை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. 



இந்திய அரசமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று சமகாலத்தில் துடித்துக் கொண்டிருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் ஆட்சி அதிகாரம் மூலம் படிப்படியாக அதனைச் செயல்படுத்திக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, 1950 அரசமைப்பு சட்ட உருவாக்கத்தில் RSS-ன் பங்கு என்று பார்த்தல் சுழியம் எனலாம். ஆனால் சாவர்க்கரின் மேற்பார்வையில் செயல்பட்ட இந்து மகா சபை Irish Free Stateஐ உதாரணமாகக் கொண்டு Hindustan Free State என்ற ஒரு வரைவை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது மதவாத இந்தியாவை மறுத்து அனைத்து  மதத்தினரும் பங்குகொள்ளும்படியான ஒரு இந்தியாவையே சிந்தித்திருந்தது என்பது இன்றைக்கு படிக்கும்போது ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே உள்ளது. லிபரல் தன்மை கொண்ட ஒரு வரைவாக இந்து மகா சபையின் இவ்வரைவு வெளிப்பட்டது. 




அப்போதிருந்தே அரசியலுக்கு வெளியே இருந்து செயல்பட்ட கலாச்சார அமைப்பான RSS, அரசமைப்பு சட்ட ஏற்பாட்டில் எவ்வித பங்கும் கொள்ளவில்லை, ஆனால்  இன்றைக்கு அரசியல் சட்டத்தைத் திருத்தும் அளவுக்கான செல்வாக்கினை பெற்றுள்ளது. 




தேச தந்தைஎன்றழைக்கப்படும் காந்தியின் அரசியல் கோட்பாடுகள், அரசமைப்பு சட்டத்தின் ஒரு ஓரமாகவே(DPSP) இடம்பெற்றது. காந்தியர்களிடையே இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும், மேற்கத்தியச் சட்ட வல்லுநர்கள் மற்றும் காலனிய இந்திய நிர்வாக அமைப்புகள் ஆகியவை ராம ராஜ்யத்திற்கு முட்டுக்கட்டை போட்டன. மேலும் காந்திய சிந்தனையின் அதீத லட்சியவாதமும், காந்தியின் மறைவும், காந்தி தொண்டர்களின் செயல்பாடுகளும் காந்தியின் கனவுகளுக்கு முடிவுரை எழுதின. 



சமகாலத்தில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் பார்வையை இந்நூல் முன்வைக்கும் அதே நேரத்தில், இந்திய அரசியல் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் காலனிய சரத்துகளைத் திருத்தி அமைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 




இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அதை, அதிகம் விமர்சிக்கும் தரப்பாகத் திராவிட இயக்கம் முதன்மை பெறுகிறது. ‘போர்வாள்’  இணை ஆசிரியர் இளஞ்செழியன் போன்றவர்கள் 1951லேயே இந்திய அரசமைப்பு சட்டத்தை விமர்சித்து எழுதி உள்ளார். திமுகவைச் சேர்ந்தவர்களும் இந்திய அரசமைப்பு சட்டம், திட்டக் குழு,  போன்ற அதிகார அமைப்புகள் மீது கேள்வி தொடுத்து வந்துள்ளார்கள். இன்றளவும் இந்த போக்கு தொடரவே செய்கிறது. 





தி.மு.க திராவிட நாடு கேட்ட காரணத்தாலும், தி.க தனி தமிழ்நாடு கேட்ட காரணத்தாலும் இந்திய அரசியல் அமைப்பில் பங்கு கொள்ள விரும்பி இருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாகவே அரசியல் அமைப்பு திட்ட வரைவுகள் எதுவும்  திராவிட இயக்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை. ஆனால் அரசியல்  அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு அதனை அதிகம் ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கும் தரப்பாகத் திராவிட இயக்க தரப்பே இருந்துள்ளது என்பதை, இந்நூலின் அடுத்த பாகம் (தமிழ்நாட்டின் பங்கைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டால் புரிந்துகொள்ள முடியும். இது ஆவணமாக்கப்பட வேண்டிய வரலாறும் கூட. 

Inputs From : தமிழ் காமராசன்






Comments