Strangeness of Tamilnadu

 



மார்ச் 30 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில், “பெரியாரும் கர்நாடகச் சங்கீதமும் : இசையின் அரசியல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. முற்போக்கு அரசியல் செயற்பாட்டாளர்களால் தொடங்கப்பட்ட Voice of TN அமைப்பு இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தது.

பெரியாரின் பெயரைத் தலைப்பாகக் கொண்டிருந்தாலும் டி.எம் கிருஷ்ணாவின் சமீபத்திய மெட்ராஸ் மியூசிக் அகாடெமி சர்ச்சையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விது. டி.எம் கிருஷ்ணாவின் முற்போக்கு அரசியலுக்கு ஆதரவான குரலை இக்கூட்டம் எழுப்பிய அதே நேரத்தில், இவ்விவாதத்தில் பார்ப்பனர் அல்லாதார் கொண்டிருக்கும் கருத்தையும் பிரதிபலித்தது.

கர்நாடக சங்கீதத்தின் ஆழ அகலங்களைப் பேச்சாளர்களின் உரையினூடாக உணர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாருடைய உரையின் மையமாகப் பெரியார் இருந்தார், அவரளித்த பகுத்தறிவு பார்வை நிறைந்திருந்தது.

கவிக்கோ மன்றத்தில் வழியும் அளவிற்கு நிரம்பி இருந்த கூட்டத்தில், ஒரு பக்கம் முத்தமிழறிஞர் கலைஞரும், இன்னொருபக்கம் உ. வே. சாமிநாதையரும் இசையின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் டி.எம் கிருஷ்ணாவுக்கான ஆதரவு பெரியார் வழி வந்த பார்ப்பனரல்லாதார் தரப்பின் பக்குவத்தை, ஜனநாயக பண்பை, அறிவாழத்தை, தாராளவாத உணர்வை வெளிப்படுத்தியது. உரை நிகழ்த்திய 4 பேரிடமிருந்தும் பயனுள்ள ஏதோ ஒரு விஷயத்தைப் பெற முடிந்தது.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களும், திக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்களும், திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கவிஞர் கனிமொழி கருணாநிதி அவர்களும் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்திருந்தார்கள்.

இம்மாத உயிர்மை இதழில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் திரு.ராமன் அவர்களுக்கு அளித்துள்ள நேர்காணலில், டி.எம் கிருஷ்ணாவை ஆதரிப்பதற்கான நியாயமான காரணங்களையும், கர்நாடக சங்கீதத்தில் நிகழும் இதுபோன்ற சீர்திருத்தச் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிடுத்தார். டி.எம் கிருஷ்ணாவை ஆதரிப்பது வெறுப்பரசியலுக்கு எதிரான நடவடிக்கை என்பது இந்த நேர்காணலின் மைய சரடு எனக் கொள்ளலாம்.

இம்மாத காலச்சுவடு இதழில் அரவிந்தன், கிருஷ்ணாவின் கலை அம்சத்தை வைத்து “‘சங்கீத கலாநிதி’ டி.எம். கிருஷ்ணா: வாழ்வின் திசையை மாற்றும் கலை” என்ற தலைப்பில் அரசியல் கலந்த ஒரு கட்டுரையை எழுதி இருந்தார்.

கடந்து 2 வாரத்தில் வெளியான பெரும்பாலான தமிழ், ஆங்கில தினசரிகளில் தலையங்கம், கருத்து பகிர்வு(Opinion Columns) என ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விவாதங்கள் நடந்திருந்தாலும்,

Voice of TN நிகழ்வு & பெருமாள் முருகன் நேர்காணல், திராவிட இயக்க தலைவர்களிடமிருந்து வெளிப்பட்ட ஆதரவு என்பன போன்ற கருத்து வெளிப்பாடுகள் அனைத்தும் பார்ப்பனரல்லாதார் தரப்பிலிருந்து வெளிப்பட்டவை. இன்னும் குறிப்பாகப் பெரியார் வழியில் வந்த அரசியல் உணர்வு பெற்றவர்களால் அளிக்கப்பட்ட பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கான ஆதரவுகள்.

எம்.எஸ் எஸ் பாண்டியன் தமிழ்நாட்டு அரசியல் சூழலை அவதானித்து அவ்வப்போது “Strangeness of TamilNadu” என்று விளிப்பார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆழமாக வேரூரன்றி இருக்கும் மண்ணில் பிறப்பால் பார்ப்பனரான டி.எம். கிருஷ்ணாவுக்கான ஆதரவுகள் பாண்டியன் சொன்னதை போல் விந்தையான ஒன்று தான்! சமகால அரசியல் சூழலில் அவசியமான ஆதரவும் கூட!

Comments