பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
ஊசி என்றாலே பயம், மருத்துவமனை வாடை ஆகவே ஆகாது. 11ம் வகுப்பில் கணினி அறிவியல் குரூப்பை தேர்ந்தெடுத்ததற்குப் பிரதான காரணங்களுள் மருத்துவ உபகரணங்கள் மீது நான் கொண்டிருந்த ஒவ்வாமையும் ஒன்று. கடந்தாண்டு டைப்பாய்டு காய்ச்சல் வந்து போது வலது கையில் சொருகப்பட்டிருந்த Venflon-ஐ இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும். மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவலைப் படித்த போது அப்படி தான் இருந்தது. உடல் நடுக்கத்துடனே அந்த முதல் அத்தியாயத்தைப் படித்தேன். Venflon என்ற வார்த்தை வரும்போதெல்லாம் வலிக்கும். The Tipping Point புத்தகத்தில் எழுத்தாளர் Malcolm Galdwel ‘கொட்டாவி’ குறித்து எழுதியதைப் படித்துவிட்டு 3 முறை கொட்டாவி விட்டது நினைவு வருகிறது. வசியம் செய்யும் எழுத்து இப்படியான உணர்வைக் கொடுக்குமோ என்று எண்ணிக் கொண்டேன்.
திங்கள்கிழமை அலுவலக வேலைகளை எல்லாம் ஓரளவுக்குத் தளர்த்திக் கொண்டு படிக்கத் தொடங்கினேன், விறுவிறு என்று 100 பக்கங்கள் என்னை அறியாமலே கடந்திருந்தன. நாவலின் பெயரைப் பார்த்து ஏதோ ஈழத்து நாவல், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி எழுதியுள்ளார் என்று நினைத்த படிக்காமல் விட்ட என் அறியாமையை நொந்து கொண்டேன். செவ்வாய்க்கிழமை முழுவதும் படித்தேன், இரவு நாவல் நிறைவு பெற்றது. நூல் ஆசாரியர், பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டத்திற்கு தீர்ப்பை எழுதி பேனா முள்ளை உடைத்திருந்தார்.
சராசரி மனிதன் கொண்டிருக்கும் பலகீனங்களை அந்தந்த பாத்திரத்தின் தன்மையொரு சேர்த்தே மதிப்பிட்டிருந்தார். வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நம் அனைவருக்கும் தற்கொலை எண்ணம் தோன்றி இருக்கும், என்ற வரியைப் படிக்கும்போது சுதாரிக்காமல் இருக்க முடியவில்லை, 20 நொடிகளாவது அதைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. அதிர்ச்சிக்கு அப்பாற்பட்ட வரிகள் அல்ல இவை. நூலில் இப்படி பல்வேறு அதிர்வூட்டும் அதே வேளையில் சிந்திக்க வைக்கும் வரிகள் இடையிடையே வந்து செல்கிறது.
Post-mortem என்பது ஒரு நிகழ்வு முற்றுப்பெற்ற பிறகு அது நிகழ்ந்ததற்கான காரண-காரணிகளை ஆய்வது, இறப்பாக இருக்கும் பட்சத்தில், உடல் சார்ந்த ஆய்வாக மட்டும் அது தேங்கி விடுவதில்லை, அந்நிகழ்வின் பின்னணியை அதற்கு நெருக்கமான மனிதர்களோடு தொடர்புப் படுத்தி அந்த சம்பவத்தில் அவர்கள் செலுத்தி இருக்கும் செல்வாக்கையும் ஆய்வது. இங்குப் பிரபாகரனின் தற்கொலை தான் ஆய்வு பொருள். Venflon வழியாக அவன் செலுத்திக் கொள்ளும் மருந்து அவன் தற்கொலையைச் சாத்திய படுத்துகிறது. காற்றில் பறந்து தரையில் மிதக்கும் இறகை விட மென்மையாக அவனது தற்கொலை நேர்கிறது.
தற்கொலை தரும் அதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அவனது நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் ஏற்படும் உணர்வு கொந்தளிப்பு, அவனை ஒவ்வொரு மனிதர்களும் மதிப்பிட்டிருக்கும் விதம் என அனைத்தும் பிரமாதமான விவரணைகளோடு விரிகிறது. எல்லா தரப்பினரது நியாய தர்க்கங்களையும் நூல் ஆசிரியர் பகுப்பாய்வு செய்கிறார். இந்த நாவலே ஒரு போஸ்ட்மார்ட்டம் போல் தான் புனையப்பட்டிருக்கிறது. இருத்தலியம், லட்சியவாதம், நாத்திகம் சார்ந்த தத்துவார்த்த கேள்விகளையும் அர்த்தங்களையும் பல்வேறு இடங்களில் அறியமுடிகிறது.
உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகு வெள்ளை துணியில் உடலைச் சுற்றி உறவினர்களுக்கு அளிப்பதைப் போல், இந்த நாவலின் இரண்டாவது பகுதி அவனது நண்பர்கள் அவன் மீது கொண்டிருந்த மதிப்பீட்டை அவர்களுடைய சார்புத் தன்மையுடன் நமக்கு வழங்குகிறது. இந்த இரண்டாவது பகுதியினை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்று வரையறுக்கலாம்.
மருத்துவமனையின் வாடையும் அங்குள்ள மனிதர்களின் வாடையும் நாவல் முழுக்கவே பரவியுள்ளது. சமகால மருத்துவத்துறையில் யதார்த்தங்களையும் மானுட நிலைமையின் சிதைவையும் ஒருங்கே இந்நாவல் நமக்கு வழங்குகிறது. நுழைவுத் தேர்வின் மீதான விமர்சனம், மருத்துவக் கல்லூரியின் நடைபெறும் அரசியல் என பல்வேறு நிகழ்வுகள் தீர்வுகளை வேண்டி நிற்பவை.
நாவலின் நடுவே சில பகுதிகள் வாசிப்புக்குத் தொய்வாகத் தெரிந்தாலும், முழுமையாக நல்ல அனுபவத்தை அளிக்கிறது. தரமான கதை சொல்லலை விரும்பும் வாசகர்கள் அவசியம் வாசிக்கலாம்.
Comments
Post a Comment