கண்ணன் வருகின்ற நேரம் .....
உழைப்பின் வரம்பைத் தாண்டி சக்கையாக உழைத்துவிட்டு, காதில் ஒரு பாடலை ஒலிக்க விட்டேன். அவ்வளவு நிம்மதி. வரிகளா, குரலா, இசையா, பாவனையா இவற்றில் எது ஈர்த்தது என்று தெரியவில்லை. பாடலை கேட்கும்போதெல்லாம் நிம்மதி நேரும் அந்த தருணம் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
கர்நாடக இசை தான் கடினமான சூழலை இப்போதெல்லாம் கடக்க உதவுகிறது. எம்.எஸ் குரலில் ‘நெஞ்சுக்கு நீதியும்’ ‘வெள்ளை தாமரை’ கேட்பேன், சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ’ பாடல் மனதை இலகச் செய்யும். அரிதான சமயங்களில் அல்லது தேர்ந்தெடுக்காமல் ஒலிக்கும் சமயங்களில் தான் இசைப்புயல், இசைஞானி, இசை அரக்கன்(அனிருத்) பாடல்கள் எல்லாம்.
மனதை ஆசுவாசப் படுத்திய அந்த பாடலின் இசைவடிவத்தை இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர். காவடிச்சிந்து வகையைச் சேர்ந்தது. கண்ணன் புகழ் பாடும் பாடல். இதே பாடலை பலர் பாடி கேட்டேன். கே.ஜே.யேசுதாஸ், நித்யஸ்ரீ மகாதேவன், சுதா ரகுநாதன், அருணா சாய்ராம் எனப் பலர் பாடி இருந்தார்கள். எம்.எஸ் பாடி இருக்கிறாரா என்று தேடினேன், இல்லை போலும். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் பாடி இருந்தார். இவர் பாடியதை தான் முதலில் கேட்டேன், அதன் பிறகு நான் கேட்ட எதுவுமே அவ்வளவு ஈர்க்கவில்லை. பாடலை பாடியவர் ஒரு சங்கிதான், ஆனாலும் பாடலை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
மிகத் துல்லியமான ஏற்ற இறக்கங்கள், “தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!” என்ற பாடல் வரிகளை இவர் குரலில் கேட்கும்போது மனம் அடையும் உற்சாகத்தைச் சொற்களைக் கொண்டு விளக்க முடியாது. ஆங்கிலத்தில் Euphoric எனலாம், பரவசம் என்ற வார்த்தை கூட இந்த உணர்வை அத்தனை சரியாக விளக்க வாய்ப்பில்லை. சிவஸ்ரீ இந்த பாடலை மூன்று வெவ்வேறு வடிவங்களில் பாடி இருக்கிறார். மூன்றும் தனித்துவமானவை. ஒரு காணொளி காட்சியோடு இடம்பெற்றிருக்கும், முக உணர்வுகளைக் குரல் ராகத்திற்கு ஏற்ப சீர்படுத்திப் பாடி இருப்பர். கேட்கும் பொது தன்னுணர்வின்றி மனம் லயிக்கும்.
ஒரு மாதத்திற்கு மேலாக இதே பாடலை பல சமயங்களில் கேட்டிருக்கிறேன். எப்போது கேட்டாலும் பாடலின் சில இடங்களில் முகம் மலரும். எத்தனை இறுக்கமான சூழலையும் மெலிதாக்கி விடும். இதைப் போலவே தமிழில் 15 பாடல்களைக் கண்டடைந்துவிட்டால், நெருக்கடிகளைக் கடந்து விடலாம்.
https://www.youtube.com/watch?v=5jSRcf1cBD4
ReplyDeleteஇங்கே இதே பாடல் நல்ல தரத்தில் உள்ளது.