சென்னைக்கு வந்தேன்
என்னுடைய 18-வது வயதில் சென்னைக்கு வந்தேன். ‘கண்டதும் காதல்’ என்ற வாக்கியத்தைச் சென்னை தான் மெய் என உணர்த்தியது. அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், சைதாப்பேட்டை, திருவான்மியூர், கோட்டூர்புரம், அண்ணா சாலை, பெசன்ட் நகர், அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி எனப் பிடித்த இடங்களைப் பற்றி பெரிய பட்டியலே போடலாம். நான் கெட்டுப் பட்டணம் சேர வில்லை பட்டணம் சேர்ந்த பிறகும் கெடவில்லை. எனக்குச் சொந்த ஊரை விட சென்னை தான் பிடிக்கும். இனி சென்னை தான் சொந்த ஊர் என்று சொல்லுமளவிற்குப் பிடிக்கும். நான் சென்னைக்கு வந்த கதையைத் தனியாக எழுதலாம். இப்போது சென்னை வந்த எழுத்தாளர்களின் கதைக்கு வருவோம்.
1955-ஆம் ஆண்டு மாத இதழாகத் தொடங்கப்பட்டு பின்பு மாதமிரு முறை வெளிவந்த, 20-ஆம் நூற்றாண்டு முற்போக்கு இலக்கிய இதழ்களுள் ஒன்று, சரஸ்வதி. இந்த இதழில் சென்னை பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனுபவ கட்டுரைகளை வ.ரா ஆய்வாளர் பழ. அதியமான் தொகுத்து ‘சென்னைக்கு வந்தேன்’ என்ற தலைப்பில் நூலாகியுள்ளார். படிக்கப் படிக்க சென்னை பற்றிய பலபல நினைவுகள் மறையாமல் மனத்தில் தோன்றியது.
இந்த தொகுப்பில் வல்லிக்கண்ணன் தவிர்த்து பெரும்பாலான எழுத்தாளர்கள் சென்னையைப் பற்றி ஏதோ ஒரு எதிர்மறை அனுபவத்தையே பதிவு செய்கிறார்கள்.
புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதை கூட சென்னை பற்றிய எதிர்மறை சித்தரிப்பு தான்.
வாடிவாசல் எழுதிய சி.சு செல்லப்பா “சென்னை இன்னும் எனக்கு ஒட்ட வில்லை போலத்தான் உணருகிறேன்” என்கிறார்.
‘கல்லூரி படிக்கும் மாணவனாகச் சென்னைக்கு வந்து எழுத்துலக மாணவனாகச் சென்னையில் இருக்கிறேன்’ என்கிறார் ஜனசக்தியில் பல காலம் பணியாற்றி கே. இராமநாதன்.
கரிசல் காட்டிலிருந்து சென்னைக்கு வந்து சாகித்திய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் கு. அழகிரிசாமி, ‘சென்னை வாழ்க்கை என்பது எனக்கு அவ்வளவாகத் திருப்த்தியளிக்கவில்லை’ என்கிறார்.
“துரு துரு என்று இருப்பவர்கள் தான் சென்னையில் வாழ முடியும்” என்று சொல்லிவிட்டு சென்னைக்கு வந்ததில் எனக்கு லாபம் தான் என்கிறார் பெரியாரின் வாழ்க்கை வரலாறான “தமிழர் தலைவர்” நூலை எழுதிய சாமி சிதம்பரனார். (இவர் வந்ததால் நமக்கும் லாபம் தான்)
“பெரிய மனிதர்களின் சின்னத்தனங்கள், சாதாரண மனிதர்களின் உயர்ந்த பண்புகள் எல்லாம் எல்லா ஊர்களிலும் காணக் கூடியவைதான். ஆனால் எல்லாவற்றையும் ஏககாலத்தில், ஒட்டுமொத்தமாகப் பார்த்து உலக அனுபவம் பெறத் துணை புரிவது சென்னை போன்ற நகர்களே” என்று சென்னையின் யதார்த்தத்தை ரசமான நடையில் விவரிக்கிறார் வல்லிக்கண்ணன் தமையன் அசோகன்.
1924இல் வழக்கிலிருந்த ‘மதிமோசக் களஞ்சிய’த்தை ஐயந்திரிபற கற்றறிந்து கொண்டு தான் சென்னைக்கு வந்தேன் என்று தனக்கே உரிய விமர்சன பாணியில் சென்னையைக் கடிந்து கொள்கிறார் க.நா. சுப்பிரமணியம்.
தி. ஜ. ரங்கநாதனை ஆதர்சமாகக் கொண்ட ந. சிதம்பரசுப்ரமணியன் சென்னையை ‘இலக்கியம் என்ற புதையலைத் தந்த இடம்’ என்று குறிக்கிறார். ‘சென்னை-உன்னை என்றும் நாடச்செய்தாய் என்னை’ என்ற ஹைக்கூ கவிதைக்கு இணையான புரளிப்பாட்டும் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது.
இந்த தொகுப்பிலேயே சுமாரான கட்டுரை என்றால் ஜெயகாந்தனுடையது தான், அவரது அதீத சுய மதிப்பீடு என்பது முகம் சுளிக்க வைத்து. சென்னையை விடத் தன்னை உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ள எழுதப்பட்ட ஒன்றாகப் பட்டது. ‘நான் எழுத்தாளனாகப் பிறந்தவன்!’ என்ற அவரது மேற்கோளை இதுவரை 3 பேரிடம் சொல்லிச் சிரித்துவிட்டேன்.
எழுத்தாளனாகச் சென்னைக்கு வந்து பசியோடு சேர்த்து நயவஞ்சகம், மோசடி, அவமானம், ஏமாற்றம் முதலிய பல கீழ்மைகளையும் தான் அனுபவித்து ஊர் திரும்பிய கதையைச் சொல்கிறார் தேனீ இலக்கிய இதழின் ஆசிரியர் எம்.வி. வெங்கட்ராமன்.
சின்ன அண்ணாமலை, கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் கட்டுரைகள் நேரடியாகச் சென்னை பற்றிய அனுபவங்களைக் கொள்ளாத காரணத்தால் இந்த தொகுப்பிற்குப் பொருத்தமற்ற ஒன்றாகப் பட்டது.
சுந்தர ராமசாமி வழக்கம் போல் ‘எழுதுனா இப்படி எழுதணும்’ என்ற உணர்வை ஏற்படுத்தினார். அந்த 7பக்க கட்டுரையில் 4 பக்கத்தை பென்சிலில் அடிக்கோடிட்டிருந்தேன். மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் கட்டுரை இது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ராயப்பேட்டை, கன்னிமாரா நூலகம் ஆகியவற்றை சு.ரா நம் கண்முன் நிறுத்துகிறார்.
இரண்டாம் உலகப்போர் சூழலில் சென்னையிலிருந்து கும்பகோணம் சென்று மறைந்த உ.வே.சாமிநாதையரின் சென்னை குறித்த அனுபவம் சேலம் ராமசாமி முதலியாருடன் பழகிய தருணத்தை விவரிக்கும் அதே நேரத்தில், ப்ரெசிடெண்சி கல்லூரி, காஸ்மோபாலிடின் கிளப் உள்ளிட்ட இடங்களையும் நினைவூட்டுகிறது.
கிராம வாழ்க்கையை விமர்சிக்கும் புதுமைப்பித்தனின் “தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை” என்ற வானொலி உரை கட்டுரை வடிவில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் தொகுப்பாசிரியர், பழ. அதியமான் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், சென்னை பற்றிய அவரது எண்ணத்தையும் அறிய விரும்பினேன், அவர் மனதில் தென் ஆற்காடு தான் நிறைந்துள்ளது, இணையரின் விருப்பத்திற்காகச் சென்னையில் வசிக்கிறார். காற்று,நீர், ஒளி,ஒலி மாசு நிறைந்த நகரத்தை விட இவையேதுமில்லா கிராம வாழ்க்கை ஆயுளைக் கூட்டும் என்ற அவரது தர்க்கத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.
“உன்னிடம் குற்றங்கள் பல இருப்பினும், சென்னையே! உன்னிடம் நான் அன்பு செலுத்துகிறேன், நீ வாழ்க!” என்று சென்னை பற்றி வல்லிக்கண்ணனின் கூற்று 21-ம் நூற்றாண்டிலும் மிகக் கச்சிதமாகச் சென்னைக்குப் பொருந்திப் போகிறது.
ஒரு நகரத்தின் மீது ஊடல் கொண்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்ட காதல் கடிதங்கள் என இத்தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரைகளை மதிப்பிடலாம். 21-ஆம் நூற்றாண்டின் சென்னையைப் பற்றி இன்னும் நிறையவே எழுதப்பட வேண்டும். 20-நூற்றாண்டு சென்னை பற்றிய இத்தொகுப்பு அதற்கான அவசியத்தை உணர்த்துகிறது.
Comments
Post a Comment