ஆடு ஜீவிதம்
புதுமைப்பித்தனின் துன்பக்கேணி 1930களில் தமிழ்நாட்டு அடித்தட்டு மக்களின் துயர் நிறைந்த வாழ்க்கையைப் புனைவு வடிவில் பிரதிபலித்தது. இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்த வாழ்க்கையைத் தமிழ்ச் சமூகத்தால் எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்றே தோன்றும். சுந்தர ராமசாமி எழுதிய அக்கரைச் சீமையில் சிறுகதையும் தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான நிலைமையில் வாழ்ந்த அடித்தட்டு தமிழ் மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒன்றுதான். தமிழர்களுக்கு ஒரு துன்பக் கேணியும், அக்கறை சீமையும் இருந்ததென்றால், 1990-களில் பாலைவன பூமியில் மலையாளிகள் (நஜீப் முஹமது, ஹக்கீம்) அனுபவித்த சிரத்தைகளையும் கொடுமைகளையும் பதிவு செய்யும் நாவல் ஆடு ஜீவிதம். மலையாளத்தில் பென்யாமின் எழுதியதற்கு இணையான ஒரு மொழி பெயர்ப்பை எஸ். ராமன் சாத்தியப்படுத்தியுள்ளார். மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல் என்ற எண்ணம் ஓரிடத்தில் கூட தென்படவில்லை. உயிர்மை வெளியிட்டுள்ளது.
Money order- பொருளாதாரம் என்று கேரள பொருளாதாரத்தை விளிப்பதுண்டு. அங்குள்ள மலையாளிகள் பெரும்பாலானோர் அயல் நாட்டிற்கு, குறிப்பாக கல்ஃப் நாடுகளுக்கு வேலை நாடிச் செல்பவர்கள். இவ்வாறு செல்வதற்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் அவர்களுக்குண்டு. அங்குச் செல்பவர்கள் எல்லாருமே நல்வாழ்வு வாழ்ந்து விடுவதில்லை.
பஷீரின் மதில்கள்(சுகுமாரனின் மொழிபெயர்ப்பில்) சிறுகதை திரைப்படமாக வெளியாகி இருப்பதை அறிந்த பிறகுதான் அந்த கதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்த கதையில் “இந்த உலகத்திலேயே சிறந்த நறுமணம் பெண் வாசனை” என்ற இவ்வரிகள் இன்றும் மனதை விட்டு அகலாத ஒன்று. ஆடு ஜீவிதம் படிப்பதற்கும் அந்த கதையைத் தழுவி வெளியாகவிருக்கும் திரைப்படம் முக்கிய காரணமாயிருந்தது. மதில்களில் பெண் வாசம் மையம் என்றால் ஆடு ஜீவிதம் நாவலில் ‘இருத்தல்’ மையம்.
அயல் தேசத்தில் உழைத்து வீட்டிற்குப் பணம் அனுப்பும் லட்சிய வேட்கையோடு அங்குச் செல்லும் நஜீபின் கனவு மொத்தமும் பிறழ்கிறது. இதுவரை கீழ்மை என்று நஜீப் எண்ணி இருந்ததை விடக் கீழ்மையான கொடுமையான ஒரு வாழ்க்கை அவனுக்கு நேர்கிறது. வாழ வேண்டும் என்ற ஒரு பிடிப்பு அவனைச் சாகாமல் வைத்துக் கொள்கிறது. இறைவனை தன்னுடைய துயர் அனைத்திலும் உடன் இருக்கும் சக்தியாகக் கருதுகிறான்.
சொற்கள் பேசவே வாய்ப்பமையாத ஒருவன் மெதுவாக இறந்து போகிறான் என்ற தனிமையின் கொடுமையை இந்நாவலின் பல இடங்கள் நமக்கு உணர்த்துகிறது. Viktor Frankl தன்னுடைய ‘Man's Search for Meaning’ நூலில், இருத்தல்(existence) பற்றிப் பேசும் பல கருத்துக்கள் இந்நூலுடனும் ஒன்றிப் போகின்றது. நாஜி வதை முகாமில் 10 மாதங்கள் கழித்த Primo Levi-யின் துயரங்களை நஜீபின் 3 ஆண்டு பாலைவன வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மனிதனின் துயரங்களையும், இன்னல்களையும், வலிகளையும் அதிலிருந்து மீண்டெழும் மன உறுதியையும் நஜீபின் கதை நமக்குத் தெரிவிக்கிறது.
அவனுடைய ஆடுகள், தனிமையைப் போக்கும் பாத்திரங்களாக வந்து செல்கின்றன. பெருமாள் முருகனின் கதைகளில் வருவதைப் போல், மனித சாயல் கொண்ட ஆடுகள் ஒவ்வொன்றுக்கும் நஜீப் பெயர் சூட்டி இருந்தான். அவனது உறவுக் காரர்களின் பெயரும், தனக்குப் பிறக்கப்போகும் மகனுக்கு ஆசையாய் வைக்க நினைத்த பெயரும், அவன் இச்சை கொண்டவர்களின் பெயர்களும், அவன் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு சொரணையற்று கிடக்கும் பண்புகளைக் கொண்ட ஆடுகளும் அவனுக்கு வாய்த்திருந்தன. அந்த வறண்ட பாலை நிலத்தில் அவனது ஆடுகள் மட்டும் அவ்வப்போது இதமான ஈரத்தைக் கொண்டவையாக நினைத்தான்.
ஏ.ஆர். ரகுமான் இசையில் நேற்றிரவு கேட்ட ‘பெரியோனே, என் ரகுமானே’ பாடல்,இந்நூலின் கடைசி 50 பக்கங்கள் நிறைவுறும் வரை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மிக இயல்பாக நஜீபின் தன் மீட்சி நடக்கிறது. எல்லாம் இறைவனின் செயல் என்று நஜீப் நம்புகிறான். இந்த அதி கேவலமான வாழ்வை வாழ வேண்டும் என்பது கூட இறைவனின் ஏற்பாடு என்று அவர் எண்ணிக் கொண்டிருக்கிறான். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகுத் தனது நேசமிகு மனைவியிடம் கூட அழுகை மொழியில் தான் அவனால் பேச முடிந்துள்ளது. பெரும் உணர்வுகளைச் சொற்கள் மூலம் வெளிப்படுத்த முடியாத அவனுடைய இந்த வாழ்க்கை தான் ஆடு ஜீவிதம்.
இந்த கதையை ஒரு மனிதனின் நிஜ அனுபவமாக இருக்கும் என்று எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை. பெரும்பாலான மனிதர்களின் கொடுமை மிகுந்த வாழ்க்கை அனுபவங்கள் கூறப்படாமலே இருக்கிறது. துயரங்களையும், துன்பங்களையும் மூடி மறைத்து அதி கொண்டாட்டமான வாழ்க்கையை மட்டும் சமகால சமூக வலைத்தளம் நமக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. வருத்தம், அவலம், கோபம், ஏக்கம் என அனைத்தும் அர்த்தமற்ற ஒன்றாகவும், இன்பம் ஒன்றையே பிரதானமான ஒன்றாகவும் நாம் பாவித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துயரங்கள் இல்லாமல் மகிழ்ச்சி ஏது? வருத்தங்கள் இன்றி கொண்டாட்டம் ஏது? அவலமின்றி இன்பம் தான் ஏது? இதுபோன்ற துயரமான கதைகள் சமகால தலைமுறைக்கு அவசியம். ஆடு ஜீவிதம் நாவல் அளித்த உணர்வைத் திரைப்படமும் அளிக்கட்டும்.
துக்கத்தைக் கட்டி அணைத்து நுகர வேண்டிய காலகட்டம் இது!
Comments
Post a Comment