World Book Day: Bookmarks

  






உலகப் புத்தகத் தினத்தில் எதைப் பற்றியாவது எழுதலாம் என்று நினைத்த மாத்திரத்தில் புக்மார்க்குகளைப் பற்றி எழுதலாம் என்று தீர்மானித்தேன். இது வரை எதை எல்லாம் புக்மார்க்காகப் பயன்படுத்தியுள்ளேன் என்று ஒரு பட்டியலைத் தயார் செய்து பார்க்கும் ஆசைத் துளிர் விட்டது.


சில புத்தகங்களுக்கு அதன் அட்டையே புக்மார்க்காக உபயோகப்படும். புத்தகத்தின் அளவை காட்டிலும் பெரிதாக இருக்கும் அட்டையின் ஒரு பகுதி உள்ளே மடிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான Hardbound ஆங்கில நூல்கள் இப்படி வெளிவருகின்றன. சமீபத்தில் வாசித்த சில தமிழ் Paperback புத்தகங்களும் இப்படியான புத்தக அட்டையைக் கொண்டு வெளிவருகின்றன. 250 பக்க புத்தகமென்றால் முதல் 100 பக்கம் வரை முகப்பு அட்டையின் மடிப்பையும் கடைசிச் சில பக்கங்களுக்குப் பின்னட்டையின் மடிப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


கடையில் இலவசமாகக் கொடுக்கும் புக்மார்க்குகளை மிக அபூர்வமாகவே பயன்படுத்த முடிகிறது. கேட்டு வாங்கும்போது இருக்கும் ஆர்வம், பிறகு குன்றி விடுகிறது. ஆனாலும் ‘எக்ஸ்ட்ரா புக் மார்க் இருந்தா குடுங்க’ என்று கேட்கும் பழக்கம் என்னை விட்ட பாடில்லை. திருவான்மியூர் பனுவல் புத்தகக் கடையில், புகழ்பெற்ற இலக்கிய மேற்கோள்கள் கூடிய பூக்மார்க்குகள் புத்தகம் வாங்கினால் இலவசமாகக் கிடைக்கும். Higgibothoms கடையில் சில ஆங்கிலப் புத்தக ஆசிரியர்கள் தங்களது புத்தகங்களை விளம்பரம் செய்யக் கொடுத்து சென்ற புக்மார்க்குகளை நமக்கு இனாமாக அளிப்பார்கள். புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலான பதிப்பகங்களில் இலவச புக்மார்க்குகளை அறுவடை செய்யலாம்.



விலை வைக்கப் பட்டிருக்கும் புக்மார்க்குகளை அறியாத வயதில் வாங்கினாலும், இப்போது பரிசாகக் கிடைத்தால் மட்டும் பெற்று கொள்வதுண்டு. Turn the page என்று வடிக்கப்பட்ட துறு ஏறாத இரும்பால் ஆன ஒரு புக்மார்க்கை அன்புத் தோழி எங்களுடைய முதல் சந்திப்பில் அன்பளிப்பாக வழங்கினார். இந்தப் பிறந்தநாளுக்கும் அதே தோழியிடமிருந்து ஒரு அட்டையால் ஆனா Handmade புக்மார்க் பரிசாகக் கிடைத்தது. ஒரு மாதத்திற்கு முன்பு புத்தகத்தோடு கூடிய கயிறிடப்பட்ட Flipkart-ன் Vintage புக்மார்க் ஒன்றை நெல்சன் (Nelson Xavier) அனுப்பி இருந்தார்.


அதிகப் பக்கங்களைக் கொண்ட புத்தகங்களில் தட்டையான நூலாலான, புத்தகக் குறிப்பான்கள் புத்தகத்தின் நடுவில் இணைக்கப்பட்டு வெளிவருவது படிக்க வசதியாக இருக்கிறது. தேவைப்படும் இடத்தில் கலர்கலரான Stickey Note-களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல நேரங்களில் கிழிக்கப்படாத Stickey Noteஐ கூடப் புக்மார்க்காகப் பயன்படுத்தியுள்ளேன். பலநேரங்களில் Stickey Noteகள் புத்தகத்தின் அழகை கெடுப்பவையாகத் தோன்றிகிறது.


குறிப்பெடுக்கும் பென்சில், பேனா போன்றவை புத்தகத்தின் நடுவே அடை வைக்கப் பட்டதைப் போல் அந்தப் பக்கத்துடனே ஒட்டி கொண்டு அடுத்த முறை தொடும் வரையில் பாதுகாப்பாக இருக்கும். இப்படிச் சீவி சீவி அடை வைக்கப்பட்ட பென்சில்கள் எண்ணிலடங்காதவை.




பேருந்து பயணசீட்டுகளைச் சில நேரம் புக்மார்க்காகப் பயன்படுத்துவதுண்டு. பேருந்தில் செல்லும்போது வாங்கும் சீட்டுகளைப் பேருந்தில் படிக்கும் புத்தகங்களை அடையாளம் காட்டி விடுகின்றன. வாசிப்புக்கு நடுவே மிகச் சிறிய இடைவேளை மட்டும் அவசியப்படுகிறது என்றால் இயர்போன், வாட்ச், கண் கண்ணாடி, மொபைல் போன், Highlighter போன்றவற்றையும் புக்மார்க்காகப் பயன்படுத்த நேரும்.


படுக்கையில் கிடக்கும் புத்தகத்திற்கு bedsheet-ன் நுனி பல நேரங்களில் புக்மார்க்காகப் பயன்பட்டுள்ளது. ஒரு முறை சீப்பை எடுத்து புத்தகத்தின் நடுவே வைத்துவிட்டு, மெட்ரோ ரயிலில் நூலை திறந்து படிக்கையில் சீப்பிருந்தது அதிர்ச்சியளித்தது.


சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் உண்பதை போல், பக்கம் குறைவான புத்தகங்கள் பல நேரங்களின் பெரிய புத்தகங்களுக்குப் புக்மார்க்காக அமைந்து விடுகின்றன. கடையில் பொருள் வாங்கிய ரசீது, சாவி, சாக்லேட் காகிதம், Tissue paper, Atm Card, Visiting Card, Rubber Band எனப் பலவற்றையும் புக்மார்க்காகப் பயன்படுத்தி இருக்கிறேன்.


வெகு அரிதாகப் புத்தகத்தின் பக்கங்களை மடித்து வைப்பதுண்டு. அது பெருங்குற்றம் என்று உணரச்செய்தவர் சலபதி. அதன்பிறகு அப்படியான காரியத்தில் ஈடுபடுவதில்லை.


என்னைவிட என் புத்தகங்களுக்கு நெருக்கமாவையாக விளங்கும் புக்மார்க்குகளை நினைத்து சில நேரம் பொறாமை கொண்டாலும், கிழித்த கோட்டை தாண்டாமல் இருக்கும் அவற்றின் பணிவுக்காகப் புக்மார்க்குகளை மன்னித்து விடலாம்.


அன்பர்களுக்கு உலக புத்தக தின வாழ்த்துகள்!   


#WorldBookDay


Comments