#கலைஞர்100

 




தலைவர் கலைஞர் பிறந்தநாள், எல்லாரிடத்திலும் கலைஞர் பற்றிச் சொல்ல ஏதோவொன்று நிச்சயம் இருக்கும். அனுபவம், புகைப்படம், வாழ்த்து, பாராட்டு, நன்றி, மதிப்பு, வசை  எனப் பல வழிகளில் கலைஞரை நினைவுகூருவோரும் உண்டு. என் போன்றவர்களுக்கு அவர் Inspiration, ஆறுதல், ஆதர்சம்,உந்து சக்தி, மீட்பர் இத்யாதி. 


அரசியல் தெளிவு பெரும் முன்பு கால்பந்தாட்ட வீரர் ஒருவரின் படத்தை வால்பேப்பராகப் பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக கைப்பேசி திரை முதல், மடிக்கணினி திரை வரை கலைஞர் புகைப்படங்களைத் தான் வால்பேப்பராகப் பயன்படுத்துகிறேன். 


கடக்க முடியாத அவமானங்களும்  தோல்விகளும்  இயலாமைகளும் இடர்களும் நமக்கு ஏற்படும் சமயங்களில் அவற்றை வெகு இயல்பாகக் கடக்க உதவும் முக லட்சணம் கலைஞருக்கு வாய்த்திருப்பதாகத் தோன்றும். அப்படியான இரண்டு புகைப்படங்களைத் தான் அடிக்கடி பார்த்து ஆறுதல் கொள்கிறேன். 


இரண்டுமே கருப்பு வெள்ளை படங்கள், ஒன்று 1960-களிலும் மற்றொன்று 1980-களிலும் எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இரண்டுமே மஞ்சள் துண்டு அணிவதற்கு முன்பு எடுக்கப்பட்ட படங்கள் என்பது மட்டும் உறுதி. 


முதல் படம் வீட்டின் வாசற்படியில், அமர்ந்த நிலையில்  இடது கால் வலது காலுக்கு அடியில் மடிக்கப்பட்டு, கழட்டி விட்டபடி ஒற்றை செருப்புடன், கருப்பு சிவப்பு கரை வேட்டியோடு, வலதுகையில் அணிந்துள்ள மோதிரம் தெரியும் விதத்தில் இயல்பாகவும், இடது கையை  இடுப்பிலும் வைத்துக்கொண்டும் , நடு வகிடு எடுத்து சீவப்பட்ட  சுருள் முடியுடனும், கருப்பு கண்ணாடியில், இரண்டு பக்க தோள்பட்டைகளிலும் சமமாகப் படியும்படி அணிந்த கதர் துண்டுடனும், அவர் கொண்டிருக்கும் ஞானத்திற்கு நிகரான வசீகரத்தைப் பிரதிபலிக்கும் மீசையுடனும் இருக்கும் பிரகாசமான புகைப்படம்.


மற்றொன்று வலதுகையை லாவகமாக மடக்கி தலைக்கு அணுக்கமாக வைத்துக் கொண்டு பற்களின் மேல் வரிசை தெரியச் சிரிக்கும் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம். எனக்கு மிகப் பிடித்த இரண்டு புகைப்படங்கள் இவை. 


சாதி படிநிலையிலும், பொருளாதார நிலைமையிலும், குடும்ப பின்னணியிலும் பெரிய செல்வாக்கில்லாத பின்புலத்தைக் கொண்டவர். கலைஞர் ஒரு சுயம்பு. தனது திறமைகளை மட்டும் முதலீடாகக் கொண்டு முன்னேறியவர், சமூக முதலீடு எதுவுமற்ற ஒருவருக்கு இயல்பாக இருக்கும் இலட்சியவாதம் நிறைந்த கொள்கைப் பிடிப்பு அவருக்கு வாய்த்திருந்தது, இயக்கத்திற்காக உயிர் உட்பட அத்தனையும் தியாகம் செய்யத் தயாராக இருந்த மன வலிமையைப் பெற்றிருந்தார். 


கிட்டத்தட்ட அவருக்கு நிகரான வாழ்க்கை பின்புலத்தைக் கொண்ட என் போன்ற சாமானியர்களுக்கு  அவர் தான் Inspiration, ஆதர்சம், உந்து சக்தி, கதாநாயகன், மீட்பர் எல்லாமும். 


ஒரு மனிதரை ஆதர்சிக்க அவர்களோடு ஏதோ ஒருவித பிணைப்பு வேண்டும், அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சரி பாதிக்கும் அதிகமான மக்களுக்குக் கலைஞர் ஆதர்ச நாயகனாக இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டவர். அவரவருக்கான காரணங்களை அவரவர் தான் கண்டடைய வேண்டும். 


என் போன்ற சாமானியர்களின் நினைவுகளில் உணர்வாக என் தலைவர் கலைஞர் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார்! 


#கலைஞர்100 


Comments

Popular Posts