மைத்ரி


  

மலைகள் என்றாலே தவிர்க்க முடியாமல் நீட்ச்சே நினைவுக்கு வந்துவிடுவார்.  அவரது தத்துவத்தில் மலை உச்சியும், குன்றுகளும், தனிமையும், தனிமை அளிக்கும் தன்முனைப்பும், அதன் வழி உருவாகும் உயர்நிலையும் அப்பட்டமாக வெளிப்படும். மனிதனிடம் கடவுளை மிஞ்சிய ஆற்றல் இருப்பதாக நீட்ச்சே கூறினார். Superhuman என்ற லட்சிய மனிதனை அவரது தத்துவம் முன்னிலைப்படுத்தியது. மென்மைகளை அவர் முழுதாக வெறுத்தார். மலை உச்சி ஒரு குறியீடாக அவரது தத்துவம் முழுக்க நிலைத்து நின்றது. 



அஜீதனின் முதல் நாவலான ‘மைத்ரி’ நூலைச் சமீபத்தில் வாசித்தேன். நீட்ச்சே முன்னிறுத்திய லட்சிய மனிதனுக்கும் முற்றிலும் நேரெதிர் சுபாவங்களைக் கொண்ட மனிதனாக இந்த நூலின்  நாயகன் ஹரன் இருக்கிறான். மைத்ரி மீதான காதல் உணர்வு அவனது தனிமையைச் சிதைகிறது. புதிதாக மலையைத் தரிசிக்கும் ஒருவனுக்கும் ஏற்படும் வியப்பும் ஈர்ப்பும், ஹரனுக்கு மைத்திரியின் மீது ஏற்படுகிறது. மூன்று நாள் காதலாக அது நீள்ந்து நிறைகிறது. 


உத்தராகண்ட் மாநிலத்திற்கு பயணிக்கும் ஹரனுக்கு பேருந்தில் சந்திக்கும் மைத்ரி மீது ஏற்பாடு யதார்த்தமான காதல் தான் கதையின் ஆரம்பப் புள்ளி. அவர்கள் குறுகிய காலத்தில் மேற்கொள்ளும் நெடும்பயணம், இயற்கையோடு இயைந்து  இருவருக்கும் இடையே நிகழும் காதல், பித்து, காமம் போன்ற அக புற உணர்வுகளோடு  இணைந்த விவரிப்பு இந்நூல். மலை வாழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், உணவு உட்பட எல்லாவிதமான பழக்க வழக்கங்களையும் இந்நூல் மூலம் அறியமுடிகிறது. 


பல பக்கங்களில் கவிதைக்கு இணையாகப் பரவசம் மிகுந்த இலக்கிய விவரிப்பு வந்து செல்கிறது. பித்து நிறைந்த காதலின் உணர்வுகளை மிக நேர்த்தியாக உவமை படுத்தியுள்ளார். ஆனால் ஒரு உச்சத்தை அடைந்த பிறகு இந்த உணர்வின் மீதான மேற்படி விவரிப்பு சலிப்பைத் தருகிறது. ஒரு கட்டத்தில் சினிமாவுக்காக எழுதப்பட்ட கதையைப் போல் தோன்றச் செய்கிறது. இனிப்பான உரையாடல்கள் இந்த தன்மையை மேலும் கூட்டவே செய்கின்றன. 


நட்பு-பரிவு-காதல்-காமம்-பிரிவு-துயரம்-வெறுமை என காதலின் பலபரிமாணம் கதையை மெல்லமாக நகர்த்தி செல்கிறது. பல்வேறு பாத்திரங்கள் வந்து சென்றாலும், இருவருக்கு இடையிலான காதலே முதன்மை பெறுகிறது. ஹரனின் முதல் காதல் தோல்வியும் கதையின் இடையே நினைவு கூறப்படுகிறது. அப்படியான முதல் காதல் தோல்வியின் சுவடு மைத்ரி உடனான உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 


மலை ஆடுகள், மரங்கள், பசுமையான வெளி, மனித பெயர் கொண்ட கோவேறு கழுதைகள்,  என இயற்கையான உயிர்ச் சூழல் இந்நாவலுக்கு சூழலியல் தன்மையை அளிக்கிறது. ஜெயமோகனின் காடு நாவலை என்னால் ஒரு கட்டத்திற்கு மேல் படிக்க முடியவில்லை, சலிப்பாக இருந்தது, இந்த நாவலிலும் அப்படியான சலிப்பை கடக்க உதவியது காமம் தான். இருவருக்கும் இடையே காமம் நிகழும் தருணம் கடைசி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது, இந்த நாவலை நகர்த்தும் கருவியும் இது தான்.


மற்றபடி புகழுரையில் குறிப்பிடப்படுவது மாதிரியெல்லாம், தத்துவத்தின் சுவடு இந்நாவலில் பெரிதாகத்  தென்படவே இல்லை. புலன் வழி அனுபவங்களை கடத்துவதில் நூல் ஆசிரியர் வெற்றிகண்டதாக வேண்டுமானால் சொல்லலாம்.  



Comments

Popular Posts