The cooking of the Books: A Literary Memoir

  



  இதுவரை Ramachandra Guha எழுதிய பெரும்பாலான புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி இருக்கிறேன், ஆனால் எதையுமே முழுதாக படித்து முடித்ததில்லை.  India After Gandhi புத்தகம் 400 பக்கம் படித்து பிறகும் முழுதாக முடிந்தபாடில்லை, Makers of Modern India, Rebels Against the Raj, Democrats and Dissenters ஆகிய புத்தகங்களில் சில கட்டுரைகளைப் படித்துள்ளேன். பல நேரங்களில் குறிப்புகளுக்காகவும், சான்றுகளைத் திரட்டவும் Guhaவின் புத்தகங்களைப் பயன்படுத்திக் கொள்வதுண்டு. 



 சமீபத்தில் வெளியான The Cooking of Books: A Literary Memoir, புத்தகம் தான் Guha எழுத்தில் முழுதாக படித்து முடித்த நூல், அதன் குறைந்தளவிலான பக்கங்கள் முதற் காரணம், மற்றொன்று இது வரலாற்று நூலாக இல்லாமல் நினைவுகளை விவரிக்கும் நடையில் அமைந்துள்ளது. 



தனது 20 வயதில் தமிழ் கற்று ஆழமாக வாசிக்கத் தொடங்கி பின்னர் தமிழ் இலக்கிய சூழலில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட சுந்தர ராமசாமிக்கு இணையான ஒரு சாகச வாழ்வு ஆங்கில வெளியில் Guhaவுக்கு அமைந்திருந்தது. கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், சூழலியல் சார்ந்து  ஆய்வுத் துறையில் ஓரளவுக்கும் ஈடுபட்டு வந்த குஹா வெகுஜன வரலாற்று எழுத்தாளராக/ வாழ்க்கை வரலாற்றாய்வாளராக மாறியதற்கு முக்கிய காரணமாக Rukin Advani என்ற Editor இருந்துள்ளார். 



குஹாவுக்கும்,  ருக்குன் அத்வானிக்கும் இடையிலான அக-புற நினைவுகளை இந்நூல் விவரிக்கிறது, புத்தகத்தின் இடையிடையே அரசியல், இலக்கியம், உலக வரலாறு, பதிப்பு நிறுவனங்களின் பின்னணி, ஆய்வுலக நடைமுறை, கடித போக்குவரத்து போன்ற செய்திகள் எல்லாம்  வந்து சென்றாலும், ஒரு எழுத்தாளருக்கும் எடிட்டருக்குமான உறவு எத்தகையது, புத்தகத்தை மெருகேற்றவும், படைப்பை உருவாக்கவும் இந்த உறவு எவ்வளவு அவசியமானது போன்றவற்றைப் பற்றி எல்லாம் இந்நூலின் மூலம் அறிய முடிகிறது. 




என் தனிப்பட்ட அனுபவத்தில், குஹாவுக்கு அத்வானி அமைந்தது போல் தமிழ்ச் சூழலில்  எடிட்டர்கள் அமைவார்களா என்று தெரியவில்லை, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, சுயநலமற்று, இலக்கண இலக்கியங்களை ஆழ்ந்து கற்ற எழுத்துலக எடிட்டர்கள் தமிழ்ச் சூழலில் மிகச் சொச்சம் என்றே நினைக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணன், நஞ்சுண்டன் போன்றவர்கள் அவ்வப்போது இப்படியான முயற்சிகளை எடுத்துள்ளதைப் பெருமாள் முருகன் விளக்கினார். 




சலபதி எழுதிய Province Of The Book (Anuradha Roy & Rukun Advani ஆகியோரின் Permanent Black வெளியீடு) நூல் தமிழ்ப் புத்தக/அச்சு உலகம் எப்படி உருவானது என்பதை விவரிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் scribes -patrons-patronage  என்பது தான் அக்கால  புத்தக பண்பாட்டில் நிலவிய சமூக உறவாக இருந்துள்ளது. புத்தகங்களின் முகப்பில் நூல் ஆசிரியரின் பெயரை விட நிதி அளித்தவரின்(Patron) பெயரும், வெளியிடுபவரின்(Publisher) பெயருமே முதன்மையாக இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த பெயர்ப் போடும் சூழல் பெரிய அளவில் மாறி இருந்தாலும், அன்றைக்கும் இன்றைக்கும் தமிழ்ச் சூழலில் எடிட்டர் என்பவரின் இடம் நிர்ணயிக்கப் படாத ஒன்றாகவே இருந்துவருகிறது. பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டிருந்தாலும், தமிழ்ப் படைப்புகளுக்கு நிச்சயமான சந்தை இல்லாத காரணத்தால் அவை அனைத்தும் கைவிடப்பட்டதையும் அறிய முடிகிறது.  




தமிழில்  பழைய புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாசிரியர்களில் ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலானோர் புத்தகத்தை மெருகேற்றப் பெரியளவிலான சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. சமகால சூழலில் கட்டுரைகளை வாங்கி படித்துப் பார்க்காமல் வெளியிட்டு புத்தகத்தின் முகப்பில் தங்களது பெயரைக் கொட்டை எழுத்தில் போட்டுக் கொள்ளும் போக்கு தமிழ்ச் சூழலில் அதிகரித்துள்ளது.  



குஹாவின் இந்நூலைப் படிக்கும் போது தமிழ் X ஆங்கில பதிப்பு சூழல்களுக்கு இடையிலான ஒப்பியல் நோக்கு இன்றி அமையா ஒன்றாகவே இருக்கிறது.  “நடந்தேன், நடக்கின்றேன் நடந்து நடந்தேகுகிறேன்.” என்ற புதுமைப்பித்தனின் வரிகளை மனதிலேந்தி தமிழ் வாசகன் நல்ல படைப்பை நாடி நடக்கிறான். 




 எழுத்து வாழ்க்கையைத் தாண்டிய பல முக்கியமான நினைவுகளையும் இந்நூல் மூலம்  குஹா நம்முடன் பகிர்கிறார். St. Stephen கல்லூரியில் படிக்கவே ஒரு சிறப்புரிமை வேண்டும்(பிறப்பின் அடிப்படையிலேயே பலருக்கு இது வாய்த்து விடுகிறது) குஹாவும் இதை ஒப்புக்கொள்ளவே செய்கிறார். Oxford University Press-ல் பணிபுரிந்த போது Rukun முன்னெடுத்த Subaltern Studies போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தொகுப்பு முயற்சிகளாக இருக்கட்டும், OUPநிறுவனருடன் ஏற்பட்ட பிணக்கால், சுயமாக உருவாக்கிய Permanent Black பதிப்பகமாக இருக்கட்டும், அதன் மூலம் பல்வேறு அடர்த்தி நிறைந்த படைப்புகளை வெளியிட்டதாக இருக்கட்டும், Rukun Advani-ன் பதிப்புலக பங்களிப்புகளையும் காதலன் விவரிப்பதைப் போல் விவரிக்கிறார் குஹா. சபலதிக்கும் ருக்குன் அதவானிக்கும் இடையில் நடந்த கடித உரையாடல்கள்  இந்நூலில் இடம்பெற்றிருந்ததைப் படித்து,  ஒரு Fanboyயாக பூரிப்படைந்தேன். 




 St. Stephen’ கல்லூரியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த குஹா, பின்னர் பழங்குடிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட Verrier Elwin பற்றியான தேடலில் இறங்கி,  Savaging the Civilized (PB): Verrier Elwin, His Tribals and India என்ற நூலை வெளியிட Rukun மூலக்கல்லாக விளக்கியுள்ளார். அது இருவருக்கும் இடையிலான எழுத்து உறவின் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. குஹா பின்னாட்களில் கிரிக்கெட் பற்றியான கட்டுரைகளை வெளிவிடவும், காந்தியை அடிப்படையாக வைத்து ரசமான நடையில் இந்திய அரசியல் வரலாறு எழுதவும், பல்வேறு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தளிக்கவும் Rukun முக்கிய பங்காற்றியுள்ளார்.  



குஹாவை போல் ஒரு வரலாற்றாளர் உருவாக என்னென்ன காரணிகள் அவசியமானவை என்பதை அவரே விவரிக்கும் இந்நூலில் மூலம் அறிய முடிகிறது. இந்த  நூலைப் படித்து முடித்தது போலவே குஹாவின் பிற புத்தகங்களையும் படித்து முடிக்க வேண்டும். 











Comments

Post a Comment