சென்னை நூலகங்கள்

 




என்னளவில் சென்னையில் இருக்கும் அரசு நூலகங்களை விடவும் சில தனியார் நூலகங்கள் நல்ல சேவையை வழங்குகின்றன. திமுக ஆட்சி அமைந்து 3 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தனது பழைய பொழிவைப் பெற்றபாடில்லை. உட்கட்டமைப்பில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், புத்தகங்களும் இதர நூலக சேவைகளிலும் பெரிய அளவிலான தர உயர்வு இல்லை. இதையொட்டி சில மாதங்களுக்கு முன்னர் தி இந்து தமிழ் திசை நடுப்பக்கத்தில் அருண் பிரசாத் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். 


கன்னிமாரா நூலகத்தில் புத்தகத்தைக் கண்டடைவது அவ்வளவு எளிதான காரியமாகப் படவில்லை. 


பழைய தரவுகளைக் காண, குறிப்பெடுக்க, நகலாக்கம் செய்ய RMRL நூலகத்திற்கு ஈடு இணை இல்லை. இந்த நூலகத்தில் நடைபெறும் கூட்டரங்குகளுக்கும், ஆராய்ச்சி நிகழ்வுகளுக்கும் நேர்த்தியாக திட்டமிடலுக்குப் பிறகு,

உபசரிப்பு நிறைந்த சிற்றுண்டியோடு நடைபெறுபவை. நூலகத்தின் இணையப் பக்கமும் தரமான ஒன்று. நூலகர்களும் அப்படியே. 


MIDS நூலகம் ஆய்வு நூல்களையும், பல முக்கியமான ஆய்விதழ்களையும் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் நூலகத்தில் உட்காருவது கடினம், மின்விசிறிகள் அங்கிருக்கும் ஊழியர்களைப் போலவே மெதுவாகச் சுழல்வதால் நேரம் நிறையவே விரயமாகிறது. 


மிகச் சமீபத்தில் தான் இரண்டு பொக்கிஷங்களைக் கண்டடைந்தேன், ஒன்று எழுத்தாளர் vinoth மூலம் தெரிய வந்த American Spaces Library, அண்ணா மேம்பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகத்திற்குள் உள்ளது. ஆண்டு சந்தா 400 ரூபாய், சென்னை புத்தக காட்சியில் 200 ரூபாய்க்குக் கிடைத்தது. ஒரு நேரத்தில் 4 புத்தங்களை எடுத்துக்கொள்ளலாம். இது தவிர்த்து E-library-ஐ அணுகும் வசதியும் உண்டு. இன்றைக்கும் ஆயிரங்களில் ஆண்டு சந்தா கேட்கும் NewYorker, The Atlantic, TIME magazine, New York Review of Books, National Review, Bloomberg, உள்ளிட்ட இதழ்களைப் படிக்க முடிகிறது. 


இது தவிர்த்து Washington post, Guardian, The Boston Globe, உள்ளிட்ட பல்வேறு தினசரிகளைப் படிக்க முடியும். இதைத் தாண்டி ஆய்வாளர்களுக்கு JStor, Academic Search Premier, ProQuest Dissertations & Theses Global உள்ளிட்ட தளங்களை அணுகும் வாய்ப்பும் அடங்கியுள்ளது. 


மற்றொரு நூலகம், ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்திற்குப் பின்புறம்அமைந்துள்ள British Council நூலகம், இதன் உறுப்பினர் சந்தா ஆண்டுக்கு 2000 என்றாலும் நல்ல வார இதழ்களையும், சமீபத்தில் வெளியான பல்வேறு புத்தகங்களையும் இங்குக் காண முடிகிறது. 6 புத்தகங்கள் வரை Borrow செய்து கொள்ளலாம். 


British Council E-library சேவை American Spaces Library-ஐ சேவையை விட அபாரமான ஒன்று, தினசரிகளில் Wall Street Journal, New york times, Washington post, Daily Mail ஆகியவையும், வார மட்டும் மாத இதழ்களில் The Economist, Rolling Stone, Foreign Affairs, New York Magazine போன்றவற்றையும் படிக்க முடிகிறது. சமீபத்தில் வெளியான E-Booksஐ ஆன்லைனில் கடன் வாங்கிக் கொள்ளலாம், Jstor Access உண்டு, AudioBooks, Movies, Concerts, English Learning வகுப்புகள் உள்ளிட்ட பல E-சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். 


பிற இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு பொது நூலகங்கள் நல்ல சேவையை வழங்குபவை என்றாலும், நூலக துறை செல்ல வேண்டிய தூரம் பல கோடி கி.மீ நெடும்பயணம். 


அறிவை மக்கள் மையப்படுத்துவதோடு தரப்படுத்துவதும் அவசியமானது. தமிழ்நாடு அரசு நூலக துறை குறைந்த பட்சம் British council, American Spaces Library வழங்கும் E-library சேவையை வழங்கினால் போதும். அதற்கான சாத்தியமும் அதிகம். 


ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் WI-FI வசதிகளே சரிவர இல்லாத நிலையில் இதை எல்லாம் எதிர்பார்ப்பதற்குக் கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கிறது.

Comments