“தென்றலை தீண்டியதில்லை நான், தீயை தாண்டி இருக்கிறேன்.”

 



தமிழ் சினிமாவின் திசை வழி 



“என்னடா ஆச்சரியக்குறி போடுகிறாய்?"


"ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும்! அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை."


முத்தமிழறிஞர் கலைஞர் கதை-திரைக்கதை-வசனம் எழுதிய ‘நாம்’ திரைப்படத்தில் பண்ணையாருக்கும் தொழிலாளிக்கும் இடையில் நிகழும் உரையாடல் இது. அதுவரை தமிழ் சினிமா இது போன்ற வசனங்களுக்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. பேசியும் எழுதியும் அடைய முடியாத வீச்சை ஒரு பாத்திரத்துக்குள் புகுந்து பேசிய சினிமா வசனங்கள் சாத்தியப்படுத்தின. காட்சியில் பதிய முடியாத அழகியல், வசனங்கள் மூலம் சாத்தியப்பட்டது. இப்படிதான் 20-ஆம் நூற்றாண்டு தமிழ் சினிமாவின் திசை வழியைக் கலைஞர் தன்னுடைய கதை வசனங்கள் மூலம் தீர்மானித்தார். 



 1947ம் ஆண்டு தொடங்கிய முத்தமிழறிஞர் கலைஞருடைய திரை பயணம் 66 ஆண்டுகள் தொடர்ந்தது. தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 69 திரைப்படங்களில் அவர் பணியாற்றி இருந்தார். பேரறிஞர் அண்ணாவின் முதல் திரைப்படமான  ‘நல்லதம்பி’ வெளியாவதற்கு முன்பே, கலைஞரின் ராஜகுமாரியும் அபிமன்யுவும் வெளியாகி இருந்தன. 26 படங்களைச் சொந்தமாகத் தயாரித்திருந்தார். சிவாஜி கணேசன் -எம்.ஜி.ஆர் என்ற இருபெரும் திரை ஆளுமைகளைத் தனது வசனங்களைக்  கொண்டு அறிமுகப்படுத்தி இருந்தார். தமிழ் சினிமாவை பார்ப்பனர்களிடமிருந்தும் பண்ணையார்களிடமிருந்தும் பிடுங்கி பாமரர்களிடம் ஒப்படைத்ததில் கலைஞரின் கதை-வசனங்களுக்கு பெரும் பங்குண்டு. 



சினிமாவில் தொடங்கும் அரசியல்  





மேலைநாடுகளில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சினிமா என்ற தொழில்நுட்பம்,  20-ம்  நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு வந்தடைந்தது. மௌன படங்களை மட்டும் கொண்டிருந்த திரையில், பேசும் படங்கள் 1934-க்கு பிறகே அறிமுகமாயின. அடுக்குமொழியில் செந்தமிழ் நடையில் உரையாற்றும் திராவிட பாணி மேடைப் பேச்சும் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் தான் தோற்றம் பெற்றது. சினிமாவில் ஒளியும்-ஒலியும் சேர்ந்து மக்களிடைய உருவாக்கும் உணர்வு கொந்தளிப்புகளைத் தனது வசனங்கள் மூலம் அரசியல் தளத்தை நோக்கி மடை மாற்றினார் கலைஞர். 


சமூக சினிமாக்கள் 




திமுக தொடங்கப்பட்டதிலிருந்தே  இரண்டு விஷயங்களில் மிகத்தெளிவாகச் செயல்பட்டது. ஒன்று, சாமானிய  மக்களை அணிதிரட்டுவது. மற்றொன்று, அவர்களை அரசியல்மய படுத்துவது. ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற லட்சியத்தோடு’  சாமானிய மக்களை அரசியல்படுத்தி அவர்களை ஆட்சிக்கட்டிலை நோக்கி நகர்த்தியது திமுகவால் மட்டுமே சாத்தியமானது. திராவிடர்-தமிழர்-பார்ப்பனரல்லாதார் போன்ற அடையாளங்கள் இந்த அணிதிரட்சிக்கு மூலமாக அமைந்தன. வெகுஜன மக்களைத் திரளாக  அரசியல்படுத்துவதற்கு  சினிமா என்பது  மிகப் பெரும் சாதனமாகப் பயன்பட்டது. புராண, சரித்திர திரைப்படங்களிலிருந்து அரசியல் பேசும்  சமூக சினிமாக்களின் வருகை பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வருகைக்கு பிறகே ஆழப் பட்டது. 




பராசக்தி 




தமிழ்நாட்டில் எழுத்தறிவு விகிதம் 30% குறைவாக இருந்த 1952ம் ஆண்டில் கலைஞரின் திரைக்கதை-வசனத்தில்  பராசக்தி திரைப்படம் வெளியானது. மதுரையில் 52,000 சதுரடி பரப்பில் அமைந்திருந்த ஆசியாவின் பெரிய திரையரங்கமான ‘தங்கம் தியேட்டரில்’  100 நாட்களைக் கடந்து ஹவுஸ் புல்லாக ஓடியது. சந்தைகளில் வசன புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. தெருவோரம் பராசக்தி திரைப்படத்தின் நீளமான வசனங்களைப் பேசிக்காட்டி வேடிக்கை பார்ப்பவர்களிடம் சில்லறை வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அதன் வசனங்கள் பிரபலமாக இருந்தது. மேடைப் பேச்சாளராக முனைபவர்கள் பராசக்தி வசனங்களைப் பேசி பயிற்சி பெற்றனர். 



பராசக்தி சந்தித்த ஒடுக்குமுறை 




அன்றைய ஆளும் காங்கிரஸ் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பிரச்சாரம், மொழி உரிமை, சனாதன எதிர்ப்பு, அதிகரா குவிப்பு எதிர்ப்பு  போன்றவற்றை அழுத்தமாகப் பேசிய திரைப்படமாகப் பராசக்தியைக் கொள்ளலாம். கருத்துக்காக மிகப் பெரிய ஒடுக்குமுறையை திமுக தலைவர்களின் இலக்கியங்களும் திரைப்படங்களும் சந்தித்த காலகட்டம் அது. பராசக்தி திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.  




வெகுஜன வெளியில் “டேய் பூசாரி, யாரது அம்பாளா? அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள் ?” என்ற வசனம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சியை இன்றைக்கு நம்மால் யூகித்துக் கூட பார்க்க முடியாது. பராசக்தி வெளிவந்தவுடன் கடும் எதிர்ப்பை பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்கொண்டது. திரைப்படத்திற்கு எதிரான கண்டன கடிதங்கள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் குவிந்தன, சமூகத்தில் மேல்தட்டினர் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டி  முதலமைச்சராக இருந்த ராஜகோபாலச்சாரிக்கு கோரிக்கை விடுத்தனர்,   திரைப்படத்தை அனுமதித்த தணிக்கை குழுவும் எதிர்ப்புகளைச் சந்தித்தது,  ‘தினமணி கதிர்’ போன்ற தேசிய ஏடுகள் வழக்கத்திற்கு மாறாக 3 பக்கத்தில் பராசக்தியை விமர்சித்து எழுதின, அதன் அட்டையில் மிக மோசமான கேலிச் சித்திரம் ஒன்றும் தீட்டப்பட்டிருந்தது, உளவுத்துறை அதிகாரிகள் திரைப்படத்தைப் பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டனர். ஒரு திரைப்படத்திற்கு அன்று இவ்வளவு பெரிய எதிர்ப்பு எழுந்திருக்குமா என்று வியக்கும் அளவிற்கான நெருக்கடியைப் பராசக்தி சந்தித்தது. 



காட்சி நீக்கம்


 


பராசக்தி திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எழுந்த குரல்கள், 


1.குணசேகரன் சுவற்றின் மீது தான் வைத்த கல்லைத் தட்டிவிட்டு, இதற்குத் தெய்வ சக்தியெல்லாம் கிடையாது எனச் சொல்லும் காட்சி 


2. கோவிலின் கருவறையில் பூசாரி கல்யாணியைக் கற்பழிக்க முயலும் காட்சி.


ஆகிய இரண்டு காட்சிகள் நீக்கப் பட்ட பிறகுச் சற்று ஓய்ந்தன. திரைப்படம் வெளியாகி 6 மாதங்கள் கழித்து இக்காட்சிகள் நீக்கப்பட்ட காரணத்தால் வெகுமக்களிடையே இத்திரைப்படம் மேலும் ஆர்வத்தைக் கூடியதே ஒழியக் குறைக்கவில்லை. மக்கள் திரையரங்கங்களில் குவியத் தொடங்கினர். சிவாஜி கணேசன் தனது முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். 




பராசக்தி x அவ்வையார்


திராவிட அரசியல் கொள்கைகளைப் பேசும் பராசக்தி திரைப்படம் தேசிய இயக்க தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1953ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டூடியோ எஸ்.எஸ் வாசன் தயாரிப்பில் ‘அவ்வையார்’  திரைப்படம் வெளியானது. 6 ஆண்டுகாலமாகத் தயாரிப்பிலிருந்த இந்த படம் பராசக்தி வெளியானதும் அவசர அவசரமாகத் திரைக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதிதாகக் காட்சிப் பதிவு செய்யப்பட்டிருந்தன.  பராசக்தி திரைப்படத்திற்கு நேர எதிராக இந்து மத கதைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டிருந்தது அவ்வையார் திரைப்படம். தேசிய இயக்க சினிமா காரர்களிடையே பராசக்திக்கு  எதிராக வெளிப்பட்ட கலைவடிவமாக அவ்வையார் விளங்கியது. பராசக்தியை எதிர்த்தவர்கள் எல்லாம் இந்த படத்திற்குப் பாராட்டு பத்திரம் வாசித்தனர். இப்படி வசனங்களின் மூலம் மட்டுமே பெரும் தாக்கத்தை சமூகத்தில் கலைஞரின் பராசக்தி திரைப்படம் ஏற்படுத்தியது. 





பராசக்தி திரைப்படத்தின் இறுதி காட்சியில், நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நின்று  கொண்டு குணசேகரனாகச் சிவாஜி கணேசன் பேசிய நீண்ட நெடிய வசனத்தில் “தென்றலை தீண்டியதில்லை நான் ஆனால் தீயைத் தாண்டி இருக்கிறேன்.” என்ற வரிகள் பராசக்தி திரைப்படம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் திரைத்துறையில் கலைஞர் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் சேர்ந்தே அர்த்தப்படுத்துகிறது. 









Comments

Popular Posts