காலரா காலத்தில் காதல் (இஸ்பானிசிலிருந்து தமிழுக்கு)
தேனாம்பேட்டையில் நடைபெற்ற பொறியாளர் மு. இராமநாதன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவுக்குச் சலபதி அவர்களின் அழைப்பின் பேரில் உடன் சென்றேன். பழ.அதியமான் துணைவியாருடன் வந்திருந்தார். என்னுடைய ஆதர்சங்களை ஓரிடத்தில் சந்திப்பதும் அவர்களுடன் நேரம் கழிப்பதும் இன்பமாகத்தான் இருந்தது. அதுவரை அறிந்திராத பலவற்றைக் குறித்துப் பேசினார்கள், கொஞ்சமாக விளங்கிக் கொண்டேன், நிறையத் தேட வேண்டும் என்று உணரச் செய்த தருணம் அது. பல எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும், இலக்கியவாதிகளையும் அந்த வரவேற்பு நிகழ்வில் பார்க்க முடிந்தது. தற்போது புதிய தலைமுறையில் பணிபுரியும் ஊடகர் சமஸ் அவர்களைக் கூட சந்தித்தேன். (நிழலுலகத்தை சேர்ந்த அந்த சம்பவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்ச சரியான தருணமல்ல இது.)
Gabo-வின் Love in the Time of Cholera நாவலை இஸ்பானிஷிலிருந்து இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கும் மா.அண்ணாதுரை அவர்களையும் இந்த நிகழ்வில் தான் முதல் முறையாகச் சந்தித்தேன். சலபதியும் சாரும், அதியமான் சாரும் அறிமுகம் செய்து வைத்தார்கள். அண்ணாதுரை என்ற பெயரும், சேலத்துக்காரர் என்பதும் அவர் மீது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆபிசர் போல் இருந்தார், ஆபிசர் தான் என்றார்கள். (நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் சமயத்தில் TVயில் அவ்வப்போது தோன்றி மறைவார்.)
இந்த நாவலை மொழியாக்கம் செய்வதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தை பற்றி கொஞ்சமாகப் பகிர்ந்து கொண்டார். Edith Grossman மொழி பெயர்ப்பில் பிழை உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டினார். அதிகம் பகிர்வார் என்ற ஆர்வத்தில் நானும் சில கேள்விகளைத் துருவி துருவி கேட்டுக்கொண்டிருந்தேன். பயனுள்ள பேச்சு.
கிட்டத்தட்ட பத்தாண்டுக் கால உழைப்பைக் கொண்டு உருவாகி இருக்கும் மொழியாக்கம். கேட்கும்போதே வியப்பாக இருந்தது. ஒரு படைப்புக்காக இத்தனை ஆண்டுகளைச் செலவழிக்கும் மனிதர்கள் இருக்கிறார்களா என்றும் தோன்றியது. ஆனால் பல பத்தாண்டுகளை தங்களுடைய ஆய்வுக்காக முதலீடு செய்த வ.உ.சி ஆய்வாளரையும், வைக்கம் போராட்ட வரலாறு நூலாசிரியரையும் நண்பராகக் கொண்ட ஒருவர் இப்படி இருப்பதில் வியப்பில்லை என்று சமாதானம் கூறிக்கொண்டே.
சென்ற தலைமுறையிடம் இருந்து என் தலைமுறையும் இனி வரும் தலைமுறையினரும் கற்றுக் கொள்ள வேண்டிய பண்பு என்றால், இந்த மெனக்கெடலைச் சொல்வேன். பற்றுறுதி கொண்ட ஒன்றிற்காக உழைக்க வேண்டும், தளராமல் மெனக்கெட வேண்டும். அப்படி தான் இந்த புத்தகமும் ஸ்பானிஷிலிருந்து தமிழுக்கு வந்துள்ளது. அண்ணாதுரைகள் தான் நமக்கு பல திறப்புக்களை தேடி தருகிறார்கள்.
புத்தகத்தின் அகத்தைப் பிரதிபலிக்கும் அருமையான அட்டை படமும் இந்நூலுக்கு வாய்த்திருக்கிறது. சில பக்கங்களைப் படித்தேன், சரளமான மொழி நடையும், தேர்ந்தெடுத்த சொற்களும் கூடி வந்துள்ளன. படிக்க வேண்டும், லயிக்க வேண்டும், பிறகு கொஞ்சம் எழுதிக் கொள்ளலாம்.
Comments
Post a Comment