One Hundred Years of Solitude

 




“MANY YEARS LATER, as he faced the firing squad, Colonel Aureliano Buendía was to remember that distant afternoon when his father took him to discover ice.”, ‘One  Hundred Years of Solitude’ நாவலை Gabo இப்படி தான் தொடங்குகிறார்.  


ஆக்கங்களை விட அழிவுகள் உலகை விழுங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முன்பைவிட அர்த்தம் தரவல்ல வரிகளாக இவை இருக்கின்றன. ஜாலம், ரசவாதம், மாய யதார்த்தம் என்று எத்தனையோ வர்ணனைகளால் இந்நாவல் புகழப்பட்டுள்ளது. ஆனால் 21ம் நூற்றாண்டில் இந்த நாவலை வாசிக்கும் எவருக்கும் இது நிம்மதி. ஏனென்றால் உலகம் தனிமையின் நூறாண்டுகளில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மதவாத சக்திகளின் கொடுங்கோன்மையும், உக்ரேனிலும், பாலஸ்தீனத்திலும் கொன்று குவிக்கப்படும் மனித உயிர்களின் வன்முறை காட்சிகளும் சூழப்பட்டுள்ள காலகட்டத்தில் இந்நூலில் வரும் வார்த்தைகள் பெரும் நிம்மதியை அளிக்கின்றன.



 ஒரு நகரத்தின் கதையாகவும், ஒரு குடும்பத்தின் கதையாகவும், பல தனி நபர்களின் ஆளுமையைக் கண் முன் நிகழ்த்தும் கதையாகவும், காதல்,காமம்,வஞ்சம், வெறுமை, பற்று, கர்வம், கோபம், போன்ற மனித உணர்வுகளின் மொத்த தொகுப்பை விவரிக்கும் படைப்பாகவும் இந்த நாவல் இருப்பதே அந்த நிம்மதிக்குக் காரணம். மனித உணர்வுகள் மதிப்பிழந்த 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 



பல முறை வாசிக்கத் தொடங்கி பாதியிலேயே நிறுத்தி இருக்கிறேன், Edith Grossman-ன் மொழியாக்கத்தில் Love in the Time of Cholera படித்தபோது எனக்கு இத்தகைய வாசிப்பு தடை ஏற்பட்டதே இல்லை. தனிப்பட்ட முறையில் Gregory Rabassa-வின் இம்மொழியாக்கம் அவ்வளவு சொகுசாக இல்லை. ஆனால் நேற்றைக்கு முன்தினம் இரவு 4 மணி வரை படித்தேன். Gabo இன்னும் 200 பக்கம் சேர்த்து எழுதி இருக்கலாமே என்று தோன்றியது.  4:30 மணிக்குச் சிகப்பு பேனாவால் அடிக்கோடிட்ட நாவலில் கடைசி பக்கத்தை புகைப்படமெடுத்து Instagram-ல் பகிர்ந்துவிட்டு, தோழி ஒருத்தருக்கு  அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்ற Message-ஐ அனுப்பிவிட்டுத் தூங்கச்சென்றேன். கனவுகள் ஏதுமற்று நிறைவான உறக்கம் வாய்த்தது. 




பனிக்கட்டி தொடங்கி ரயில் வண்டி வரை, புயேந்தியா குடும்பத்தின் ஒரு நூற்றாண்டு தனிமை பல புதுமைகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. பெரும் போர், பிறகு கொஞ்சம் அமைதி, 5 ஆண்டுகள் தொடர் மழை என இந்நாவலின் மனிதர்களைப் போலவே விசித்திரங்கள் நிறைந்த சூழலையும் கொண்டிருக்கிறது. கற்பனையின் உச்சமாக விளங்கும் அப்படியான விசித்திரங்கள் தான் இந்நாவலின் பலம். 




எல்லா விதமான கீழ்மைகளையும் கொண்ட மாந்தர்களும் இந்நாவலில் இருக்கிறார்கள், அவர்களின் பலவீனங்கள் எல்லாம் கூச்சங்களுக்கு அப்பாற்பட்டுச் சொல் வடிவம் பெற்றுள்ளன. சாமானியரின் இந்த கீழ்மைகள், பலகீனங்கள் தான் இந்த நாவலுக்கு காவியத்தன்மையை அளிக்கிறது .  அதீத நம்பிக்கையை இந்நாவலின் பெரும்பாலான பாத்திரங்கள் கொண்டிருக்கிறார்கள், பல தருணத்தில் அவை பைத்தியக்கார தனமாகவும் தோன்றும். அவை அனைத்தும்தான் சாதாரணத்தை மீறும் தன்மையை இந்நாவலுக்கு அளித்துள்ளன.  


 நாவலில் திரும்பத் திரும்ப வரும் தங்க மீன்கள், சின்ன விஷயங்கள் மீது மனிதர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் குறிக்கிறது. ஊரைக் கடந்து செல்லும் Amaranta Ursulaகூட மீண்டும் அந்த சிற்றூரில் சிக்கித் தவிக்கத் தான் விருப்பப்படுகிறார். அந்த சிற்றூரில் தான் மாய்கிறார். Encyclopediaவே உலகம் என்று இருந்த Aurelianoவால் கூட சிறுமைகளில் தான் உழலப் பிடித்திருக்கிறது. சிறுமை அழகு மட்டுமல்ல, அரிதும் கூட. 


 மிகுதியைத் தேடிக் குவிக்கும் காலத்தில் சிறுமை அபூர்வம் தானே. தனிமையின் நூறு ஆண்டுக்கு என விதிக்கப்பட்ட வம்சங்கள் அபூர்வமானவை, அவர்களுக்குப் பூமியில் இரண்டாம் வாய்ப்பு அவசியமே இல்லை. சிறுமை அரிது! 



“மனிதகுலமனைத்தும் படிக்க வேண்டிய நூல்!”  என்ற இலக்கிய உலகின் உச்ச முழக்கத்தை இந்நாவலுக்காக  வழிமொழிகிறேன்.  



Comments